தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.3- நடைமுறை வழிபாடு

  • 4.3 நடைமுறை வழிபாடு


        சைவ சமயத்தில் வழிபாடு என்பது இன்றியமையாத
    ஒன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் நம்பிக்கை தோன்றிய காலம்
    முதல் இவ்வழிபாடும் உடன் தோன்றிற்று. கடவுள் நம்பிக்கையை
    வளர்த்துக் கொள்ளச் சாதனமாக வழிபாடு கையாளப் பெற்றது.
    வேத ஆகமங்கள் இவ்வழிபாடுகள் நடத்தும் முறைமைகளை
    வகுத்துக் காட்டியுள்ளன. காலத்திற்குக் காலம் வழிபாட்டு
    முறைமைகளாகிய     சடங்குகள் மாறினாலும் வழிபாடு
    மாறவில்லை. தொன்று தொட்டு நடந்து வருகிறது. கடவுள்
    நம்பிக்கை தோன்றிய காலத்தில் அச்சம் அடிப்படையாக
    இருந்ததால், வழிபாடும் அச்சத்தின் அடிப்படையிலேயே
    அமைந்தது. அச்சத்திற்குரிய பொருள்களைக் கடவுள்களாகக்
    கொண்டு வழிபட்டதால் அவ்வழிபாடு முதன்முதலில் இயற்கை
    வழிபாடாக அமைந்தது.

        சூரியன், சந்திரன், வருணன், சிங்கம், புலி, மரங்கள்
    இவற்றை வழிபட்டனர் மக்கள். எனவேதான் இன்றைய சைவக்
    கோயில்களில் சூரிய, சந்திரர்களின் உருவங்களும், சிங்கம்,
    புலி, நந்தி ஆகிய விலங்குகளின் உருவங்களும், தலவிருட்சம்
    என்ற அடிப்படையில் மரங்களும் அமைந்தன. இவைகள்
    தொடக்கக் கால இயற்கை வழிபாட்டைச் சுட்டிக் காட்டுவன
    எனலாம். இத்தகைய இயற்கை வழிபாட்டிற்குரிய தெய்வங்களை
    வணங்கும்போது உணவுப் பொருள்களைப் படைத்தல்,
    பலியிடுதல், ஆரவாரம் செய்து கூத்தாடுதல் ஆகியவை
    நடந்துள்ளன.

        இந்த இயற்கை வழிபாடு சிறுகச் சிறுக வளர்ந்து
    முழுமுதற் கடவுளை உருவ வழிபாட்டில் வழிபடத் தொடங்கிய
    பிறகு வழிபாட்டு முறைமைகளும், விழாக்களும், சிறப்புப்
    பூசனைகளும் தோன்றின. வழிபாட்டில் பூசனை என்ற சடங்கு
    அன்றாடப் பூசனை என்றும் சிறப்புப் பூசனை என்றும் வகுத்துச்
    செய்யப்பட்டது. இதனைத் திருக்குறள், மழை இல்லை என்றால்
    வழிபாட்டில் சிறப்புப் பூசனை நடக்காது என்று குறிப்பிடுகிறது.

        சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
        வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
                     (திருக்குறள், வான்சிறப்பு - 8)

    இத்தகைய பூசனைகள் வளர்ந்து பூசனை செய்வதற்குரிய
    முறைமைகள், அதற்குரிய கருவிகள், நேரங்கள் என்றெல்லாம்
    சைவ சமய வழிபாட்டில் வகுத்துக் காட்டப் பெற்றன.

    4.3.1 அன்றாட வழிபாடு

         வழிபாடு என்பது பின்பற்றுதல் அல்லது வணங்குதல்
    என்ற பொருளைத் தரும். சைவ சமயம் உருவ வழிபாட்டைக்
    கொண்ட சமயம் ஆகும். காண முடியாத கடவுளுக்குப்
    பலவிதமான உருவங்களை உண்டாக்கி அவற்றை நாள்தோறும்
    வழிபட்டு வருதல் சைவ சமயத்தின் வழக்கமாயிற்று. இந்த
    உருவங்களை எல்லாம் ஓரிடத்தில் அமைத்து வழிபட்டதால்
    திருக்கோயில் வழிபாடு முக்கியத்துவம் பெற்றது. திருக்கோயில்
    அமைத்தல் என்பது உயர்ந்த பணியாகவும் கருதப் பட்டது.
    வீடுகளில்     மனிதர்கள்     எப்படி வாழுகின்றார்களோ
    அதுபோலவே திருக்கோயில்களிலும் வாழ்வியல் முறையில்
    வழிபாடுகள் அமைக்கப் பெற்றன.

        நாள்தோறும் திருக்கோயில்களில் குப்பைகளைக் கூட்டிச்
    சுத்தம் செய்தல், திருக்கோயில்களை மெழுகுதல் ஆகிய
    பணிகள் வழிபாட்டு முறைகளாக மாறின. கோயில்களில்
    விளக்கேற்றுதல், நறுமணம் வீச நறும்புகைகளை உண்டாக்குதல்
    என்பன நாள்தோறும் செய்யும் பணிகள் ஆயின. எப்படி
    வீடுகளில் வாழுகிற மக்கள் நீராடி அழகு படுத்திக் கொண்டு
    உணவுகளை உண்டு வாழுகின்றார்களோ, அதுபோல
    நாள்தோறும் திருக்கோயிலில் உள்ள கடவுளர்களுக்கு
    நீராட்டுதலை     அபிடேகமாகவும்     அழகு     செய்தலை
    அலங்காரமாகவும், உணவு படைத்தலை நைவேத்தியமாகவும்,
    இவற்றைச் செய்வதை அன்றாட வழிபாடாகவும் கொண்டனர்.

        இவை நாள்தோறும் நடக்கிற பொழுது ஒரு நாளினை
    முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம்
    காலம், ஐந்தாம் காலம் எனப் பிரித்துக் கொண்டு பூசனைகள்
    செய்யப் பெற்றன. இந்தக் காலங்களுக்குப் பெயர்களும்
    கொடுக்கப்பட்டன. விசுவரூப வழிபாடு, காலசந்தி,
    உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம்
    என்று
    காலங்களுக்குப் பெயரிட்டு ஒவ்வொரு நாளும் வழிபாடு
    செய்யப்பெற்றது. விசுவரூப வழிபாடு என்பது அதிகாலையில்
    நடத்தப்பெறும் சடங்காகும். காலசந்தி காலை சுமார் 9 மணிக்கு
    நடத்தப்படுவதாகும். உச்சிக்காலம் என்பது நண்பகலில்
    நடத்தப்பெறுவதாகும். சாயரட்சை என்பது மாலையிலும்,
    அர்த்தசாமம் முன் இரவிலும் நடத்தப்பெறுவதாகும். இத்தகைய
    வழிபாட்டு நேரங்கள் நாள்தோறும் நடத்தப்படுகின்ற
    வழிபாடுகளுக்குரியனவாகக் கொள்ளப்பட்டன.

        பிற சமயங்களில் வார நாட்களில் குறிப்பிட்ட
    நாட்களில்தான் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் சைவ
    சமயத்திலோ வார நாட்கள் முழுமையும் வழிபாடுகள் நடத்தப்
    பெறுகின்றன. இவ்வழிபாடுகளில் வழிபாடு செய்கின்றவர்கள்
    குருக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவர்கள் மேற்கொள்ள
    வேண்டிய பணிகளும், மேற்கொள்ளும் பொழுது கடைப்பிடிக்க
    வேண்டிய செயல்முறைகளும் வகுக்கப் பெற்று நடைமுறைப்
    படுத்தப்பெற்றன. அதாவது உடல் தூய்மையோடு வழிபாடு
    செய்ய வேண்டும். திருநீறு உருத்திராக்கம், பூணூல்
    அணிந்திருக்க வேண்டும். சட்டை அணிந்து கொள்ளக் கூடாது
    என்ற மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இத்தகையோர்
    வழிபாடாம் பூசனைகளைச் செய்வதால் பூசாரிகள் என்று
    அழைக்கப்பட்டனர். சைவ சமயத்தில் இவ்வழிபாட்டைச் சிவன்
    கோயில்களில் செய்பவர்கள் அந்தணர்கள் ஆவார்கள்.
    அதிலும் அவர்கள் சிவாச்சாரியார் மரபினர் ஆவார்கள். சிறு
    கோயில்களில் வழிபாடு செய்கிறவர்கள் பூசாரிகள் என்றே
    அழைக்கப்பட்டனர்.

        நாள் வழிபாட்டில் தெய்வ உருவங்களுக்கு நீர், பால்
    கொண்டு அபிடேகம் செய்தல், மலர்களால் அலங்கரித்தல்,
    விளக்குகளால் அழகு செய்தல், உணவுப் பொருள்களைப்
    படைத்தல், தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தல் ஆகியவை
    இன்றியமையாத     வழிபாடுகளாகக் கருதப்பட்டன. இது
    திருமுறையில்,

    சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் - (அப்பர்தேவாரம்)

    என்றும்,

        யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
                            - (திருமந்திரம்)

    என்றும் குறிக்கப் பெற்றுள்ளது. இத்தகைய சடங்குமுறை
    வழிபாடுகள் நாள்தோறும் நடப்பதால் அவற்றைப் புறவழிபாடு
    என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. (திருக்கோயில் வழிபாடு
    இல்லாது, வழிபாட்டு முறைகளை மனத்தகத்தே கொண்டு வந்து
    மனத்தாலே கடவுளை வழிபாடு செய்வது அக வழிபாடாகும்).

        கோயில் வழிபாட்டில், வழிபட வருகின்றவர்களுக்குத்
    திருநீறும், பிரசாத வகைகளும் இறைவன் அருளாக வழங்கப்
    பெற்றன. வழிபாடு நடக்கின்ற பொழுது மங்கல இசைக்
    கருவிகள்     முழக்கப்     பெற்றன.     இசைக்கருவிகளை
    முழக்குகின்றவர்களும் திருக்கோயில் பணியாளர்களாகவே
    கருதப்பட்டனர். வழிபாடு செய்கின்றவர்களுக்கு எவ்வாறு
    நெறிமுறைகள் அமைக்கப் பெற்றனவோ அதுபோல வழிபட
    வருகின்ற மக்களுக்கும் விதிமுறைகள் வகுக்கப் பெற்றன.
    உடல் தூய்மையோடு திருக்கோயிலுக்கு வரவேண்டும். திருநீறு
    அணிந்து கொண்டு வர வேண்டும். இறைவனுக்குரிய
    பெயர்களையோ அல்லது அடியார்களின் பாடல்களையோ
    கூறிக் கொண்டு வர வேண்டும். பூசனைக்குரிய பொருள்களைக்
    கொண்டு வர வேண்டும். கோயில் பணிகளைச் செய்ய
    வேண்டும். கரங்கூப்பி வணங்க வேண்டும், தரையில் விழுந்து
    வணங்க வேண்டும் என்பன அவை. அவ்வாறு வணங்கும்
    போது ஆண்கள் தலை, செவிகள், கைகள், தோள்கள், முகம்
    ஆகிய எட்டு அங்கங்கள் (அவயவங்கள்) பூமியில் படும்படி
    வணங்க வேண்டும். அது அட்டாங்க நமஸ்காரம் எனப்படும்
    பெண்கள் தலை, கரங்கள், முழங்கால் ஆகிய அங்கங்கள்
    பூமியில் படும்படி வணங்க வேண்டும். அது பஞ்சாங்க
    நமஸ்காரம் எனப்படும். இவ்வாறெல்லாம் வழிபாடுகள்
    நாள்தோறும் திருக்கோயில்களில் நடைபெற்று வருகின்றன.

    4.3.2 சிறப்பு வழிபாடு

         நாள்தோறும் வழிபடுகின்ற வழிபாட்டோடு சிறப்பு
    வழிபாடுகள் சில குறிப்பிட்ட நாள்களில் சைவ சமயத்தில்
    மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் சிறப்பு வழிபாடுகளில்
    அடிப்படை வழிபாடுகள் மாறுவதில்லை. நாள்தோறும்
    நடைபெறும் வழிபாட்டோடு சிறப்பு வழிபாட்டில் முக்கியத்துவம்
    பெறுவன ஐம்பொன்னால்     ஆகிய திருவுருவங்களை
    உலாவாக எடுத்து வருதல், வேள்விகள் நடத்துதல், சிறப்பான
    அலங்காரம் செய்தல் ஆகியவையாகும். சைவ சமயத்திற்குரிய
    சிறப்பான நாட்களில் திருக்கோயில் இருக்கும் இடங்களைப்
    பொறுத்தும், திருக்கோயில் அமைந்துள்ள சூழலைப்
    பொறுத்தும் சிறப்பு விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

        பொதுவான     சிறப்பு     விழாக்கள் எல்லாத்
    திருக்கோயில்களிலும் நடைபெறும். எடுத்துக்காட்டாக விநாயகர்
    சதுர்த்தி விழாவைக் குறிப்பிடலாம். விநாயகர் சிலை எந்தெந்தத்
    திருக்கோயில்களில் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த விழா
    நடைபெறும்.

        நவராத்திரி விழாவும் புரட்டாசி மாதத்தில் அம்பிகை
    இருக்கும் அனைத்துத் திருக்கோயில்களிலும் நடைபெறும். சில
    சிறப்பான     விழாக்கள்     திருவுருவங்களின்     சிறப்பை
    அடிப்படையாகக் கொண்டு நடைபெறும். இவ்விழாக்களில்
    மாசிமக விழா, கார்த்திகைத் தீப விழா, பூச விழா
    ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த விழாக்கள் தொடர்ந்து
    10 நாட்கள் நடைபெறும். கடலோரப் பகுதிகளில் இருக்கின்ற
    திருக்கோயில்களில் மாசிமகத்தில் நடைபெறுகிற விழா மாசிமக
    விழாவாகும். கார்த்திகைப் பௌர்ணமி நாளில் மலையைச்
    சார்ந்த திருக்கோயில்களில் நடைபெறும் விழா கார்த்திகைத்
    தீப விழாவாகும். தை மாதத்தில் பௌர்ணமி நாளில் முருகன்
    கோயில்களில் நடைபெறும் விழா பூச விழாவாகும். இத்தகைய
    விழாக்களோடு விரதம் இருந்து நடத்தப் பெறும் விழாக்களும்
    உண்டு.

        முருகனுக்கு விரதம் இருந்து ஐப்பசி மாதத்தில்
    நடைபெறும் விழா கந்தசஷ்டி விழாவாகும். கிருத்திகை நாளில்
    விரதம் இருந்து கொண்டாடப்படும் விழா கிருத்திகை
    விழாவாகும். திருவாதிரை நாளில் விரதம் இருந்து நடத்தப்படும்
    விழாவிற்குத் திருவாதிரை விழா என்பது பெயராகும். இத்தகைய
    விழாக்கள் தவிர மாதத்தில் வருகின்ற பிரதோஷ நாள்,
    அமாவாசை நாள், பௌர்ணமி, சதுர்த்தி, வார வெள்ளிக்கிழமை
    ஆகிய நாட்களில் திருக்கோயில்களில் சிறப்புப் பூசனை
    நடைபெறுவதும் உண்டு. இவை அனைத்தும் சிறப்பு வழிபாடுகள்
    ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:24:47(இந்திய நேரம்)