Primary tabs
-
4.0 பாட முன்னுரை
உலகத்தின் தொன்மைச் சமயமான சைவ சமயம்
சிவனைத் தெய்வமாகக் கொண்டு விளங்கும் சமயமாகும்.
சிவபெருமானை முதன்மையாகக் கொண்டாலும் இயற்கைப்
பொருள்களில் சிவனைக் கண்டு வழிபடும் சமயம் ஆகும்.
அதாவது ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று,
ஆகாயம் ஆகியவற்றிலும், இயற்கைப் பொருள்களான
மரங்கள், செடிகள், பூக்கள் ஆகியவற்றிலும் கடவுள்
தன்மையைக் கண்டு வழிபடுகிற சமயம் ஆகும். அவ்வாறு
வழிபடுகிற பொழுது வழிபாட்டு முறைமைகளுக்குத்
தொன்றுதொட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொண்ட
சமயமும் ஆகும். வேதங்கள் என்றும், ஆகமங்கள் என்றும்,
சித்தாந்தம் என்றும் நூல்களைப் படைத்துக் கொண்டு
அதன்வழி வழிபாட்டு நெறிமுறைகளை விதிகளாகக்
கொண்டுள்ள சமயம் ஆகும். ஆனால் அதே நேரத்தில்
விதிமுறைகளைக் கடுமையாக ஆக்கிக் கொள்ளாமல்
எக்காலத்திலும், எப்பருவத்தார்க்கும் உரியதாக எளிய வழியில்
ஆக்கிக் கொண்டுள்ள சமயமும் ஆகும். எனவேதான் சைவ
சமயம் உலக நாடுகள் பலவற்றிலும் பரவியிருக்கிறது.
இத்தகைய சைவ சமய எளிய விதிமுறைகளையும்
வழிபாட்டினையும் இப்பாடத்தில் அறிய உள்ளோம்.