Primary tabs
-
1.5 சூளாமணியும் சுவடியியலும்
சுவலனசடி மன்னன், தன் மகளைப் பயாபதி மகனுக்குத் தர விருப்பம் தெரிவித்து ஓர் ஓலை அனுப்புகிறான். இதுபற்றிய இரு விருத்தங்கள் சுவடி இயலுக்கு வித்திடுவதாக அமைத்துள்ளார், ஆசிரியர்.
ஓலைக் கடிதத்தில் அரக்கு இலச்சினை (சீல்) வைக்கப்பட்ட செய்தியை ஒரு பாடலில் அழகுபட எடுத்துச் சொல்கிறார். (6:82)
இரண்டாவதாக, சுவடி பற்றிய கருத்து ஆராய்ந்து பார்ப்பதற்கு வழி அமைத்து விடுவதுபோல் உள்ளது.
நிகரிகந் தழகி தாகி நெரிவடுப்
படாத வேழப்
புகர் முகப் பொறிய தாய
புகழ்ந்த சொல் லகத்துப் போகா
மகரவாய் மணிக்கட் செப்பின்
மசிகலந்து எழுதப்பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப்
பயின்றுபின் வாசிக்கின்றான் (6:83)எனும் இப்பாடலில், இரண்டாமடியைப் பார்க்கும்பொழுது, யானையின் முகப்புள்ளிகளைப் போன்று குண்டுகுண்டான எழுத்துகள் என ஒரு பொருளும், யானை முகத்தை முத்திரையாக இடப்பட்ட ஓலை என இன்னொரு பொருளும் கொண்டுள்ளது.
அரசவையில், அரசன் முன் ஓலையைப் படிப்பவர்கள் எப்படிப் படிப்பார்கள்? முதலில், ஓலை வாசகத்தை அவர்கள் மனத்திற்குள் பிடித்துக் கொள்வார்களாம்; பிறகு பாடங்களை உறுதி செய்துகொண்ட பிறகே அரசனுக்குச் சத்தம் போட்டுப் படித்துக் காட்டுவார்களாம்!
இவ்வாறு சூளாமணியில் ஓலைச் சுவடி பற்றிய விளக்கம் அமைந்துள்ளது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I