தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4- இலிங்க வழிபாடு

  • 4.4 இலிங்க வழிபாடு


         சைவ சமயத்தில் குரு, இலிங்க, சங்கம வழிபாடு என்பது
    சிறப்பிடம் பெறுவதாகும். இத்தகைய மூன்று வழிபாட்டில்
    இலிங்க வழிபாடு என்பது அருவுருவ வழிபாட்டைக் குறிப்பதாகும்.
    இந்த உருவ வழிபாட்டின் அடிப்படையில் இறைவனை
    உருவத்திலும், அருவத்திலும், அருவுருவத்திலும் காண்பது சைவ
    சமய மரபாகும். விநாயகர், முருகன், சக்தி     உள்ளிட்ட
    தெய்வங்களுக்கு உருவங்களை அமைத்து வழிபடுதல் உருவ
    வழிபாடு எனப்படும். அருவ வழிபாடு என்பது ஏகாந்த
    நிலையில் இறைவனை வழிபடுதல் ஆகும். அதாவது எந்த
    விதமான உருவமும் இல்லாத வெட்டவெளியை வழிபடுதல்.
    இந்த அமைப்பு எல்லாத் திருக்கோயில்களிலும் இருப்பதில்லை.
    சில குறிப்பிட்ட திருக்கோயில்களில்தான் உண்டு. எடுத்துக்
    காட்டிற்குச் சிதம்பர இரகசியத்தைக் கூறலாம்.

        இறைவன்     உருவத்தோடும்,     உருவமில்லாமலும்
    இருப்பவன். இது அருவுருவ வழிபாடாகும். இதனை
    வெளிப்படுத்துவது சிவலிங்க உருவம் ஆகும்; அதாவது இலிங்க
    வடிவம் எந்த உருவத்தையும் குறிப்பதில்லை. ஆனால் அதே
    நேரத்தில் உருவமில்லாமலும் இருப்பதில்லை. எனவேதான்
    அருவுருவ வழிபாட்டிற்குச் சிவலிங்கம் முக்கியத்துவம்
    பெறுகிறது. இவ் உருவ வழிபாட்டில் திருக்கோயில் மையப்
    பொருளாக அமைகிறது.

    4.4.1 திருக்கோயில் அமைப்பு

        தெய்வ உருவங்கள் எழுந்தருளப் பெற்ற இடம்
    திருக்கோயில் ஆகும். சைவத் திருக்கோயில்கள் மனித
    உடலைப் போலவே அமைக்கப் பெற்றுள்ளன.

        உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

    என்று இதனைத் திருமந்திரம் குறிப்பிடும். உடம்பிலுள்ள பாதம்
    போன்றது திருக்கோயில் கோபுரமாகும். முழங்கால் ஆஸ்தான
    மண்டபம் ஆகும். தொப்புள் பலிபீடம் ஆகும். மார்பு
    மகாமண்டபம் ஆகும். கழுத்து அர்த்த மண்டபம் ஆகும்.
    தலை கர்ப்பக்கிரகம் ஆகும். தலையின் உச்சி கருவறை
    விமானம் ஆகும். இவ்வாறு உடம்பின் அமைப்பைத்
    திருக்கோயிலுக்கு     ஒப்பிட்டுக் கூறலாம். சைவத்
    திருக்கோயில்களில் இராசகோபுரம், கருவறை விமானங்கள்,
    மதில் சுவர் ஆகியவை புறத்தோற்றத்தில் வெளிப்படும்.
    திருக்கோயிலுக்குள்ளே கொடிமரம், பலிபீடம், அர்த்த
    மண்டபம், பிரகாரம், மகா மண்டபம், கருவறை ஆகிய
    பகுதிகள் அமைக்கப் பெற்றிருக்கும். கருவறையின் மேல் உள்ள
    கோபுரம் விமானம் எனப்படும். மதில்சுவரை ஒட்டியுள்ளவை
    கோபுரங்கள் எனப்படும். கோபுரங்களில் முதன்மையாகப் பெரிய
    நிலையில் அமைந்திருப்பது இராசகோபுரம் ஆகும்.

        திருக்கோயில்களில் கருவறை என்பது எல்லாத்
    திருவுருவங்களுக்கும் அமைதல் இல்லை. சிவன், விநாயகர்,
    முருகன், சக்தி, சண்டிகேசுவரர் ஆகிய உருவங்களுக்கு
    மட்டுமே கருவறைகள் அமையும். மற்ற தட்சணாமூர்த்தி,
    பிரம்மா, கொற்றவை ஆகிய உருவங்கள் சுவர்களில் உள்ள
    கோட்டங்களில் (சன்னல் போன்ற அமைப்பு) அமைக்கப்
    பெறும். அம்பலத்தில் நடராசர் உருவம் அமைக்கப் பெறும்.
    நவக்கிரகங்கள், நந்தி, மயில், சிங்கம், சிவன் அடியார்கள்
    உள்ளிட்ட உருவங்கள் பீடங்களில் அமைக்கப் பெறும்.
    திருக்கோயில்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிடேகம்
    (குடமுழுக்கு) என்ற வழிபாட்டு முறையில் புதுப்பிக்கப் பெறும்.
    இவ்வுருவங்களை வழிபடுவதோடு திருக்கோயில் கோபுரங்களை
    வழிபட்டாலே திருவருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும்
    உண்டு. ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்ற பழமொழி
    இதனால் எழுந்தது.

    4.4.2 தெய்வ உருவங்கள்

        நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடும் செய்யப் பெறுகின்ற
    உருவங்கள்     சைவக்     கோயில்களில் பலவாறாகக்
    காணப்படுகின்றன. கடவுள் ஒருவரே அவரே சிவன் என்ற
    கொள்கையைக் கொண்டது சைவ சமயம். அக்கடவுளின்
    அருளைப் பெறுவதற்காகப் பல தெய்வ வடிவங்களை
    அமைத்து வழிபடும் சமயம் சைவ சமயம் ஆகும். எல்லாத்
    தெய்வ வடிவங்களிலும் சிவனே எழுந்தருளுகின்றான்
    என்பது சைவ சமயக் கொள்கையாகும். இதனை,

        யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி
        மாதொரு பாகனார் வந்து எய்துவார்

    என்று சாத்திர நூலாகிய சிவஞான சித்தியார் கூறும். சைவத்
    திருக்கோயில்களில் உள்ள தெய்வ உருவங்கள் அனைத்திலும்
    சிவபெருமானே மூலாதாரமாய் எழுந்தருளியிருக்கின்றான்
    என்பது நம்பிக்கையாகும்.

        திருக்கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம்
    அமைப்புக் காணப்பெறும். கொடிமரம் என்பது இறைவனின்
    முத்தொழிலைக் குறிக்கக் கூடிய அடையாளம் என்பர்.
    இறைவன்     முத்தொழிலையும்     கொண்டு     உலகத்தை
    நடத்துகின்றான் என்பதை அறிவிக்கவே கொடி மரம் நாட்டப்
    பெறுகிறது. அதற்குப் பின்னர் பலிபீடம் அமைக்கப் பெறும்.
    இது தத்துவப் பொருளான பாசத்தைக் குறிப்பதாகும்.
    இப்பலிபீடம் நந்தி தேவருக்குப் பின்னால் அமைக்கப் பெறும்.
    சிவபெருமானின் கருவறைக்கு முன்னே நந்திதேவரின்
    உருவமான காளை வாகனம் அடையாளச் சின்னமாக
    அமைந்திருக்கும். நந்திதேவர்தான் சைவ சமயத்தின் முதல்
    ஆசிரியர் ஆவார். இவரை வணங்கிய பின்னர்தான் சிவ
    வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

        அடுத்துப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம்
    காணப்பெறும். இது கல்லாலமரத்தின் கீழ் சனகர், சனந்தனர்,
    சனாதரர், சனற்குமாரர் என்ற நால்வர்க்கும் உபதேசம்
    செய்கின்ற வடிவம் ஆகும்.

        அதன்பின் கருவறைக் கோட்டத்தில் (சன்னல் போன்ற
    அமைப்பு) அண்ணமலையார் வடிவம் இருக்கும். இது பிரமனும்
    திருமாலும் அடிமுடி தேடிய வரலாற்றைக் குறிப்பதாகும்.
    சிவலிங்க வடிவத்தின் இலிங்கம் மட்டுமே இதில் காணப்பெறும்.

        அடுத்துக் கருவறையில் வள்ளி தெய்வானையோடு கூடிய
    முருகன் உருவம் அமைந்திருக்கும். முருகனுக்கு ஆறு
    திருமுகங்களும், பன்னிரு கைகளும் உடைய உருவம்
    அமைக்கப் பெற்றிருக்கும். அடுத்தது     அடியார்களில்
    முன்னவராகிய சண்டிகேசுவரர் திருக்கருவறை அமைந்திருக்கும்.
    இவர் சிவனடியார்களில் ஒருவர். அமர்ந்த கோலத்தில் மனித
    வடிவில் உள்ளவர். முருகனுக்கும் சண்டிகேசுவரர்க்கும்
    இடையில் உள்ள கோட்டங்களில் நான்கு தலைகளோடு கூடிய
    பிரம்மா, காளி வடிவத்தோடு கூடிய கொற்றவை உருவங்கள்
    அமைந்திருக்கும். அதன்பிறகு ஆடவல்லான் எனப்படும்
    நடராசரின்     அம்பலம்     காணப்படும். இறைவனுடைய
    ஐந்தொழிலைக் காட்டுகின்ற நடராசரின் வடிவம் சைவ
    சித்தாந்த வடிவமாகவே அமைக்கப் பெற்றிருக்கும்.

        இதனை அடுத்துப் பைரவர் உருவம் அமைந்திருக்கும்.
    நாய் என்ற விலங்கின் வடிவத்தோடு நின்ற வடிவில் காட்சி
    தரும் இவ்வுருவம் எல்லாத் தத்துவங்களையும் வெளிப்படுத்தி
    ஆன்மாக்களை ஈடேற்றும் வடிவம் ஆகும். உலகப் பற்றையும்,
    உடல் பற்றையும் விட வேண்டும் என்ற தத்துவத்திற்கேற்ப
    ஆடையில்லாது இவ்வுருவம் காணப்படும். அதன்பின் ஒன்பது
    கோள்களாகிய நவக்கிரகங்களின் வடிவங்களும், சூரிய, சந்திர
    வடிவங்களும் காணப்பெறும். இத்தகைய தெய்வ உருவங்கள்
    மூலம் வழிபடுகின்ற வழிபாடு இலிங்க வழிபாடு எனப்படும்.

        இத்தகைய உருவங்களுக்கு நடுவில் கோயிலின்
    மையமாக அமைந்திருப்பது சிவலிங்க உருவமாகும். சிவலிங்கம்
    சிவபெருமானின் அருவுருவத் திருமேனி ஆகும். சிவலிங்க
    வடிவம் பீடம், ஆவுடை, இலிங்கம் என்ற மூன்று பாகங்களைக்
    கொண்டதாகும். பீடம் பிரம்ம வடிவமாகும். அதற்கு மேலே
    உள்ள ஆவுடை விஷ்ணு பாகம் ஆகும். ஆவுடைக்கு மேல்
    உள்ள நீண்டுள்ள இலிங்க வடிவம் உருத்திரனைக்
    குறிப்பதாகும். எனவே பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற
    மும்மூர்த்திகளின் உள்ளடக்கமே இலிங்கம் என்று கூறப்பெறும்.
    இந்த இலிங்கம்பற்றிய செய்தி மிக விரிந்த செய்தியாகும்.
    இலிங்கபுராணம் என்ற ஒரு புராணமே உண்டு.

        அதன்பின் சக்தியாகிய உமையவளுக்குத் தனியாகக்
    கருவறை அமைந்திருக்கும். உமையவள் வடிவம் அருட்சக்தி
    வடிவம் ஆகும். கோயில்கள் அமைந்துள்ள இடங்களுக்கு
    ஏற்ப உமையவளின் பெயர்களும் மாறி மாறி வழங்கப் பெறும்.
    சிவபெருமானுக்கு எதிரே நந்தி வடிவம் இருக்கும். சில
    திருக்கோயில்களில் சக்தியின் வாகனமாகிய சிங்க வடிவம்
    இருக்கும்.

        இவ்வாறு திருக்கோயில் அமைப்பில் பல்வேறு
    உருவங்களில் சிவபெருமானைக் கண்டு வழிபடுகின்ற வழிபாடே
    குரு, இலிங்க, சங்கம என்ற மூவழிபாட்டில் இலிங்க
    வழிபாடாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:24:50(இந்திய நேரம்)