Primary tabs
-
5.1 தமிழச்சியும் கொடிமுல்லையும்
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய காவியங்கள் தமிழச்சியும், கொடிமுல்லையும். சாத்தனார் கண்ட மணிமேகலை போலக் கதைத் தலைவியின் பெயரையே காப்பியங்கள் தாங்கி நிற்கின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இலைமறை காயாக மக்களிடையே நிலவிவந்த ஆரியர்-திராவிடர் பிரிவினை, தந்தை பெரியாரால் பிராமண எதிர்ப்பு இயக்கமாகத் திராவிடர் கழகம் என்று உருவாகி, தமிழ் மக்கள் அளவில் எழுந்து, நாட்டளவில் நின்று கடைசியில் அரசியலில் அறிமுகமானது. அதுவே 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகமாகத் தோன்றியது. இந்தக் கால கட்டத்தில் தான் தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய காப்பியங்கள் தோன்றின.
பெண்ணைப் பெருமைப்படுத்தவே தமிழச்சியைப் படைத்தார் கவிஞர். வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தைக் காணவே கொடிமுல்லை உருவானது.
சிற்றூர்ப் பெண்கள் திருந்தினால்தான்
நாடு திருந்தும் என்பது என் துணிவு
அத்துணிவில் தோன்றியவளே தமிழச்சிஎனக் காவியம் தோன்றியதன் நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
சேரிமக்களின் அடிமை வாழ்வு அகற்றவும், பெண்களை இழிவாய் எண்ணும் சின்ன புத்தியை மாற்றவுமே தமிழச்சி படைக்கப் பட்டிருக்கிறாள்.
கொடிமுல்லை - காப்பியத் தலைவியின் பெயரே நூலுக்கும் பெயராக வைத்துள்ளார். அரசன் மகளாக இருந்தாலும், செல்வத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வாழும் ஆடம்பரப் பெண்ணாக இல்லாமல், அறிவு வழியில் செல்லும் பெண்ணாகத் திகழ்வதை அறியலாம். காதலுக்கு இலக்கணமாக வாழ்பவள். காதலனைத் தவிர வேறொன்றும் விழையாதவளாகக் காணப்படுகிறாள்.
வரலாற்றுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், இயற்கையின் ஈடுபாட்டினை வெளிப்படுத்தவும் கொடிமுல்லை படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, இருகாப்பியங்களிலும் காப்பியத் தலைவியரையே காப்பியத் தலைவனைவிடக் கூர்ந்த அறிவுடையவர்களாகவும் செயல்திறம் மிக்கவர்களாகவும் படைத்திருப்பது பெண்களை முதன்மைப்படுத்தும் கவிஞரின் விருப்பமே என்பது புலனாகிறது.
1915 ஜூலை 22 ஆம் நாள் கவிஞர், புதுவையையடுத்த வில்லியனூரில் திருக்காமு நாயுடு - துளசியம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி. ஆரம்பப் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். இவர் இயற்கைக் கவிஞர், தமிழ்நாட்டுத் தாகூர், பாவலர் மணி, பாவலர் ஏறு, புதுமைக் கவிஞர் எனப் பலவாறு போற்றப்பட்டவர். பாரதிதாசனது பரம்பரையில் முதிர்ந்தவர்.
- புனைபெயர்
- படைப்புகள்
- புலமை
- கவிதைத் தளம்
1938 இல் தமிழன் ஏட்டில் ரமி என்னும் புனைபெயரில் பாரதிநாள் என்னும் முதற்பாடல் வெளிவந்தது. அதன்பிறகு வாணிதாசன் என்று பெயரை மாற்றி எழுதினார்.
ஆனந்தவிகடன், திராவிட நாடு, குயில், திருவிளக்கு, நெய்தல், பொன்னி, மன்றம், முரசொலி ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
தமிழச்சி (1949), கொடிமுல்லை (1950), தொடுவானம் (1952), எழிலோவியம் (1954), வாணிதாசன் கவிதைகள் முதல்தொகுதி (1956), பொங்கல் பரிசு, தீர்த்தயாத்திரை, குழந்தை இலக்கியம் (1959), சிரித்தநுணா (1963), இனிக்கும்பாட்டு (1965), எழில் விருத்தம் (1970), பாட்டரங்கம் (1972), வாணிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி (1981)என்பன போன்ற நூல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாடகங்களையும் எழுதியுள்ளார். சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் பல கவிதைகளைப் படைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர்.
இவ்வாறு மரபுக்கவிஞராகவும் புதுமைக் கவிஞராகவும் திகழ்ந்த கவிஞர் வாணிதாசன் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் முப்பரிமாணங்களில் தமது கவித்தளத்தை அமைத்து வெற்றி பெற்றுச் சிறந்தார்.
தமிழச்சி காப்பியம் 18 இயல்களைக் கொண்டது. இயல்களுக்கு ஏற்ற வகையில் தலைப்புகள் தரப்பட்டுள்ளன. 173 அறுசீர் விருத்தங்களும் 4 கும்மிப் பாடல்களும் உள்ளன. மொத்தம் 177 செய்யுட்கள் உள்ளன. இந்நூல் 1949 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
கொடிமுல்லை 1950 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் 16 இயல்களைக் கொண்டது. இயல்களுக்குத் தலைப்புகள் தரப்படவில்லை. இயல்களுக்கு ஏற்ற வகையிலான கதைக் குறிப்புகள் உள்ளன. 132 செய்யுட்களால் ஆனது. ‘என் ஆசிரியர் கவியரசர் பாரதிதாசன் அவர்களுக்கு இந்நூல் படைப்பு’ - என்று பாரதிதாசன் மீது கொண்டுள்ள பற்றினை இந்நூலில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
சமுதாயத்தின் துயரம் காவியங்களில் ஒலிக்கலாம். அந்தத் துயர ஒலி எதிர்கால விடியலுக்கு அழைத்துச் செல்வதாக இருத்தல் வேண்டும். துயரத்தை நியாயப்படுத்துதல் கூடாது எனும் நோக்கத்தில் தமிழச்சி படைக்கப்பட்டிருக்கிறது. சேரிமக்களின் வாழ்வில் உழைப்பிருந்தும் உயர்வு இல்லாமையைக் கண்ட கவிஞர், அதனை உடைத்தெறியும் நோக்கத்திலே நூலைப் படைத்துள்ளார்.
ஆண்கள் பெண்களுக்கு எப்போதுமே அநீதிகளை இழைத்து வந்திருக்கிறார்கள். கல்வி, போராட்டம் என எதிலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த கவிஞர், தமிழச்சியின் மூலம் ஆண்களை வெட்கித் தலைகுனியும்படி பேச வைக்கிறார்.
‘பொரியுண்டை என உம் முள்ளே பெண்களை நினைத்தீர் போலும்’ என்று ஆண்களுக்கு அறைகூவல் விடுப்பதன் மூலம், பெண்ணின் பெருமைக்கும் கற்பின் சிறப்பிற்கும் அறம்சார்ந்த அரசியலுக்கும் பெண்களைத் தயார்ப்படுத்துவதைக் காணமுடிகிறது. குறிப்பாகச் சிற்றூரில் வாழும் பெண்கள் தலைநிமிர்ந்து வெகுண்டு எழும்போது தான் நாடு வளம் பெற்று ஓங்கும் என்பதைத் தமிழச்சியில் புலப்படுத்தியுள்ளார்.
தமிழரின் வரலாற்றுச் சிறப்பையும் கலையார்வத்தையும் விளக்க எழுந்ததே கொடிமுல்லை. ஏற்றத்தாழ்வற்ற இலட்சிய சமுதாயத்தைப் படைக்கும் குறிக்கோளினை இதில் காணமுடிகிறது.
உண்மைக் காதலுக்குக் குறுக்கே நிற்கும் உயர்வு தாழ்வுத் தடைக்கல் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதே முதன்மையான நோக்கமாகிறது. ‘விலை கொடுத்து வாங்க முடியாதது காதல்' என்றும் காதலை மதிக்காத நாடு இருப்பதைவிட அழிவதே மேல் என்றும் குறிப்பிட்டிருப்பதால், காதலுக்கு ஓர் உயர்வான இடம் இக்காவியத்தில் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அந்த அளவுக்கு உண்மைக் காதலின் உயர்வும், கவிஞரின் இலட்சிய நோக்கும் இச்சிறுகாவியத்தில் பின்னிப் பிணைந்துள்ளன எனலாம்.