Primary tabs
-
4.1 நவ பதார்த்தம்
சமண சமயத் தத்துவத்தில் ஒன்பது பொருள்கள்
கூறப்படுகின்றன. இவற்றை நவ பதார்த்தம் என்று சமணர்கள்
குறிப்பிடுவர். நவ என்றால் ஒன்பது; பதார்த்தம் என்றால்
பொருள். அதாவது ஒன்பது பொருள். அவை:- ஜீவன் என்கிற உயிர்
- அஜீவன் என்கிற உயிரல்லது
- புண்ணியம்
- பாவம்
- ஆஸ்ரவம் என்கிற ஊற்று
- ஸம்வரை என்கிற செறிப்பு
- நிர்ஜரை என்கிற உதிர்ப்பு
- பந்தம் என்கிற கட்டு
- மோட்சம் என்கிற வீடு
நவ பதார்த்தங்களில் முதன்மையாகப் பேசப்படுவது உயிர்
ஆகும். சமண சமயத்தார் உயிர்களை ஐந்து வகையாகப் பிரிப்பர்.
அவை:- ஓரறிவு உயிர்
- ஈரறிவு உயிர்
- மூவறிவு உயிர்
- நாலறிவு உயிர்
- ஐயறிவு உயிர்
இவற்றுள் ஐயறிவு உயிர் பகுத்தறிவு உடையவை என்றும்,
● உயிர்களின் இயல்புகள்
பகுத்தறிவு இல்லாதவை என்றும் இரு வகைப்படும்.- உயிர்கள் எண்ணிலடங்காதவை
- உயிர்கள் அழிவில்லாதவை
- உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை
- உயிர்கள் நல்வினை, தீவினைகளைச் செய்கின்றன.
அதாவது பாவ, புண்ணியங்களைச் செய்கின்றன. - உயிர்கள், தாம் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப
இன்ப, துன்பங்களைப் பெறுகின்றன. - உயிர்கள் செய்த செயல்களுக்கு ஏற்ப நரக கதி, விலங்கு
கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு நிலைகளில்
ஒன்றை அடைகின்றன. - நல்வினை, தீவினைகளில் இருந்து நீங்கிய உயிர்கள்
பிறவாத நிலையான பேரின்ப வீட்டினை (மோட்சத்தை)
அடைகின்றன.
‘பெரியதன் ஆவி பெரிது’ என்பது சமணத்தின் ஒரு
பிரிவாகிய ஆருகதரிடத்து வழங்கும் பழமொழி. அதாவது,
உடம்பின் பருமை, சிறுமைக்கு ஏற்ப உயிர் பெரியதாகவும்
சிறியதாகவும் உடல் முழுவதும் பரவி நிற்கும். எவ்வாறு எனில்,
குடத்திற்கண் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளி
காட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அந்த அறை
முழுவதும் ஒளி காட்டும். அதுபோல் உயிர் பெரியதாகப்
பரவியும் சிறியதாகச் சுருங்கியும் நிற்கும்.மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டுமே வீடுபேறு அடைய
முடியும்; பிற உயிர்கள் வீடுபேறு அடைய முடியாது, அதுவும்
துறவு பூண்டவர்கள் மட்டுமே வீடுபேறு அடைய முடியும்.
குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள இல்லறத்தார் வீடுபேறு அடைய
முடியாது.நவ பதார்த்தங்களில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது
உயிரல்லாத பொருள் ஆகும். உயிரல்லாத பொருள்கள் ஐந்து.
அவை:- புத்கலம்
- தர்மம்
- அதர்மம்
- காலம்
- ஆகாயம்
- இவற்றைக் கடவுள் படைக்கவில்லை.
- உயிர்களைப் போல் இவை நல்வினை, தீவினைகளைச்
செய்வது கிடையாது. - உயிரல்லாப் பொருள்கள் நல்வினை, தீவினைகளைச்
செய்யாமையால் பிறப்பாகிய துன்பத்தில் கிடந்து
துன்பப்படுவது கிடையாது. - இவை வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது.
இனி, மேலே கூறிய உயிரல்லாத ஐந்து பொருள்களைப் பற்றிச்
சுருக்கமாகக் காணலாம்.● புத்கலம்
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்
அவற்றால் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும் வெளிச்சமும்,
வெயிலும் நிழலும், ஒளியும், நிலம்-நீர்-நெருப்பு- காற்று என்னும்
நான்கு பூதங்களும் புத்கலத்தில் உள்ளன.இப் புத்கலம் நுண் பொருளாகவும் பருப்பொருளாகவும்
உள்ளது. இதற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம் ஆகியவையும்
உண்டு.● தர்மம் - அதர்மம்
எண்ணுதல் கூடாது. தர்மம் - அதர்மம் வேறு; புண்ணியம் -
பாவம் வேறு. தர்மம் - அதர்மம் என்பன உயிர்கள்
இயங்குவதற்கும் தங்குவதற்கும் இடமாக உள்ளன. அதாவது
மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஆறு, குளம்
போன்ற நீர்நிலைகள் பயன்படுவது போல உயிர்கள்
இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்மம் - அதர்மம்
பயன்படுகின்றன. இவை நுண்பொருள்கள் ஆகும்.● காலம்
சிறிய கால அளவு, பெரிய கால அளவு எனக் காலம்
இரண்டு வகைப்படும். இமைத்தல், நொடித்தல் முதலியன சிறிய
கால அளவு ஆகும். கற்பகாலம் முதலியன பெரிய கால அளவு
ஆகும்.● ஆகாயம்
சமண சமயக் கொள்கைப்படி, ஆகாயம் என்பது
ஐம்பூதங்களுள் ஒன்று அல்ல. மேலே காட்டிய பொருள்கள்
தங்குவதற்கு இடம் கொடுப்பது ஆகாயம் என்பது ஆகும்.செய்கின்ற நல்ல செயல்களைப் புண்ணியம் (நல்வினை)
எனலாம். நல்ல செயல்களைச் செய்ய நல்ல எண்ணங்கள்
வேண்டும். நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல சொற்கள்
வெளிப்படும். இவை இரண்டின் வழி பிறக்கின்ற செயல்களும்
நல்லனவாகவே இருக்கும். இப்புண்ணியச் செயல்களைச் செய்த
உயிர் மனிதராகவும், தேவராகவும் பிறக்கும்.செய்கின்ற தீய செயல்களைப் பாவம் (தீவினை) எனலாம்.
தீய எண்ணங்கள் - அவற்றிலிருந்து பிறக்கும் தீய சொற்கள் -
இவற்றின் வழி தீய செயல்கள் பிறக்கும். தீய-பாவச்
செயல்களைச் செய்கின்ற உயிர் நரக கதிக்கோ அல்லது விலங்கு
கதிக்கோ சென்றடைந்து துன்பம் பெறும்.● ஊற்று
நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல நல்வினை, தீவினை
ஆகிய இரண்டு வினைகளும் உயிரில் சேர்வது அல்லது சுரப்பது
ஊற்று எனப்படும். மனம், வாக்கு (சொல்), காயம் (உடல்) என்ற
மூன்றின் வழியாக ஊற்றுகள் உயிரை வந்து சேர்கின்றன.● செறிப்பும் உதிர்ப்பும்
செறிப்பு என்றால் தடுத்தல் அல்லது அடைத்தல்.
இற்செறிப்பு என்றால் இல்லத்தில் (வீட்டில்) அடைத்தல் என்று
பொருள். ஒரு நீர் நிலைக்கு (ஏரி, குளம், ஆறு போன்றவற்றிற்கு)
நீர் வரும் வழிகளை அடைத்து விட்டால், அந்நீர் நிலையில்
மேன்மேலும் நீர் அதிகம் ஆகாமல் தடைப்பட்டுப் போய்விடும்.
அதுபோல் ஐம்புலன்களை அடக்கி உயிர்களிடத்தில் மேலும்
மேலும் இருவினைகள் (நல்வினை, தீவினை) வராதபடி தடுத்தல்
செறிப்பு எனப்படும்.நல்வினை, தீவினை உயிர்களிடத்து வராமல் தடுத்த
பின்னர், எஞ்சி நின்ற வினைகளை நீக்குவதற்கு உதிர்ப்பு என்று
பெயர்.● கட்டு
ஐம்புலன்களால் உண்டான வினைகள் பிரிக்க முடியாத
வகையில் உயிருடன் கலப்பது கட்டு எனப்படும். அதாவது
பாலுடன் நீர் கலப்பதைப் போலவும், பழுக்கக் காய்ச்சிய
இரும்பில் நீரைத் தெளித்தால் அது நீரை உறிஞ்சிக் கொள்வது
போலவும் ஆகும்.● வீடு
வினைகளிலிருந்து நீங்கிய உயிர், எல்லா உலகங்களுக்கும்
உயர்ந்த உலகமாகிய - பெறுவதற்கு அரிதான மோட்ச நிலையை
அடைவது வீடுபேறு ஆகும்.நவ பதார்த்தத்தின் உண்மையை அறிதல் நன்ஞானம்;
இவற்றின் தன்மையை ஐயமில்லாது உணர்வது நற்காட்சி. நன்
ஞானத்தையும், நற்காட்சியையும் மனத்தில் கொண்டு
செயல்படுவது நல்லொழுக்கம். நன்ஞானம், நற்காட்சி,
நல்லொழுக்கம் ஆகிய இம் மூன்றையும் மும்மணி அல்லது
இரத்தினத் திரயம் என்று சமணர் கூறுவர்.