Primary tabs
-
1.1 சூளாமணி
சூளாமணி - தோலாமொழித் தேவர் இயற்றியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (கி.பி. 925-950). சமண சமயத்தைச் சார்ந்த நூல். காப்பியத் தலைமாந்தர்களில் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்திச்சருக்கம். 59) என்று ஆசிரியர் பெருமைப்படுத்துகிறார். இதன்வழி சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராகவே இருக்கின்றது என்பது தெரிகிறது. இக்காப்பியத்தில், இரத்தின பல்லவ நகரினைச் சூளாமணியின் ஒளிர்ந்து (முத்திச்சருக்கம் 284) என நகரின் பெருமையையும், இந்திர சஞ்சய அரசனை, மஞ்சுசூழ் மலைக்கோர் சூளாமணி (முத்தி. 329) என அரசின் பெருமையையும், குன்றெடுத்த திவிட்டன் முடிமேல் சூளாமணி முளைத்த சோதி (முத்தி. 1519) எனக் காப்பியத் தலைவனின் பெருமையையும் சுட்டியிருப்பதால், இந்நூலாசிரியர் காப்பியத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளமை நன்கு புலனாகின்றது.
- ஊழ்வினைக் கோட்பாடு
- அரங்கேற்றம்
சூளாமணியின் ஆசிரியர் ஊழ்வினைக் கோட்பாட்டை விளக்கிக் கூறுகிறார். ஊழ்வினையை நீக்க இரத்தினத் திரயம் என்னும் கோட்பாடு, பல உலகம் பற்றிய உண்மை, குலம், சமய நம்பிக்கை ஆகியவற்றைச் சமண சமய உணர்வோடு எடுத்துரைப்பது இக்காப்பியத்தின் நோக்கமாக உள்ளது.
இக்காப்பியம், சேந்தன் எனும் மன்னன் அவையில் அரங்கேறியுள்ளது. இது பாயிரத்தின்மூலம் அறியும் செய்தி.
சூளாமணி காப்பியம் 12 சருக்கங்களில், 2131 விருத்தப்பாக்களால் எழுதப்பட்டுள்ளது. சருக்கங்கள் வருமாறு:
பாயிரம்
(1)நாட்டுச் சருக்கம்(2)நகரச் சருக்கம்(3)குமார காலச் சருக்கம்(4)இரதநூபுரச் சருக்கம்(5)மந்திரசாலைச் சருக்கம்(6)தூதுவிடு சருக்கம்(7)சீயவதைச் சருக்கம்(8)கல்யாணச் சருக்கம்(9)அரசியற் சருக்கம்(10)சுயம்வரச் சருக்கம்(11)துறவுச் சருக்கம்(12)முத்திச் சருக்கம்ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, அரசியல் அறம்,தூது நெறி, வேனில் விழா, அமைச்சரவை, சுயம்வரம், தெய்வப்போர், மாயப்போர் முதலியன கொண்டு இயன்ற வரை தமிழ் மரபுக்கேற்ப இக்காப்பியத்தை இயற்றியுள்ளார், ஆசிரியர்.
சூளாமணிக்கு முதல் நூலானது செஞ்சொற்புராணம் என்பதைப் பாயிரத்தின் மூலம் உணரலாம். வடமொழியில் உள்ள ஸ்ரீபுராணத்தில் வரும் 11-ஆம் தீர்த்தங்கரர் புராணத்தில் சூளாமணிக் கதை கூறப்படுகிறது. வடநாட்டு வேந்தர்களான விசயனும், திவிட்டனும் பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் ஆகியோருடன் ஒப்பிட்டு எண்ணுதற்குரியர். ஸ்ரீபுராணத்தைத் தவிர, மற்றொரு சமணக் காப்பியமான மகாபுராணத்திலும் சூளாமணிக் கதைப் பொருள் வருகின்றது.
நாற்பொருள் கூறுதல், ஆருகத (சமண) சமயத்தில் காணும் அரியஉண்மைகளை விளக்கல், வாழ்வில் பின்பற்றற்குரிய வரலாறுகளையும் நீதிகளையும் எடுத்துரைத்தல் ஆகியவை பற்றிப் பேசுவதால், சமணர்கள் மேலான நூலாக இதனைப் போற்றி வந்தனர்.
சூளாமணி ஆசிரியர் தோலாமொழித் தேவர் தான் என்பது பற்றித் தெளிவாக எதுவுமே தெரியவில்லை. தோலாமொழித் தேவர் எனும் பெயருக்கு வெல்லும் சொல்வல்லார் என்பது பொருள்.
தோலாமொழி என்று சில தனிச் செய்யுள்களில் இவர் பெயர் வருகிறது; ஆனாலும் இயற்பெயர் தெரியவரவில்லை.
தேவர் என்ற ஒட்டே சமணர் என்ற குறிப்பைத் தருகிறது என்பதால், இவர் சமணர் என்பர் சிலர். வேறுமொழிகளில் இப்பெயர் கொண்ட காப்பியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமணர்கள் சீவகசிந்தாமணிக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றுவது சூளாமணியைத்தான்.
சிரவணபெலகோலாவில் காணும் கல்வெட்டில், காப்பியங்களுக்கெல்லாம் சூடாமணியாக விளங்கும் சூடாமணி, என்ற காவியத்தை இயற்றியவர் ஸ்ரீவர்த்த தேவர், என்று குறிக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்ரீவர்த்த தேவரே தோலாமொழித் தேவர் என்றும் குறிப்பிடுகிறார்கள் சிலர்.
தருமதீர்த்தன் என்பவரின் மாணவனாக இவர் இருந்திருக்கிறார் என்றும், சிலர் தொண்டை நாட்டுக்குரியவர் என்றும் சிலர் பாண்டிய நாட்டுக்குரியவர் என்றும் கருதுகின்றனர்.
சூளாமணியில் தோலா நாவில் சச்சுதன் என்றும் ஆர்க்கும் தோலாதாய் என்றும் வழங்கியமையால், சூளாமணி ஆசிரியர் அவர் இயற்றிய தொடரால் பெயரிடப்பெற்றார் எனக் கருதுவோரும் உளர்.