Primary tabs
-
6.1 இந்தியத் தத்துவங்கள்
பாரதி பாடியது போல் பாரதநாடு பழம்பெரும் நாடாகும்.
பாரத நாட்டின் பெருமைகளில் ஒன்று நாட்டிடை நிலவும்
தத்துவ ஞானம். இந்தியத் தத்துவ ஞானம் இந்தியர்களுக்குப்
பரம்பரைச் சொத்தாகும். தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை
என்பது பொருள். தத்துவஞானம் என்பது உண்மையை அறிவது
என்று பொருள்படும். என்றும் உள்ளதைத்தான் உண்மைப் பொருள்
என்பர். அதன்படி மண்ணில் என்றும் உள்ள பொருள் யாது
என்பதை ஆராய்ந்தறிந்து அதன் இயல்புகளையும் ஆராய்ந்து
அறிவது இன்றையத் தேவையாகும். மேலைநாடுகளில் தத்துவ
ஆராய்ச்சி நிகழ்வதற்கு முன்னமேயே கீழைநாடுகளில் ஒன்றான நம்
இந்தியாவில் தத்துவ ஆராய்ச்சி வேரூன்றியிருந்தது.இந்தியத் தத்துவ ஞான ஆராய்ச்சி வேதங்களின்
அடிப்படையில் முதன் முதலில் தோன்றியது என்பர். அதனை
வழங்கிய இந்தியத் தத்துவ ஞானிகளை இருவகையாகப் பிரிக்கலாம்.
ஒரு பிரிவினர் வேதங்களில் - உபநிடதங்களில் உள்ள கருத்துகளை
ஏற்றுக் கொண்டவர்கள். மற்றொரு பிரிவினர் வேத உபநிடதக்
கருத்துகளை ஏற்றுக் கொள்ளாது பிறிதொரு வகைத் தத்துவக்
கோட்பாடுகளை முன் வைத்தவர்கள். முன்னவர்கள் வைதிகர் என
அழைக்கப் பெற்றனர். சாங்கியம், யோகம், நையாயிகம்,
மீமாம்சம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய தத்துவங்களை
உடையவர்கள் அத்தகையவர் ஆவர். வேத உபநிடதங்களை
ஏற்காதவர்கள் அவைதிகர் எனப்பட்டனர். உலகாயதர், சமணர்,
பௌத்தர் ஆகியோர் அவ்வகையினர். வைதிக - அவைதிகக்
கொள்கைகளை வெளிப்படுத்தியவையே ஆரம்பகால இந்தியத்
தத்துவங்கள்.வேதம் என்ற வடசொல் வித் என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது. அதன் பொருள் அறிதல் என்பதாகும். எனவே வேத
நூல்கள் என்பன அறிவு நூல்களைக் குறித்தன. உலகம், உலக
வாழ்க்கை இவற்றைப் பற்றி அறிவுறுத்த எழுந்தனவே வேத நூல்கள்.
இவ்வேத நூல்களின் காலம் ஏறக்குறைய இன்றைக்கு 3500
ஆண்டுகட்கு முற்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இவ்வேதங்களை மனிதர்கள் ஆக்கவில்லை என்பதும், மானிடத்திற்கு
அப்பாற்பட்ட இறைவனால் ஆக்கப் பெற்றவை என்பதும் தத்துவ
ஞானிகள் கருத்து. இவ்வேதங்கள் ரிக், யசுர், சாமம், அதர்வணம்
என்ற நான்காகும் என்பது தொன்று தொட்டு வரும் மரபு ஆகும்.
வேதத்தின் இறுதிப்பகுதியாக உபநிடதங்கள் விளங்குவதால்
வேதாந்தம் (வேத + அந்தம் = வேதாந்தம்; அந்தம் - இறுதி.)
என்ற பெயரும் உபநிடதங்கட்கு உண்டு. இவ் உபநிடதங்களை
ஆக்கியவர்கள் ஞான முனிவர்கள் என்பர். அவர்களுடைய
வரலாறுகள் கிடைக்கவில்லை. உபநிடதம் என்ற சொல்
ஆர்வத்தோடு அருகிருந்து கேட்டல் என்ற பொருளைத் தரும்.
ஆதலால் ஆசிரியர் சீடனுக்கு உபதேசித்தல் முறையில்
உபநிடதங்கள் அமைந்தன. இத்தகைய உபநிடதங்கள்
இருநூற்றுக்கும் மேற்பட்டவை என்று கூறுவர். குறிப்பிட்ட சில
உபநிடதங்களே தத்துவ ஞானத்திற்கு உட்பட்டவை ஆகும்.வேதங்கள் வேள்விகளை ஆதரித்தன. ஆனால்
உபநிடதங்கள் வேள்விகளை ஏற்காது ஏளனம் செய்தன. இந்த
நிலையில் இந்தியத் தத்துவஞானம் வெகுகாலம் வரை வேத -
உபநிடதங்கள் அளவிலேயே ஆட்பட்டிருந்தது. வேதத்தில்
கூறப்பெற்ற பலதெய்வ வழிபாட்டு முறை மாறி - உபநிடத
காலத்தில் பிரம்மம் என்ற முழுமை நிறைந்த தத்துவ மூலப் பொருள்
வழிபாட்டிற்கு உரியதாக அமைந்தது. உபநிடதங்கள் பல்வேறு
கோணத்தில் பலரால் ஆக்கப் பெற்றமையால் - அவைகளுக்கு
இடையே இருந்த முரண்பாடுகளை அகற்றப் பிரம்மசூத்திரம்
எழுந்தது. பகவத்கீதை உள்ளிட்ட பிரமாண நூல்களும் எழுந்தன.
இந்தியத் தத்துவ ஞானம் இதன்மூலம் விரியத் தொடங்கியது.பிரம்ம சூத்திரத்திற்கு உரைகள் தோன்றின. அவ்வுரைகளைத்
தந்த ஞானிகளால் புதிய தத்துவ ஞானங்கள் தோன்றின. அவைதான்
சங்கரர், இராமானுசர், மத்துவர் போன்றவர்களால் தோற்றுவிக்கப்
பெற்ற மதங்கள். இத்தகைய மதத்தத்துவங்கள் தோன்றி வளர்ந்த
காலத்தில் இந்தியாவின் மற்றொரு பக்கத்தில் நாத்திகம் என்ற
கடவுள் மறுப்புக் கொள்கையும் தோன்றி வளர்ந்தது. பகுத்தறிவுத்
தத்துவமும் இந்தியா முழுவதும் பரவலாகச் செழித்து வளர்ந்தது.
அத்துடன் நில்லாது மதக் கடவுளர் நிலையில் போராட்டங்களும்
நிகழ்ந்தன. சிவனா - விஷ்ணுவா என்ற சமயப் போராட்டங்கள்
இதனுள் அடங்கும். எனவே இந்தியத் தத்துவஞானம் அறிவு
நிலையில் வளர்ந்த அதே வேளையில் முரண்பாடுகளால் மனித
வாழ்வைப் பாதிக்கக் கூடிய சமய முரண்பாட்டுப்
போராட்டங்களுக்கும் இடம் கொடுத்தது என்பதைப் பார்க்கலாம்.இந்திய நாட்டின் அரசியல் சூழல் இந்தியத் தத்துவத்தைப்
பாதிக்கச் செய்தது. இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சியால் இஸ்லாமும்,
கிறித்தவர்கள் வணிகம் காரணமாக இந்திய மண்ணில் தங்கியதால்
கிறித்தவமும் இந்திய நாட்டில் பரவி இந்தியத் தத்துவ ஞானத்திற்குச்
அறைகூவலாக அமைந்தன. இத்தகைய நெடிய வரலாற்றைக்
கொண்டது இந்தியத் தத்துவ ஞானம் என்பதை உணரவேண்டும்.இந்தியத் தத்துவ ஞானங்கள் எத்தகு காலத்தில்
தோன்றியவை என்பது வரையறுக்க முடியாததாகும். காலத்திற்குக்
காலம் உண்மைப் பொருளை உணர்த்த வந்த ஞானிகள்
தங்களுடைய தத்துவக் கொள்கைகளை வேதங்களாக,
அறநூல்களாகப் படைத்து மொழிந்தார்கள். இவை பெரும்பாலும்
தொடக்க காலத்தில் குரு பரம்பரையாக ஒருவருக்கொருவர்
கூறப்பெற்று வந்தன. அதாவது கொள்கையை வகுத்த ஞானி
ஆசிரியராகவும் அதை உணரத் தலைப்பட்டவர் மாணவராகவும்
அமைந்தனர். மாணவர் தனக்கு ஆசிரியர் உரைத்த
கொள்கைகளைக் கேட்டுச் சிந்தித்துத் தனக்குப் பின்னால்
வந்தவர்களுக்கு அக்கொள்கைகளைக் கூற, அவர்கள்
தங்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு கூற, இவ்வாறு ஒருவர் பின்
ஒருவராகத் தத்துவக் கொள்கைகளை அறிந்தார்கள்.
வாய்மொழியாக இது நடைபெற்றது.எழுத்து வழக்கம் உலகில் தோன்றிய பிறகு அவை
நூல்களாக எழுதப் பெற்றன. பின், பதிப்புக் காலத்தில் பதிப்பிக்கப்
பெற்றன. இதனைத்தான் குரு பரம்பரை என்பர். இந்தியத் தத்துவ
ஞானத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துமத
அமைப்பில் சைவ, வைணவ ஞானிகள் கொள்கைகளை வகுத்தனர்.
வேதங்கள் தோன்றிய காலத்திலோ அல்லது அவற்றின் பின்னரோ
இந்துமத ஞானிகள் ஆகமங்கள் என்ற பிரமாணத்தையும் ஏற்றனர்.
பிரமாணம் என்பது தத்தம் கொள்கைகளுக்குச் சான்றாகக்
கொள்வதாகும். வேதங்கள் எப்படி மனிதனால்
படைக்கப்படவில்லையோ அதுபோல ஆகமங்களும் மனிதர்களால்
படைக்கப்படவில்லை என்ற நம்பிக்கை உண்டு. இந்த ஆகமங்கள்
சிவன், விஷ்ணு ஆகிய கடவுளரால் தத்துவ ஞானிகளுக்கு அருளிச்
செய்யப்பட்டவை ஆகும். இவற்றில் சதாசிவம் என்ற
சிவபெருமானின் ஐந்துமுகத் தோற்றத்திலிருந்து சிவ ஆகமங்கள்
அருளப் பெற்றன என்று கூறுவர். இவை 28 என்பர். இந்த
ஆகமங்களும் நால்வகை வேதங்களும் இந்து மதத்தில்
சைவத்திற்குரிய பிரமாண நூல்கள் என்று சொல்லப்படுகின்றன.இந்தப் பிரமாண நூல்களைத் தமிழகத்துச் சைவத்
தத்துவஞானிகள் எடுத்துக் காட்டியுள்ளனர். “வேதமோடு ஆகமம்
மெய்யாம் இறைவன் நூல்” என்று திருமூலர் திருமந்திரம்
குறிப்பிடுகிறது. மேலும் சிவஞான சித்தியார் என்ற சாத்திர நூலும்
“அருமறை ஆகமம் முதல் நூல்” என்று குறிப்பிடுகிறது. 28
ஆகமங்களைப் பல நூல்கள் வரையறுத்துக் காட்டியுள்ளன. இந்த
ஆகமங்கள் வடமொழியில்தான் முதலில் கூறப்பெற்றன என்றும்,
இல்லை தமிழில்தான் முதலில் கூறப்பெற்றன என்றும் இருவேறு
கருத்துகள் உள்ளன. என்றாலும் பின்னால் வந்த சைவத்
தத்துவங்களுக்கு ஆகம நூல்கள் அடிப்படையான அல்லது
பிரமாண நூல்களாக விளங்கின என்பது மட்டும் உண்மை.
எனவே பாடப் பகுதி நிலையில், இந்தியத் தத்துவ ஞானத்தில்
முதல் கூறான வேதங்களும் அவற்றோடு உடன் தோன்றிய
ஆகமங்களும் சைவ தத்துவக் கொள்கைகளுக்கு முதன்மையான
நூல்கள் என்பதை உணரலாம்.தொடக்கத்தில் கூறியபடி வேதங்களை, ஆகமங்களை ஏற்றுக்
கொள்ளாத மதங்கள் புறச்சமயங்கள் என்றும், ஏற்றுக்கொண்ட
மதங்கள் அகச் சமயங்கள் என்றும் தத்துவ ஞானிகள் பிரித்தனர்.
அதாவது வேதங்களும் ஆகமங்களும் கடவுள் உண்டு என்பதைக்
கூறுவன ஆகும். ஆனால் புறச் சமயங்கள் அவற்றை ஏற்றுக்
கொள்ளாது கடவுள் கொள்கையில் மாறுபட்டிருந்தன. அவை
பௌத்தம், சமணம் முதலிய அவைதிக மதங்களாகும். இந்த அகம்,
புறம் என்பவற்றை மேலும் நான்காக விரித்தனர். அவை
அகச்சமயங்கள், அகப்புறச்சமயங்கள், புறச்சமயங்கள்,
புறப்புறச்சமயங்கள் என்பனவாம்.வேத ஆகமங்களுக்கு முழுமையும் உடன்படாதவை
புறப்புறச் சமயங்கள் எனப்பட்டன. அவை உலகாயதம்,
பௌத்தம், சமணம் என்பன. வேதத்திற்கு உடன்பட்டுச் சிவ
ஆகமத்திற்கு உடன்படாதவை புறச் சமயங்கள் ஆகும். அவை
தருக்கம், மீமாம்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம்,
பாஞ்சராத்திரம் என்பனவாகும்.அடுத்து, வேத சிவ ஆகமங்களை உடன்படினும்
அவைகளைப் பொதுவாகக் கொண்டு தங்களுக்குரிய நூல்களைச்
சிறப்பாகப் போற்றுவன அகப்புறச் சமயங்கள் எனப்பட்டன.
அவை பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்,
ஐக்கியவாதம் என்பன. வேத ஆகமங்களைச் சிறப்பாகப்
போற்றினாலும் அவற்றிற்குரிய உண்மைப் பொருளை உணராது
பொருள் வேறுபாடு கொண்டவை அகச்சமயங்கள் ஆகும். அவை
பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம்,
சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம்,
சிவாத்துவித சைவம் என்பனவாகும். எனவே வேத சிவ
ஆகமங்களின் நிலையில் இந்திய நாட்டில் மதங்கள் பிரிந்தன எனக்
கொள்ளலாம்.