Primary tabs
-
1.2 கதைச் சுருக்கம்
இந்தியாவில், சுரமை நாடு இருந்தது; இதன் தலைநகரம் போதனமாநகரம். பயாபதி என்பவன் இந்நகரை ஆண்டு வந்தான். இந்தப் பயாபதிக்கு மனைவியர் இருவர். மிகாபதி, மூத்தவள்; சசி என்பவள் இளைய மனைவி. இவ்விருவரும் முறையே விசயன், திவிட்டன் என்னும் இரு புதல்வர்களைப் பெற்றெடுக்கின்றனர். விசயன் சிவப்பாகவும் திவிட்டன் கறுப்பாகவும் இருப்பர்.
ஒரு நாள் பயாபதி கனவொன்று கண்டான். விடிந்ததும், நிமித்திகன் ஒருவன் வந்து, “நீங்கள் கனவு ஒன்று கண்டீர்கள் அல்லவா?” என்று கூறிக்கொண்டே அதன் பலன்களைக் கூறினான்; ”வடநாட்டில், வெள்ளிமலையை அடுத்துள்ள வித்தியாதரர் நாட்டுமன்னன் சுவலனசடி; இவனது மனைவி, வாயுவேகை என்பவள். இவ்விருவருக்கும் பிறந்த மக்கள் இருவர்; மகன் அருக்ககீர்த்தி; மகள் சுயம்பிரபை. தன் மகளை இங்கு அழைத்து வந்து, திவிட்டனுக்குத் திருமணம் செய்து தருவான். இன்னும் ஏழு நாட்கள் போனதும், அம்மன்னனின் ஓலை வரும்!” என்று சொன்னான்.
சுவலனசடி மன்னன், ஒருநாள் தோட்டத்தில் இருந்த சமணக் கோயிலுக்குச் சென்று வணங்கிக் கொண்டிருக்கும்போது, இரு சாரணர்கள் (வான்வழியே நடப்பவர்கள்) அத்தோட்டத்து வாசலில் சமணத் தத்துவத்தை எடுத்துரைத்தனர். அவற்றைக் கேட்ட சுயம்பிரபை, ஒரு நோன்பை மேற்கொண்டாள்.
சுயம்பிரபை மணம் குறித்து சதவிந்து எனும் நிமித்திகன் வீட்டிற்கே சென்று நாள்பார்த்தான் மன்னன். அந்த நிமித்திகன், ‘திவிட்டனே சுயம்பிரபைக்கு ஏற்ற மணவாளன். இன்னும் ஒரு திங்களில், ஒரு சிங்கத்தின் வாயைப் பிளந்து தன் வீரத்தை அவன் உலகுக்கு உணர்த்துவான்’! என்றான்.
இதைக் கேட்ட சுவலனசடி மன்னன், திவிட்டன் தந்தை பயாபதியிடம் மருசி என்ற தூதுவனை அனுப்பினான். ஓலையைப் படித்த பயாபதியும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தான். பிறகு சுவலனசடிமன்னன், சிங்கத்தின் வாயைப் பிளக்கும் செய்கையை அறிய, ஒற்றர்களை அனுப்பி வைத்தான்.
வித்தியாதரர் வாழும் அதே பகுதியில், வடசேடி எனும் பகுதியை அச்சுவகண்டன் என்பவன் ஆண்டுவந்தான். இவன் மிகவும் கர்வமுள்ளவன்; கொடுங்கோலாட்சியை நடத்தி வருபவன். இவனிடம் சதவிந்து எனும் நிமித்திகன், “நீ இப்படிக் கர்வமுள்ளவனாக இராதே! உனக்கு ஒரு பகைவன் பிறந்து வளர்கின்றான்! அவன் எளிதானவன் அல்ல!” என்றான். உடனே, பயாபதியிடம் வரிவசூல் செய்து வரும்படி நான்கு தூதர்களை அனுப்பினான் அச்சுவகண்டன்.
திவிட்டன், திறை கொடுக்காமல், கண்டனை ஏசி, தூதர்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டான். தூதர்கள் சொன்னதைக் கேட்ட கண்டனின் அமைச்சனான அரிமஞ்சு என்பவன், அரிகேது எனும் மாயவித்தைக் காரனை அழைத்து, ‘நீ சிங்க உருவம் கொண்டு, திவிட்டனையும் அந்த நாட்டையும் அழித்து வா!’ என அனுப்பினான். அந்தச் சிங்கம், அப்படியே சென்று சுரமை நாட்டில் பேரழிவு ஏற்படுத்தியது. திவிட்டன் அந்த மாயச் சிங்கத்தை விரட்டிப் பின் தொடர்ந்தான்; உண்மையான சிங்கம் இருக்கும் ஒரு குகை வரைக்கும் சென்ற அந்த மாயச்சிங்கம் பிறகு மறைந்துவிட்டது. திவிட்டன் குகையுள்ளே இருந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொன்றான். இந்தச் சம்பவங்களை ஒற்றர் மூலம் அறிந்த சுவலனசடி மன்னன், சுயம்பிரபையை மணத்துக்கு ஆயத்தப்படுத்தினான். நாற்படை சூழ, போதன நகரத்திற்குச் சென்றான், சுயம்பிரபை திவிட்டனைத் தன் விமானத்தில் இருந்தபடியே, கண்டு, காதல் கொண்டாள்.
மாதவசேனை என்பாள், சுயம்பிரபை உருவத்தை வரைந்து, அதைத் திவிட்டனிடம் காட்டினாள்; ஓவியத்தில் மயங்கிய திவிட்டன், சுயம்பிரபையை அடைய விரும்பினான். இவ்விருவர் மணமும் மறை விதிப்படி நடந்தது.
சிலநாட்களுக்குப்பின், சுவலனசடி மன்னன் பிரபையைத் திவிட்டனுக்கு மணம் செய்வித்ததை அறிந்த அச்சுவகண்டன், சுவலனசடி மன்னன் மீது போருக்குப் புறப்பட்டான். பயாபதி முதலியோருடன் சேர்ந்து சுவலனசடி மன்னனும் போரிட முடிவு செய்தான். திவிட்டனுக்கும் வித்தியாதர வேந்தர்களோடு போரிடுவதற்குரிய மந்திரங்களைக் கற்பித்தான். இச்சமயத்தில் அச்சுவகண்டன் தூதுவன் வந்து, “அரசர்களே! கண்டனுக்குச் சுயம்பிரபையை வழங்குவீர்களா? அல்லது திவிட்டன் உயிரை அவனுக்குத் திறையாகத் தருவீர்களா?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட திவிட்டனின் கண்களில் பொறி பறந்தது! வானில், “திவிட்டனே வெற்றி பெறுவான்!” என்ற ஒலி கேட்டது. பயாபதி படையும், கண்டன் படையும் மோதின! போரில் கண்டனும், கண்டனின் தம்பியரும் மடிந்தனர். கண்டனின் மனைவி, போர்க்களத்தில், கண்டனின் உடல்மீது விழுந்து உயிர்விட்டாள்! பின்னர், திவிட்டன், கோடிக்குன்றம் எனும் மலையைக் கையால் அகழ்ந்து தூக்கினான்; அந்நேரத்தில், இவன் வாசுதேவனே என்று பலரும் வாழ்த்தினர்.
சில நாட்கள் ஆனபின்பு, சுயம்பிரபைக்கு, விசயன் என்றொரு மகன் பிறந்தான்; பிறகு சோதிமாலை என்றொரு மகளும் பிறந்தாள்.
சோதிமாலைக்குச் சுயம்வரம்; சோதிமாலை மண்டபத்தில் பலரையும் பார்த்தபின், தன் மாமன் அருக்க கீர்த்தியின் மகனான அமிர்தசேனனுக்கு மாலை சூட்டினாள்.
பிறகு அருக்ககீர்த்தி, தன் மகள் சுதாரை என்பவளுக்குச் சுயம்வரம் நடத்தினான். சுதாரை, திவிட்டன் மகன் விசயனுக்கு மாலைசூட்டினாள்; திருமணம் நடந்தது.
ஒரு நாள், பயாபதி மன்னனுக்குச் சில சிந்தனைகள் தோன்றின. “முன்செய்த தவத்தால் தான் இந்தச் சிறப்பு எனக்குக் கிடைத்தது. ஆதலால், தவத்தை மறந்து நாம் இருத்தல் கூடாதல்லவா? இன்னும் தவம் செய்தால் வீடுபேறு கிட்டுமே” என நினைத்தான்.
தன்மக்களை அழைத்துப் பயாபதி, “அருள் இல்லாதார்க்கு அவ்வுலகு இல்லை. கல்வி இலார்க்கு நுண்ணறிவு இல்லை! பொருள் நிலை இல்லாதது! நல்லறங்கள் செய்யுங்கள்! உங்களுக்கு வயது ஆனதும், உங்கள் குழந்தைகளிடம் ஆட்சியை விட்டுவிட்டுத் தவம் செய்யுங்கள்”! என்று சொல்லியபின்பு தானும் மனைவியர் இருவருமாகத் தவம் செய்யப் புறப்பட்டனர். இறுதியில் பயாபதி முதலியோர் பேரின்பம் பெற்றனர். திவிட்டன் அருகன் அடியை மனத்திருத்திப் பல்லாண்டுக் காலம் ஆண்டான் எனக் காப்பியம் முடிகிறது.