தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழச்சியும் கொடிமுல்லையும் - ஒப்பீடு

  • 5.6 ‘தமிழச்சி’யும் ‘கொடிமுல்லை’யும் - ஒப்பீடு

    இவ்விரு காவியங்களிலும் கதைத் தலைவியராக வரும் பெண் பாத்திரங்களின் பெயர்களே, தலைப்புகளாக அமைந்துள்ளன. தமிழச்சி என்னும் பெயர் இன உணர்ச்சியையும், கொடிமுல்லை கவிஞரின் இயற்கை ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றன.

    தமிழச்சி - சிற்றூர்ப் பெண்ணாகிறாள். கொடிமுல்லையோ பல்லவ நாட்டு இளவரசி. இருவருமே காதல் வயப்பட்டவர்கள். தமிழச்சியின் காதலன் சாதாரண உழவன். கொடிமுல்லையின் காதலனோ சாதாரணக் கல்தச்சன்.

    தீமையை எதிர்த்துப் போராடுவதில் கொடிமுல்லையைவிட, தமிழச்சி முன்னணியில் இருக்கிறாள்.

    கொடிமுல்லையின் வாழ்வு தற்கொலையில் முடிகிறது. தமிழச்சியின் வாழ்வோ, புதிய நாட்டை உருவாக்கும் புரட்சி வாழ்வாக அமைகிறது. தமிழச்சி காவியம் சமுதாயப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. கொடிமுல்லைக் காவியமோ வரலாற்றுப் பின்னணியில் அமைக்கப்பட்டு மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பற்றியதாகக் காணப்படுகிறது.

    இருகாவியங்களிலும் கொலை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. கொடிமுல்லையில் மானவன்மன் கொலை நடக்கிறது. கதைத் தலைவன் அழகன் தண்டனை பெறுகிறான். தமிழச்சியில் பட்டாளத்துக் குப்பனால் பொன்னன் கொலை செய்யப்படுகிறான். கொலைக்குற்றமோ, கதைத் தலைவி தமிழச்சியின்மீது சாட்டப்படுகிறது; அவள் தண்டனைக்கு ஆளாகிறாள்.

    கொடிமுல்லை - அழகன் தற்கொலைகளால் துன்பியலாக முடிவது கொடிமுல்லை.

    பாப்பாத்தி - மதுரைவீரன் திருமணத்துடன் இன்பியலாக முடிவது தமிழச்சி. இவ்வாறு சமூகப் பின்புலமும் வரலாற்றுப் பின்புலமும் கொண்டு, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் புதுமைக் காவியங்களாக இவ்விரு காவியங்களும் படைக்கப்பட்டுள்ளன எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:05:51(இந்திய நேரம்)