Primary tabs
-
6.0 பாட முன்னுரை
கடவுள், உயிர், மனிதவாழ்வு ஆகியவற்றை ஆய்ந்து
தெளிவது மெய்ப்பொருள் இயல் என்பதாகும். மெய்ப்பொருளியல்
சமயத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே
மெய்ப்பொருளை ஆராயாத நாடுகள் உலகில் இல்லை எனலாம்.
இந்தியநாடு இந்த ஆராய்ச்சியில் மிகவும் தொன்மை பெற்ற
நாடாகும். மெய்ப்பொருளியல் ஆய்வில் கிரேக்கமே முன்னணியில்
இருப்பதாக உலக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால்
கிரேக்கத்தில் ‘தத்துவம்’ துளிர்க்கத் தொடங்கிய கி.மு. 5ஆம்
நூற்றாண்டிலேயே இந்தியா தத்துவத் துறையில் செழித்தோங்கி
வளர்ந்து நிலைபெற்றிருந்தது என்று டாக்டர் இராதாகிருட்டிணன்
அவர்கள் மெய்ப்பொருளியல் வரலாறு என்ற நூலில் தெரிவிக்கிறார்.
அவருடைய கொள்கை மெய்ப்பொருள் இயல் வரலாற்றை
ஆராயவேண்டும் என்றால் அதனைக் கிரேக்கத்திலிருந்து
தொடங்காது பாரத நாட்டிலிருந்து தொடங்கவேண்டும் என்பதாகும்.
தத்துவங்களை உள்ளடக்கிய மெய்ப்பொருளியல் என்பதைக்
குறிக்கும் ஆங்கிலச் சொல் பிலாசபி என்பதாகும். இச்சொல்
கிரேக்க வார்த்தைகளின் கூட்டுச் சொல் என்பர். இதற்கு
ஞானத்தைத் தேடுதல் என்பது பொருளாகும். ஆனால்
பாரதத்தில் மெய்ப்பொருள் இயலுக்கு நிலைபேறுடையதைப்
பற்றிச் சிந்தித்தல் என்ற பொருள் வழங்கி வருகிறது.மேலும் தத்துவம் என்பதற்குக் கொள்கைகள் அல்லது
சிந்தனை முடிவுகள் என்ற பொருளும் பாரத நாட்டில் வழங்கி
வருகின்றது. இவ்வாறு மெய்ப்பொருள் இயலை வெளிப்படுத்துகின்ற
தத்துவம் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் வழங்கி
வந்தாலும் சைவத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேரிடையான
பொருள் உண்மை என்பதாகும். உண்மைப் பொருள் என்பது
நிலையான பொருள்களைக் குறிக்கும். சைவத்தில் உண்மைப்
பொருள்கள் மூன்றாகும். கடவுள், உயிர், மலம் என்பன
அம்மூன்றாகும். இவை நிலையானவை. இவை பற்றிய
கொள்கைகளை விளக்குவனவே சைவத் தத்துவங்களாகும். சைவத்
தத்துவங்களின் குறிப்புகளை இப்பாடத்தில் அறியலாம்.