Primary tabs
-
4.5 குரு, சங்கம வழிபாடு
சைவ சமயத்தின் மற்ற இரு வழிபாடாகிய குரு, சங்கம
வழிபாடு தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த வழிபாடாகும்.
சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று
இறைவனுடைய திருவருளைக் குருவின் மூலமாகத்தான் பெற
முடியும் என்பதாகும். குரு என்பவர் உயிர்களின் பாசங்களை
நீக்குபவர் ஆவார். இறைவனைப் பற்றிய தத்துவங்களைக் கூறி
இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு வழிகாட்டுநர் குரு
ஆவார். இக்குருவின் மூலமாக உபதேசமாகிய திருவருளைப்
பெற்று அதன்மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
குருவிடம் ஞான நூல்களைக் கேட்கும் பொழுது பக்தியுடன்
இருந்து கேட்க வேண்டும். குருவின் உபதேசப்படி ஒழுக
வேண்டும். குருவிற்குச் செய்யும் தொண்டே சிறந்த
தொண்டாகும். குருவை வழிபட்டு அருள் பெற்றவர்கள்
மாணிக்கவாசகர், திருமூலர், மங்கையர்க்கரசியார்,
அப்பூதியார் ஆகிய அடியார்கள் ஆவர்.சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களின்
திருக்கூட்டத்தை வணங்குகின்ற வழிபாடாகும். சிவனடியார்கள்
என்பவர்கள் சிவபிரானிடம் மெய்யன்பு கொண்டவர்கள்.
சிவச்சின்னங்களாகிய திருநீறு, உருத்திராக்கம் அணிந்தவர்கள்.
இத்தகைய திருச்சின்னங்களோடு சிவனுக்குத் தொண்டாற்றி
அவனுடைய அருளைப் பெற்றவர்கள் ஆவார்கள்.
அடியார்களைச் சிவபெருமானாகவே பாவித்து அவர்களுக்குத்
தொண்டுகள் செய்து வழிபடுவது சங்கம வழிபாட்டின்
சிறப்பாகும். சிவனடியார்களை வழிபடுகின்ற சங்கம வழிபாடு
சைவ சமயத்தில் சிறப்பிடம் பெற்றதாகும். பெரிய புராணத்தில்
கூறப்படும் அடியார்களில் பலர் இத்தகைய சங்கம
வழிபாட்டால் இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள்
ஆவார்கள். இச்சங்கம வழிபாட்டில் கருவிகளாகப்
பயன்படுபவை உருத்திராக்கமும், திருநீறும் ஆகும்.