தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.4 காப்பியச் சிறப்பு

  • 1.4 காப்பியச் சிறப்பு

    ஆசிரியர் தமிழ் இலக்கிய ஈடுபாட்டை வெளிப்படுத்தியதோடு சிறந்த இலக்கிய வளத்தோடும் இக்காப்பியத்தைப் படைத்துள்ளார்.

    1.4.1 இலக்கிய வளம்

    தோலாமொழித்தேவர் பண்டைய தமிழ் இலக்கியங்களை நன்கு பயின்றவர் என்பதைத் தமது காப்பியத்தில் அவற்றைப் பயன்படுத்தியிருப்பதைக் கொண்டு அறியமுடிகின்றது.

    சீவகசிந்தாமணியிலே, மதிலைப் புனைந்துரைத்த பின்னர்ப் பரத்தையர்கள் வாழும் தெருக்களைக் கூறிக் கடைகளைப் புகழத் தொடங்குகிறார் திருத்தக்கதேவர். அதுபோலவே சூளாமணியிலும் மதிலைப் புனைந்துரைத்த பின்னும், கடைகளைப் புகழ்வதற்கு முன்னும், வரும் பாடல்கள் பரத்தையரையே குறிக்கின்றன.

    சூளாமணியின் முதல் 50 செய்யுட்களின் சொல், தொடர், கருத்து ஆகியவை சிந்தாமணிக் காப்பியத்தோடு இணைத்துப் பார்க்கக் கூடியனவாக அமைந்துள்ளன.

    திருக்குறளின் சொற்களைப் பல இடங்களில் கையாண்டிருப்பதைக் காணலாம்.

    • மானுடர் வாழ்வு
    • யானை விரட்ட அஞ்சி ஓடிய ஒரு மனிதன் ஆழ்கிணற்றில் விழும்போது அக்கிணற்றில் பாம்புகள் இருப்பதைக் கண்டான்; ஒரு கொடியைப் பற்றித் தொங்கினான். மேலே மதயானை, கீழே விஷநாகம்; இரண்டுக்கும் இடையே அஞ்சிச் சாகும் சூழ்நிலையில் இருக்கும் அந்த மனிதன் மேலே அண்ணாந்து பார்க்கிறான். அவன் வாயில் ஒரு தேன்துளி விழுகிறது. மனிதன் யானையாலோ, அல்லது நாகத்தாலோ இறப்பது உறுதியென்ற உண்மை அறிந்த நிலையிலும் அந்தத் தேன் துளியைச் சுவைத்து இன்புறும் தன்மையதுவே மானுடர் வாழ்வு. இதனை அறிந்து நடப்பாயாக! என்று உலக வாழ்வின் இயல்பைக் கூறுகின்றது இப்பாடல்.

      ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி
      நானவிர் பற்றுபு நாலும் ஒருவன்ஓர்
      தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
      மானுடர் இன்பம்;மதித்தனை கொள்நீ  
      (1989)

      (அரவு = பாம்பு; நாலும் = தொங்கும்; திறந்தது = தன்மையது)

      மனிதப்பிறவி சிற்றின்பத்தை நாடுவது மிகமிக இழிந்தது என்பதைச் சுட்டும் வகையில் இக்கதையினை உவமை வாயிலாகத் தருவதை உணரமுடிகிறது.

      1.4.2 இயற்கை வருணனை

      காப்பியத்தின் தொடக்கத்திலேயே இயற்கை வருணனை செய்யப்பட்டுள்ளது. கயல், அன்னம், கிளி ஆகியவற்றில் தொடங்கி நானிலங்களில் காணும் மலர், பறவை, விலங்குகள் பற்றி வருணிக்கப்பட்டுள்ளன.

      வசந்த காலத்தின் வருகையையும் அதன் அழகையும் பற்றிப் புதிய முறையில் கூறப்பட்டுள்ளது. இயற்கையே மன்னனுக்கு வரவேற்பு நல்குவதாகப் பாடுகிறார். (169-172)

      திவிட்டன் சிங்கத்தைக் கொன்ற துன்பத்தை மறைப்பதற்காகவே திவிட்டனுக்கு, விசயனின் தாழ்வரை இயற்கை அழகைக் காட்டி உணர்த்துகிறார். (728-785)

      கல்யாணச் சருக்கத்தில் மாலை முதல் இரவு, வைகறைத் தோற்றம் வரை பல்வேறு சிறுபொழுதுக் கோலங்களை மிகவும் நுணுக்கமாக்கிக் காட்டுகிறார் ஆசிரியர். (1028-1034, 1056-1062)

      இவ்வாறு கதைச் சூழலுக்கு ஏற்ப, இயற்கை அழகு தோலாமொழித் தேவரால் படைக்கப்பட்டுள்ளது.

      1.4.3 அணிநலன்கள்

      காப்பியங்களின் அழகை மேலும் உயர்த்திக் காட்டவே அணிநலன்களைக் கையாள்வர். அவ்வகையில், உவமை அணியே சிறப்பு மிக்கது.

      மணிகளை உயர்ந்த மக்களைக் குறிக்கவும் (230, 417) ஈயத்தை இழிந்த மக்களைக் குறிப்பிடவும், செவியில் உருக்கி வார்த்த செம்பு துன்பமூட்டும் நிலையைக் குறிக்கவும் (230, 1424) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கவை.

      அழகற்று விளங்கும் தாழைக்குப் பேயும் (433) குறுமகனுக்குப் பூதமும் (679) இழிநிலை மாந்தர்க்குக் கிருமியும் (1199) உயிர்களின் துன்பம் கண்டு அதனை நீக்கவும் உதவாமல் வாழும் இழிந்த செல்வ வாழ்வுக்கு அலி பெற்ற வாழ்வும் (775) உவமைகளாகக் கையாண்டுள்ளார் ஆசிரியர்.

      காலத்தின் பகுதியாம் பருவங்களை உவமையாக்கியுள்ள அழகு சூளாமணிக் காப்பியத்தின் தனிச் சிறப்பாகும். தூதுவிடு சருக்கத்தில் பொன்னிற விஞ்சையனுக்கு வேனிற் பருவமும், வெண்ணிற விசயனுக்குக் கூதிர்ப்பருவமும் கருநிறத் திவிட்டனுக்குக் கார்ப்பருவமும் ஒளிபெற்ற நிலைக்கு உவமைகளாகி நிற்பதைக் காப்பியத்தில் அறிய முடிகிறது.

      குணமிலார் செல்வம் பயனற்றுக் கிடப்பதைக் கண்டு மனம் பதைத்த ஆசிரியர், மணமற்ற கோங்கம் பூத்துக் குலுங்கும் காட்சியோடு ஒப்பிடுகின்றார் (161).

      உருவகத்தைப் படம் பிடித்துக் காட்டும் ஆசிரியர், மன்னனைக் குணக்குன்றாகவும் (105) மணிகளால் அமைத்த விமானத்தை மரகதமணித் தளிர்கள் வளர்ந்து வயிரக்கொழுந்து தோன்றி முத்துநகை அரும்பிப் பொன் பூத்துப் பொலியும் மரமாகவும் (857) அமைத்துள்ளார்.

      மனிதன் படைத்த ஆக்கப் பொருள்களை உருவகம் செய்யும்போது நுகம் ஆட்சி ஆகிறது (245), அமைச்சர் கண்ணாகவும், மக்கள் கால்களாகவும், தோழர் தோள்களாகவும் ஒற்றர் செவியாகவும், மெய்யறிவு நூலாகவும் கொண்ட ஒரு யந்திரமாக அரசனைக் காட்டும் (505) அழகு காப்பியத்தின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

    • பா அமைப்பு
    • சூளாமணிக் காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்கள் இருசீர் முதல் எண்சீர் வரை அமைந்துள்ளன.

      இந்நூலில் உள்ள சிறந்த பாடல்களில் ஒன்றை இப்போது காணலாம்.

      வெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியின்
      வள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையன்
      அள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்
      கள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்!
      (5 : 126)

      சுவலனசடி மன்னன் ஒரு சோதிடன் வீட்டுக்கு நடந்து போகிறான்.
      அதை வைத்து எவ்வாறு எதுகையை அமைத்துள்ளார் பாருங்கள்!.

      1.4.4 மொழி நடை

      வடமொழி நூலிலிருந்து இக்காப்பியத்தை ஏற்றமையால் நடையிலும் அதன் நிழலைக் காணமுடிகிறது.

      சினந்தணிந்தவன் என அமையும் தொடரை அவிந்தன சினத்தன் (529) என்று, வடமொழி நடை அமையப் பாடியுள்ளார். மேலும், காப்பிய நடை தெளிவாகவும் இனிமையாகவும் அமைய, காப்பியத்தின் இடையே பல புதிய தொடராக்கங்களைப் படைத்துள்ளார்.

      சான்றாக,

      காதற்பாவை - தோழி (5)
      தாழ்வர் - தாழ்ந்த மலைச்சாரல் - (727, 741, 761)
      தேங்கனிக் குழவித் தீநீர் - இளநீர் (921)
      பாசிலைத் தழை - வெற்றிலை (921)
      புகழ்ச்சி நூல் - திருக்குறள் (628)

      இவ்வாறு தமிழ்நடைக்குப் புதுமையான சொற்களைத் தாமே படைத்துக் கொள்வதைக் காப்பியத்தில் பல இடங்களில் காணமுடிகிறது.

      வடமொழிக் காப்பியத்தில் மாந்தர் தம் பெயர்களும் இடப் பெயர்களும் அம்மொழியிலமைந்திருத்தல் இயற்கையே. அதனைத் தமிழில் காப்பியமாகப் படைக்கும்போது, அப்பெயர்களைத் தமிழின் அமைப்புக்கேற்ப மாற்றியுள்ளார் தோலாமொழித் தேவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-10-2018 15:23:51(இந்திய நேரம்)