Primary tabs
-
5.3 கதைமாந்தர்
தமிழச்சி, கொடிமுல்லை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தமிழச்சியில் காணப்படும் கதை மாந்தர் பல்வகையினர். தமிழச்சி, பாப்பாத்தி ஆகிய பெண் பாத்திரங்களும் பொன்னன், மதுரைவீரன், குப்பன் ஆகிய ஆண் பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர்.
- தமிழச்சி
வாணிதாசன் படைத்த தமிழச்சி சேரி மக்களின் வாழ்வில் மாற்றம் காண விழையும் முதலியார் வீட்டுப் பெண்ணாகக் காணப்படுகிறாள்.
ஆட்டிட ஆடுகின்ற
பாவைநான் அல்லள் ; சற்றுப்
பாட்டையில் நடந்தால் என்ன?
பலருடன் பழகிப் பேசி
வீட்டிற்கு வந்தால் என்ன?
விழிப்புண்டு கற்பில் ......எனும் தமிழச்சியினைப் பார்க்கும்போது, அவள் ஒரு புதுமைப் பெண்ணாகவே காணப்படுகிறாள். பெண்விழித்தால் விடுதலை நிலைக்கும் நாட்டில் என்று பேசுகிறாள் தமிழச்சி, காதல் மணமே சிறந்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவள். கனிந்த காதலுள்ளம், பிறரிடம் காட்டும் அன்பு, ஊரார்க்கு உழைக்கும் பண்பு, மூடப் பழக்கங்களை முறியடிக்கும் துணிவு, பகுத்தறிவை மக்களுக்குப் புகட்டும் ஆர்வம், சேரியினைத் திருத்தும் முயற்சி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் எழுச்சி, தனியுடைமையை மாற்றிப் பொதுவுடைமையைப் பூத்துக்குலுங்க வைக்கும் கொள்கை போன்ற தன்மைகள் தமிழச்சியிடம் காணக்கிடக்கின்றன.
‘சாப்பிடப் பிறந்ததன்றித் தன்மானம் உரிமை காவாப் பாப்பாக்களாலே பெண்கள் பாழானார்; அடிமையானார்’ என்று பெண்ணடிமையாவதற்கும் உரிமைகளை இழப்பதற்கும் பெண்களே காரணம் என்பதைச் சொல்வதோடு மட்டுமல்லாமல், எதிர்த்திட எடடீ வாளை ! என்று பெண்களைத் தட்டி எழுப்பும் புரட்சிப் பெண்ணாகவும் அவள் விளங்குகிறாள்.
- பாப்பாத்தி
தமிழச்சியின் பக்கத்து வீட்டுப் பெண். மிகவும் அழகு வாய்ந்தவள். பட்டாளத்துக் குப்பனை மனமாரக் காதலித்தவள். கிழவனுக்கு வாழ்க்கைப்படப் பெற்றோர்கள் வற்புறுத்தியபோது மறுத்துப் பேசியவள். அதை நினைத்துப் புலம்பும் கோழைப்பெண்ணாகவும் இருந்தவள். தமிழச்சியின் உறவால் மனஉறுதி பெற்றுப் புதுமைப் பெண்ணாக மாறியவள். பொன்னனோடு சென்றதால் ஊர் மக்களின் பழிச்சொல்லுக்கு ஆளானவள். அவளது உண்மைக் காதல் குப்பனால் உதாசீனப் படுத்தப்பட்டபோது நிலைகுலைந்து போகிறாள். பொன்னனைக் குப்பன் கொலை செய்த பிறகு, பாப்பாத்தியின் காதலில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. மதுரைவீரன் பாப்பாத்தி காதல் மலர்கிறது. கலப்பு மணத்திற்கு வழிவகுத்த புரட்சிப் பெண்ணாகப் பாப்பாத்தி தோன்றுகிறாள்.
-
பொன்னன்
தமிழச்சியின் காதலன். ஏரோட்டும் உழவன். தமிழச்சியால் நெஞ்சுறுதி பெற்று நிமிர்ந்து நிற்பவன். கணவன் என்ற நிலையை அடையாமல் காதலனாகவே வாழ்ந்து மடிகிறான். காதலியின் வேண்டுகோளை நிறைவேற்றத் துணிந்ததால் கொலை செய்யப்படுகிறான். தன்வீடு, தன்னுலகம் தன்வாழ்வு என்று அமைத்துக்கொள்ள விழைபவன். மொத்தத்தில், அவலச்சுவையின் பிரதிபலிப்பாக இப் பொன்னன் பாத்திரம் காவியத்தில் இடம் பெறுகிறது எனலாம்.
-
மதுரைவீரன்
சேரிக்காளை என்று கவிஞரால் அறிமுகம் செய்யப்படுகிறான். அறப்பணி செய்ய தமிழச்சி விடுத்த அழைப்பினை ஏற்று, நான் என்றன் சேரிக்காக நல்குவன் உயிரை என்று துணிவோடு செயல்படுகிறான். தமிழச்சி சிறை சென்ற பொழுது, ஊராரின் எதிர்ப்புக்கு உள்ளானவன். அதே நேரத்தில் தன்னிடம் பாதுகாப்பிற்காக இருக்கும் பாப்பாத்தியைக் கண்ணுங் கருத்துமாகக் காப்பாற்றியவன். பாப்பாத்தியின் மேல் காதல் கொண்டு, வெளிப்படுத்தமுடியாமல் இருந்தவன். இவனது கண்ணியமும் நாகரிகமுமே பாப்பாத்தியின் மனத்தில் இடம்பெற வைத்தது. சொல்வேறு செயல்வேறு என்றில்லாமல் சொன்ன சொற்படி வாழ்பவனாகத் திகழ்கிறான். சாதியை எதிர்க்கும் சமதர்மவாதியாகவும், உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் பாட்டாளித் தோழனாகவும் சிறப்பிடம் பெறுகிறான். இவ்வாறு ஊராரின் வீழ்ச்சிக்கும் தமிழச்சியின் மீட்சிக்கும் காரணமாகத் திகழும் கடமை வீரனாகக் காட்சியளிப்பதோடு மட்டுமன்றி, காப்பியம் தொடர்வதற்கு இன்றியமையாத படைப்பாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
குப்பன்
பாப்பாத்தியின் முதற்காதலன். அவள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவன். அதே நேரத்தில் பட்டாளத்திலிருந்து திரும்பிய நேரத்தில், அவளை நம்புவதைவிட ஊர்ப்புரளியை நம்பிவிடுகிறான். அதனால் அவன் தொடர்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் போலியான அன்பினை வெளிப்படுத்துவது போலக் காணப்படுகிறது. தீர ஆராய்ந்து உண்மையை அறிய முற்படாமல், அவசரபுத்தியுள்ளவனாகச் செயல்படுகிறான். இதனால் காவியத்தில் இவனது பிற்பகுதி வாழ்க்கை சிதைந்து போய்விடுகிறது. பாப்பாத்தியின் கடிதத்தைப் படித்த பிறகும் கொடியது காதல் எனும் முடிவுக்கே வருகிறான். பாப்பாத்தியைச் சந்தித்தபோதும் உண்மையை அறியும் உணர்வில்லாமல், ‘பழிகாரி! என்னை வஞ்சித்த பாதகி’ என்று வசைமாரி பொழிந்து அவளைக் கொலை செய்யத் துணிகிறான். நல்லவைகளைச் செய்த பொன்னனையே குத்திக் கொலை செய்து விடுகிறான். ஊர்ப்புரளியை நினைத்துப் பொன்னனைக் கொலை செய்தது, கொலைக் குற்றத்தைத் தமிழச்சியின் மீது சுமத்தியது, ஊராரோடு சேர்ந்து கொண்டு சேரியைக் கொளுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கொடிய பாத்திரப் படைப்பாகக் குப்பன் காணப்படுகிறான்.
5.3.2 கொடிமுல்லை - கதைமாந்தர்
கொடிமுல்லைச் சிறுகாவியத்தில் முதன்மைக் கதைமாந்தர்,துணைக் கதைமாந்தர் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர். அழகன், கொடிமுல்லை, நலம்பாடி, மாமல்லன், மானவன்மன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர் ஆவர்.
-
அழகன்
கல்தச்சர் குழுவுக்குத் தலைவன். தென்னிலங்கையைச் சேர்ந்தவன். பல்லவநாட்டு இளவரசியை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்து காதல் வயப்பட்டவன். கதைத் தலைவன். பெண்ணுரிமைக்காகப் பரிந்து பேசும் சமுதாயவாதியாகவும் பெண்களின் காதல் உரிமைக்காக வாதாடும் வழக்குரைஞனாகவும் விளங்குகிறான். ‘கத்திக்கும் நான் இனிமேல் அஞ்சேன்; வேந்தன் காவலுக்கும் நான் அஞ்சேன் !’ என்றும், ‘நீயோ மண்ணரசி ! நான் கல்லைச் செதுக்கும் தச்சன். வாக்களிப்பாய், எதிர்த்து உலகை மிதிப்போம்’ என்று அவன் கூறும் கூற்றுகளிலிருந்து, நெஞ்சுறுதிமிக்க அஞ்சாமை உடையவன் என்பது புலனாகிறது. தமிழ், தமிழ்ப்பண்பு, தமிழர் வாழ்வுமுறையைப் பேணிக்காக்கும் பெருவேட்கையுடையவனாக விளங்குகிறான். ஆரியத்தை ஆதரித்ததால்தான் தமிழர் வாழ்வு, கலை எல்லாம் அழிந்தது என்று கருதுகிறான். அவனது இறுதி முழக்கம் தமிழ் இன உணர்வின் வெளிப்பாடாகவே காணலாம். நலம்பாடியால் காப்பாற்றப்படுகிறான். இறுதியில் பூங்கொடியை இழந்து புலம்புகிறான்.
காதலுக்கு மதிப்பில்லா இந்த நாட்டைக்
கருக்கிடுவாய் தூயதமிழ் அன்னாய்என்று பேசுகிறான்.
மாணிக்கச் சுடரொளியாள் செத்தாள் ; இந்த
மண்ணுலகம் புளிக்குது எனக்கிங் கென்னவேலைஎன்று வருந்துகிறான்.
அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறுவேறு
சட்டதிட்டம் அற்றுலகம் வாழ வேண்டும் ;
அரசன்தன் இச்சையைப் போல் எதையும் செய்யும்
அடுக்காத செயல் மண்ணில் ஒழியவேண்டும் என்றுதான் வாழ்ந்த நாட்டின் அமைப்பையே சாடுவதைக் காணலாம்.
-
கொடிமுல்லை
காவியத்தின் தலைவி. மன்னன் மாமல்லனின் மகள். நற்றமிழாள் கொடி முல்லை, கொய்யாப்பூக் கொடிமுல்லை, கயல்விழியாள் கொடிமுல்லை என்று அழைக்கப்படுபவள். பாரதிதாசனின் புரட்சிக்கவியில் வரும் அமுதவல்லியோடு ஒப்பிடக் கூடிய அளவுக்குக் கொடிமுல்லையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. கொடிமுல்லையின் அழகு, காப்பியம் முழுவதும் கதிரொளி வீசுகிறது.
கட்டுக்கும் முட்டுக்கும் அஞ்சி வாழ்ந்தால்
காதலெங்குத் தழைத்திருக்கும்? சொல்வீர்
என்று, தான் காதலித்தவனை அடைய உலகை எதிர்க்கப் புறப்பட்டவள். பாராளும் வேந்தன் மகள் சிற்பக் கலைஞனைக் காதலிப்பது கண்டு கொதித்தெழுகிறான் மன்னன். தந்தையின் கோபத்துக்கு ஆளான தன் காதலனைக் காக்க, தந்தையிடம் கருணைமனு அனுப்பியும் மன்னன் கேட்காததால், அவசரக்காரியாகித் தன் உயிரைத் தானே மாய்த்துக் கொள்கிறாள். இறுதி மூச்சு வரை காதலனுக்காக ஏங்கித் தவிக்கும் இதயம் பெற்றவளாகத் திகழ்கிறாள்.
-
நலம்பாடி
பல்லவநாட்டு அரசவைப் புலவன். அழகனின் நண்பன். கதைத் தலைவனுக்கு ஆலோசனை தரும் அந்தரங்க நண்பன். நண்பன் அழகனை முகமூடி அணிந்து வந்து காப்பாற்றுகிறான். காதலுக்குச் சாதி, மதம், அரசன், ஆண்டி என்ற வேறுபாடுகள் இல்லை என்பதை விளக்கி, அழகன் மேல் பழிசுமத்துதல் தவறு என்று மன்னனிடம் வாதாடுகிறான். இறுதியில் நண்பனுக்காகவே தன் இன்னுயிரைக் கொடுக்கின்றவனாகக் காட்சியளிக்கிறான். கதைத் தொடக்கத்தில் அழகன் - கொடிமுல்லைக் காதலை மலைக்கும் மடுவுக்கும் ஒப்பிட்டுப் பேசியவன் பின்னர் அவர்களின் உண்மையான காதலினை அறிந்ததும் அவர்களுக்காக ஆணித்தரமான வாதத்தை எடுத்து வைப்பவனாகிறான். மாமல்லன் இக்காவியத்தில் இடம் பெறும் வரலாற்றுப் பாத்திரம். கொடிமுல்லையின் தந்தை. நிலைத்த புகழை நாடும் நேரிய கலை ஆர்வலன். மூடப்பழக்கங்களை ஆதரித்தவன். உயர்வு தாழ்வு கருதும் மன்னன், தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவு எடுக்கும் ஆணவம் கொண்டவன். கடவுள் பெயரால் சொல்லப்படும் கதைகளும் சாதி, சமயச் சண்டைகளும் இல்லாமல் நாட்டை ஆளவே முடியாது என நம்புகிறான்.
எக்காலம் பகுத்தறிவு பெற்று மக்கள்
எதிர்ப்பாரோ அன்றிடரும் தீரும்
என்னும் கருத்துடையவனாகக் காணப்படுகிறான். மக்களே என்றைக்குப் பகுத்தறிவு பெற்று எதிர்க்கிறார்களோ, அன்றைக்குத்தான் மூடப்பழக்கங்களை ஒழிக்க முடியும் என்பது அவனது கருத்தாக இருக்கிறது.
உயர்சாதி என்பதையும் மறந்து, தீயோன்
எங்களரும் கொடிமுல்லை அறிவை மாய்த்தான்
என்று கூறும்போது, அவனது சாதிச் செருக்கினையும் பிற்போக்கு மனநிலையையும், வெளிப்படையாக அறியமுடிகிறது.
-
நுழைபுலத்தான்
மாமல்லனின் சிறந்த அமைச்சன். கடமை தவறாதவன். தன் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை பயனற்றது என்று சொன்ன அரசனுக்கு, செத்துப் போனவரைப் பழிகூற வேண்டாம் வேந்தே ! புகழ் நடுக என்று பணிவுடன் அறுவுறுத்துகிறான். பல்லவன் தன் பெயரால் ஊரமைத்துப் புதுமை செய்ய விரும்பி நாளும் கோளும் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது,
வேந்தே
கடைக்காலக் கொள்கையிது ; வீணர்சூழ்ச்சி
ஆள்வினையை நம்பாது மக்கள் வீழும்
அளறு மிகுமுள் நிறைந்த பாட்டை ; காலில்
தேள் கொட்ட நெறி தென்னைக் கேறலுண்டோ?
செப்பிடுவீர்(ஆள்வினை = முயற்சி; அளறு = சேறு; பாட்டை = வழி)
என்று அரசனுக்குப் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னவன். கொடிமுல்லையைக் காதலித்ததால், கல்தச்சனுக்கு நீதி வழங்க வேண்டிய நிலை வரும்போது, அரசனைப் பார்த்து ‘முன்பின்னே ஆய்ந்துணர்ந்த பின்னர் நல்ல முடிவிற்கு வருவது மேன்மை’ என்று அறிவுறுத்துகிறான். அதை ஏற்க மறுத்த அரசனைப் பார்த்து, “மானந்தான் தமிழருக்குப் பெரிது; நாட்டில் பழிதாங்கி வாழ்வதோ? உமது முன்னோர்” என்று அறிவுறுத்திய பிறகும் அரசன் கேட்காததால், ‘குற்றம் அழகனிடம் இல்லை’ என்று நீதிக்காகக் குரல் எழுப்புகிறான்.
-
மானவன்மன்
இலங்கை இளவரசன். பல்லவ நாட்டுப் படைத்தலைவன். மாமல்லனுக்கு உறவினன். கொடிமுல்லைக்கு உரியவனாகக் கருதப்படுபவன். இள வயது முதல் கொடிமுல்லையுடன் ஊஞ்சல் ஆடி, கழுத்தில் மாலை சூட்டி மகிழ்ந்தவன். பருவ வயதினையடைந்த கொடிமுல்லையை மணக்கத் துடித்தான். அவளோ மறுத்தாள். கல்தச்சனான அழகனோடு அவளைக் காணும்போது மிகவும் வேதனைப்பட்டான். பொறாமையும் அவனைக் கோபமுறச் செய்தது. அழகனைக் கொல்ல நினைத்துச் சென்றவன், அழகனின் கோபத்துக்கு ஆளாகிப் பலியானான். அத்துடன் அவன் வாழ்வு முடிகிறது.
அவன் அழிவை அடிப்படையாகக் கொண்டே கதையின் உச்சக்கட்டம் அமைகின்றது. மாமல்லனைப் போன்று இவனும் ஒரு வரலாற்றுப் பாத்திரம். கதைப்போக்கில் மானவன்மன் இடையூறு விளைவிக்கும் கொடியோனாகப் படைக்கப்படுகிறான். தமிழ்மறவன் மானவன்மன் என்றும், குன்றைத் தகர் தோளன் என்றும் கதையின் தொடக்கத்தில் இவனைப் பற்றி அறிமுகம் செய்யப்படுகிறது. கதையில் தீங்கு செய்யும் பாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளது.