Primary tabs
-
5.0 பாட முன்னுரை
கவிஞன் சமுதாயத்தில் ஒருவன். அவனுடைய கவிதைகளும் சமுதாயத்தைப் பற்றியதாகத்தான் இருத்தல் வேண்டும். கவிதையின் ஒவ்வொரு அடியும் மக்களின் வாழ்வை எதிரொலிப்பதாகவே அமைகிறது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தோன்றிய கவிஞர்கள் எல்லாரும் மக்கள் வாழ்வுப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தனர்.
தற்காலச் சூழலுக்கு ஏற்ப, பொதுமக்கள் விரும்பி ஏற்கும் வண்ணம் எளிய நடையில் இனிய சந்தங்களால் காவியம் படைக்க முனைந்தனர். அவர்களில் முன்னோடியாகப் பாரதியார், நாட்டு விடுதலையை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலி சபதம் படைத்தார். அவரைத் தொடர்ந்து பாரதிதாசன், சஞ்சீவிபர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி ஆகியன படைத்தார். பாரதிதாசன் வழியில் உருவான இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களாக வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன், சுரதா போன்றோரைக் குறிப்பிடலாம்.
புதுவையில் தோன்றிய கவிஞர் வாணிதாசன் அறிவூட்டும் இலக்கியங்களைப் படைத்தார். தன் ஊரைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் வாழ்வைக் கண்ணாரக் கண்டு எழுதினார்.
சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்
நாடு திருந்தும் என்பது என்துணிவு
அத்துணிவால் தோன்றியவளே தமிழச்சிஎன்று தமிழச்சி காவியம் தோன்றிய காரணத்தைச் சொல்கிறார். அதுபோலவே, இயற்கையின் அழகை வெளிப்படுத்தவும் செந்தமிழின் செழிப்பை உணர்த்தவுமே கொடிமுல்லை படைக்கப்பட்டது.
மதம் தான் தீண்டாமைக்குக் காரணமாகின்றது என்று சொல்லி, பகுத்தறிவுச் சிந்தனைகளாலேயே அதனை ஒழிக்க முடியும் என்பதை இவ்விரு காவியங்களும் சித்திரிக்கின்றன.
கொடிமுல்லைக் காவியம் பகுத்தறிவுப் பார்வையோடு தான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு காவியங்களிலும் உவமை, கற்பனை எனும் உத்திகளை நயம்படக் கையாண்டுள்ளார் கவிஞர்.
இரண்டு காவியங்களிலும் எளிமையான நடையினைக் கையாண்டுள்ளார். பொருள் புரியும் வார்த்தைகள், வினாவிடை முயற்சிகள், நகைச்சுவையுடன் சாடுவது, சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் போன்ற நடையமைப்பினைத் தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் கண்டு மகிழலாம்.