தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாடமுன்னுரை

        மனித நாகரிகம் தொடங்கிய காலத்தில் மக்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்கே பொருட்களை உற்பத்தி செய்தனர். பொருட்கள் ‘பயன்மதிப்பு’ (Use Value) மட்டுமே கொண்டிருந்தன. நாளடைவில் சிலர் தேவைக்கு அதிகமாகவும் உற்பத்தி செய்தனர். அவர்களுக்குத் தேவையான சில பொருட்களை வேறு சிலர் உற்பத்தி செய்யக் கண்டனர். எனவே உற்பத்திப் பொருட்கள் சந்தைக்கு வந்தன. உற்பத்திப் பொருட்களுக்குப் புதிதாகப் ‘பரிவர்த்தனை மதிப்பு’ (Exchange Value) ஏற்பட்டது. பொருள் ‘பண்டம்’ (Commodity) ஆயிற்று. ‘பண்ட மாற்று’ புழக்கத்துக்கு வந்தது. பரிவர்த்தனை மதிப்பைக் கணக்கிடுவதில் இருந்த சிக்கலைத் தீர்க்கப் ’பணம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்துப் பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்புகளையும் நிர்ணயிக்கும் சர்வப் பொதுவான பண்டமாய் ’பணம்’ விளங்கலாயிற்று. பணம் பல வடிவங்களை எடுத்தது. நாளடைவில் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி பணத்திலும், பணம் செலுத்தும் முறையிலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. கணிப்பொறியும், கணிப்பொறிப் பிணையங்களும் மின்னணுத் தகவல் பரிமாற்றத்தை சாத்தியமாக்கின. இணையம் உருவானது. மின்வணிகம் வளர்ந்தது. பழைய பணம்செலுத்து முறைகள் பயனற்றுப் போயின. நவீனப் பணம்செலுத்து முறைகள் அறிமுகம் ஆயின. மின்னணுப் பணப் பரிமாற்றம் நடைமுறைக்கு வந்தது.

        தாள் வடிவிலான பணத்தை அச்சிடுவதிலும், புழங்க விடுவதிலும், பாதுகாப்பதிலும், கையோடு எடுத்துச் செல்வதிலும், கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்துவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நாளுக்கு நாள் அத்தகைய சிக்கல்கள் வளர்ந்து வருகின்றன. தாள்வழிப் பணப் பரிமற்றத்துக்கு மாற்றாக ‘அட்டைவழிப் பணப் பரிமாற்றம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. கடன் அட்டை, பற்று அட்டை, பண அட்டை எனப் பல்வேறு அட்டைகள் புழக்கத்துக்கு வந்தன. தாள்வடிவப் பணப் புழக்கத்தில் இருந்த பலவீனங்கள் பலவும் அட்டைவழிப் பணப் பழக்கத்தில் களையப்பட்டன. எனினும் இதற்கே உரிய பிரச்சினைகள் சிலவற்றை எதிர்கொள்ளச் சட்டப் பாதுகாப்பு தேவைப்பட்டது. முன்னோடியாக அமெரிக்க ஐக்கிய நாடு மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்றியது.

        இந்தியாவிலும் மின்னணுப் பணப் பரிமாற்றம் பல வடிவங்களில் வளர்ச்சி கண்டது. அதனை ஒழுங்குபடுத்த இந்திய ரிசர்வ் வங்கி முன்முயற்சி எடுத்து, தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமையை உருவாக்கியது. இந்திய வங்கிகள் அதில் பங்கெடுத்தன. மின்னணுப் பணப் பரிமாற்றம் வளர்ச்சி கண்டது. இவைபற்றியெல்லாம் இப்பாடத்தில் விளக்கமாக அறிந்து கொள்வோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:30:34(இந்திய நேரம்)