Primary tabs
-
6.2 சைவ சித்தாந்தம்
வேத, சிவ ஆகமங்களின் அடிப்படையில் பிரிக்கப் பெற்ற
நால்வகைச் சமயக் கொள்கைகளுக்கும் மலோகச் சித்தாந்தம் என்ற
கொள்கை தனித்து நின்றது. சித்தாந்தம் என்ற சொல்லுக்குப்
பொருள் முடிந்த முடிபு என்பர். இந்தக் கொள்கைக்குரிய இறைவன்
சிவபெருமான் ஆவான். சிவபெருமானால் அருளிச் செய்யப்
பெற்றன சிவ ஆகமங்கள் ஆகும். சிவஆகமங்கள் 28ம் சிறப்பாகக்
கொள்ளப் பெற்றுச் சித்தாந்தக் கொள்கைள் வரையறுக்கப் பெற்றன.
சித்தாந்த நூல்கள் வேதங்களைப் பொது நூலாகவும், ஆகமங்களைச்
சிறப்பு நூலாகவும் கொண்டு சித்தாந்தக் கொள்கைகளை
வரையறுத்தன என்று கூறப்படுகின்றது. பின்னால் சைவசித்தாந்தக்
கொள்கைகளை வரையறுப்பதற்கு வேத ஆகமங்களோடு சைவத்
திருமுறைகள் பிரமாண நூல்களாகக் கொள்ளப்பட்டன. அவை
சிவனருள் பெற்ற ஞானிகளால் பாடப்பெற்றன. எனவே இந்தியத்
தத்துவ ஞானத்தில் சைவசித்தாந்தம், வேத ஆகமங்கள்,
திருமுறைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தத்துவக்
கொள்கைகளை வரையறுத்தது எனலாம்.6.2.1 சைவ சித்தாந்த உண்மைப் பொருள்கள்
சைவ சித்தாந்தத்தில் கொள்ளப்படும் பொருள்கள்
மூன்றாகும். அவை பதி, பசு, பாசம் என்பனவாகும். பதி - கடவுள்,
பசு - உயிர், பாசம் - உயிரைப் பிணிக்கும் கட்டு.
பதிப்பொருள் (கடவுள்) ஒன்று, உயிர்கள் எண்ணற்றவை.
பாசம் - ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இம்மூன்று
பொருள்களும் தனித்தனியானவை. பதியாகிய கடவுள் என்றும்
உள்ளதுபோல மற்ற இரண்டும் என்றும் உள்ள பொருள்களாகும்.
இந்த முப்பொருள்களில் எந்த ஒன்றும் ஒருகாலத்தும் ஒன்றிலிருந்து
ஒன்று தோன்றவில்லை. எனவே இம்மூன்றையும் அநாதி நித்தப்
பொருள் என்பர். இந்த மூன்று பொருள்களைப் பற்றிய
அடிப்படைக் கொள்கை 'இல்லது தோன்றாது உள்ளது அழியாது’
என்பதாகும். இதற்குச் சற்காரியவாதம் என்று பெயர். அதாவது
மூன்று பொருள்களும் என்றும் உள்ளவை. அதனால்
தோன்றியுள்ளன. அவை என்றும் உள்ளவை ஆதலால் அவை
அழிவதுமில்லை எனக் கொள்ள வேண்டும். இந்த மூன்று
பொருள்களில்தான் ஏனைய பொருள்கள் தோன்றி ஒடுங்குகின்றன.
இம்மூன்று பொருள்களின் இயல்புகளே இலக்கணமாக வகுக்கப்
பெறும். அது பொது இலக்கணம் என்றும் சிறப்பு இலக்கணம்
என்றும் இரண்டு வகைப்படும். பொது இலக்கணத்தைத் தடத்த
இலக்கணம் என்றும் சிறப்பு இலக்கணத்தைச் சொரூப
இலக்கணம் என்றும் கூறுவர். இவ்விரண்டு இலக்கணங்களை
விளக்குகின்ற பொழுது சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள்
வரையறுக்கப் படுகின்றன.உலகத்துப் பொருள்களை எல்லாம் எண்ணல், எடுத்தல்,
முகத்தல், நீட்டல் என்ற அளவைகள் மூலம் அளந்து அறிந்து
தெரியப்படுத்தல் உண்டு. அதுபோலச் சைவ சித்தாந்தத்தின்
அடிப்படைப் பொருள்களான பதி, உயிர், பாசம் என்ற
முப்பொருள்களை அளந்து அறிவதற்கு அளவைகள்
பயன்படுகின்றன. அந்த அளவைகளைக் கொண்டே
முப்பொருள்களின் தத்துவங்களைச் சிவதத்துவ ஞானிகள் வகுத்துக்
காட்டியுள்ளனர். மணிமேகலைக் காப்பியத்தில் தத்துவ அளவைகள்
பத்து கூறப்பெற்றுள்ளன. காட்சி, கருதல், உவமம், ஆகமம்,
அருத்தாபத்தி, இயல்பு, ஐதீகம், அபாவம், மீட்சி,
உண்டாம்நெறி என்பன அவை. இத்தகைய பத்து அளவைகளில்
சைவசித்தாந்த ஞானிகள் மூன்று அளவைகளை முக்கிமாகக்
கொண்டுள்ளனர். அவை காட்சி, கருதல், உரையளவை என்பன.
“அளவை, காண்டல், கருதல், உரை என்று இம்மூன்றில்
அடங்கிடுமே” என்று சிவஞானசித்தியார் குறிப்பிடும்.காட்சி அளவை என்பது காண்டல் அளவை என்று
குறிக்கப் பெறும். இதனை வடநூலார் பிரத்தியட்ச பிரமாணம்
என்பர். எதிர்ப்பட்ட பொருளை அறிவதற்குக் கண்ணால்
காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதுண்டு.
இதனையே காட்சி அளவை என்பர். அதாவது எந்தப் பொருளைக்
கண்ணால் காண்கின்றோமோ அந்தப் பொருளை உள்பொருள்
என்று உணர்வது. ‘கண்ணால் காண்பதே காட்சி’ என்பது பழமொழி.தொலைவில் உள்ள ஓரிடத்தில் புகையைக் கண்ட ஒருவன்
அங்கு நெருப்பு உண்டு என்று கருதுவது கருதல் அளவையாகும்.
இதனை அனுமான அளவை என்று கூறுவர். உரையளவை
என்பது நூல்களின் வாயிலாகப் பொருள்களின் உண்மை நிலையை
அறிவது. அதாவது இறைவனாலோ அல்லது ஞானிகளாலோ
கூறப்பெற்ற (உரைக்கப் பெற்ற) நூல்களின் வாயிலாகப்
பொருள்களின் நிலையை உணர்வது. இம்மூன்று அளவைகளின்
மூலமாகப் பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருள்களின் உண்மை
நிலையைப் பற்றிச் சைவசித்தாந்த தத்துவ ஞானிகள்
குறிப்பிட்டுள்ளனர். அவற்றைக் காண்பது இப்பாடத்தின் நோக்கம்.