Primary tabs
-
4.6 சிவச் சின்னங்கள்
சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுவன சிவச்
சின்னங்களாகும். இவற்றைச் சாதனங்கள் என்றும் குறிப்பிடுவர்.
சிவச்சின்னங்களில் முதன்மை பெறுவது உருத்திராக்கம் ஆகும்.
உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும்.
திரிபுரத்தை எரித்த பொழுது சிவபிரானது மூன்று கண்களிலிருந்து
சிந்திய மணியை உருத்திராக்கம் என்று கூறுவதுமுண்டு. எனவே
இறைவனுடைய கருணையை நினைவூட்டும் சாதனமாக
உருத்திராக்கத்தைக் கொள்வதுமுண்டு. சைவர்கள் இத்திருச்
சின்னத்தை அணிந்தால்தான் சைவராகக் கருதப்படுவர்.
உருத்திராக்கம் ஒன்று முதல் பதினாறு திருமுகங்கள்
கொண்டதாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு முகத்திற்கும் பயன்
கூறப்படுகிறது. இதை அணிவதற்குச் சில விதிமுறைகளும்
உண்டு. இன்னின்னவர் இவ்வாறு அணிய வேண்டும் என்ற
விதிகளையும் ஆகம நூல்கள் கூறுகின்றன.சிவச்சின்னங்களில் அடுத்ததாகிய திருநீறு என்பது குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினால் சுடுவதால் உண்டாகும் நீறாகும்
(சாம்பல்). இத்திருநீற்றை அணிவது சைவர்களின் கடமையாகும்.
சாணம் ஆன்மாவையும், சாணத்திலுள்ள அழுக்குகள் மலங்களையும்,
சாணத்தை எரிக்கின்ற நெருப்புத் திருவருளையும், எரித்தபின்
கிடைக்கும் திருநீறு மலம் நீக்கப் பெற்ற ஆன்மாவையும் குறிக்கும்
என்பர். சாதாரணமாகத் திருநீறை அணிந்தால் அதற்கு அணிதல்
என்று பெயர். நீரில் குழைத்து அணிந்தால் உபதேசம் பெற்று
அணிதல் என்று பொருள்படும். இவ்வாறு உபதேசம் பெற்று
அணிகின்ற திருநீற்றை மனித உறுப்புக்களின் இன்னின்ன இடத்தில்
அணிய வேண்டும் என்ற விதிமுறைகள் உண்டு. இவற்றைச்
சாத்திரங்களும் தோத்திரங்களும் கூறுகின்றன.இவ்வாறு சைவ சமய வழிபாட்டில் குரு, சங்கம
வழிபாடுகள் சிறப்புற அமைந்துள்ளன. அவற்றின்வழியில்
சாதனங்களும் அமைந்துள்ளன.