Primary tabs
-
3.3 அமெரிக்க மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டம்
ஒரு நாட்டு மக்களின் மனோபாவம், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம், கலாச்சாரம் ஆகியவை அங்கு நிலவும் பொருளாதார உற்பத்தி முறையையும், உற்பத்தி உறவுகளையும் அடிப்படையாய்க் கொண்டே அமைகின்றன. அமெரிக்க நாட்டு மக்கள் மாதம் 1000 டாலர் சம்பாதித்தால் 1200 டாலர் செலவழிப்பர். அப்போதுதான் அடுத்த மாதம் 1200 டாலர் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகம் பிறக்கும். அவ்வாறே அடுத்த மாதம் 1200 டாலர் சம்பாதிப்பர். ஆனால் 1400 டாலர் செலவழிப்பர். அவர்களுடைய இத்தகைய பொருளாதாரச் சிந்தனையே அங்குக் கடன் அட்டையின் பயன்பாடு பெருகக் காரணமாயிற்று எனலாம். அதனைத் தொடர்ந்து பற்று அட்டை, பண அட்டை, அன்பளிப்பு அட்டை போன்ற பல்வேறு அட்டைகள் பயன்பாட்டுக்கு வந்தன. தாள்வழியான பணப் புழக்கத்தைக் கூடுமான வரை குறைக்க நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் உதவியது. மின்னணுப் பணப் பரிமாற்றம் மேலும் மேலும் வளர்ச்சி கண்டது. கூடவே இயல்பாக ஏற்படும் தவறுகள், பிழைகள் காரணமாகத் தகராறுகள் ஏற்பட்டன, ஏமாற்று, மோசடிகளும் தலைதூக்கின. இவற்றுக்குத் தீர்வு காண அமெரிக்க அரசு முன்வந்தது. 1978-இல் மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்றியது. பல நாடுகள் அதுபோன்ற சட்டங்கள், நெறிமுறைகளை உருவாக்க அமெரிக்கச் சட்டம் முன்னோடியாக அமைந்தது. அமெரிக்க ஐக்கிய அரசு நிறைவேற்றியுள்ள மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் சில முக்கிய கூறுகளை இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.
3.3.1 எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
அமெரிக்க மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டம் சில குறிப்பிட்ட பணப் பரிமாற்றங்கள் தவிர்த்து மற்ற எல்லா வகையான மின்னணுப் பணப் பரிமாற்றங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றது. குறிப்பாக, ஏடீஎம் வழியான பணப் பரிமாற்றங்கள், விற்பனை முனையங்களில் நடைபெறும் பற்றுப் பரிமாற்றங்கள், அனைத்து வகையான மின்னணு வங்கிப் பணப் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுகிறது. அமெரிக்கச் சட்டம் பாதுகாப்பு அளிக்கும் மின்னணுப் பணப் பரிமாற்றச் செயலாக்கங்களைக் கீழ்க்காணுமாறு தொகுத்துக் கூறலாம்:
-
வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்படாத பணப் பரிமாற்றங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டால்
-
கணக்கு அறிக்கைகளில் தரப்பட்ட விவரங்களில் பிழைகள் இருந்தால்
-
அறிக்கைகளில் கணக்கீட்டுப் பிழை, உள்ளீட்டுப் பிழைகள் இருப்பின்
-
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட பரிமாற்றங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படாமல் விடுபட்டுப் போயிருந்தால்
-
வாடிக்கையாளரின் தற்போதைய முகவரிக்கு அறிக்கைகள், பில்கள் அனுப்பப்படாவிட்டால்
-
பில்களில் பிழையுள்ளது என்றோ, தனக்கு விதிக்கப்பட்ட கட்டணம் தவறானதென்றோ, குறிப்பிட்ட பில்பற்றிய விளக்கம் கேட்டோ வாடிக்கையாளர் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால்
சிலவகை மின்னணுப் பரிமாற்றங்கள் அமெரிக்கச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படவில்லை. முன்செலுத்திய தொலைபேசி அட்டைகள், போக்குவரத்துக் கட்டண அட்டைகள், அன்பளிப்பு அட்டைகள், மதிப்பு இருத்திய அட்டைகளுக்கு இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. இவற்றில் ஏற்படும் நட்டம், மோசடி ஆகியவற்றுக்குச் சட்டப் பாதுகாப்பு இல்லை.
3.3.2 எவ்வாறு பயன்படுத்துவது?
மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் வாடிக்கையாளருக்கு ஏற்படும் பிரச்சினை களுக்கு சட்ட விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்:
(1) பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டால்:
வாடிக்கையாளர் நிதி நிறுவனத்திலிருந்து தமக்கு அளிக்கப்பட்ட மின்னணுப் பணப் பரிமாற்ற அறிக்கையில் ஏதேனும் பிழை இருப்பதைக் கண்டறிந்தவுடன் அறுபது நாட்களுக்குள் நிதி நிறுவனத்துக்கு அப்பிழையைச் சுட்டிக்காட்டிப் புகார் அளிக்க வேண்டும். அறுபது நாட்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் புகார்களைப் புறக்கணிக்க நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புகாரைப் பெறும் நிறுவனம் பத்து நாட்களுக்குள் அதைப் பற்றி விசாரணை மேற்கொண்டு உண்மை அறிய வேண்டும். வாடிக்கையாளருக்கு விளக்கத்தைத் தெரிவிக்க, கூட ஒருநாள் எடுத்துக் கொள்ளலாம். அல்லது வாடிக்கையாளர் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்த தொகையை உடனே வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துவிட்டு, விசாரணைக்கு 45 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அறிக்கையில் பிழையேதும் இல்லையென விசாரணையில் தெரியவருமாயின் விளக்கத்தை வாடிக்கையாளருக்குத் தெரிவித்தபின் அத்தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
(2) அங்காடியில் பொருள் வாங்கியதில் பிழை ஏற்பட்டால்:அங்காடிகளில் வாடிக்கயாளர் கடன் அட்டை அல்லது பற்று அட்டையைக் கொடுத்துப் பொருள் வாங்குகிறார். அட்டை வழங்கிய நிறுவனம் மாதந்தோறும் அட்டைப் பரிமாற்ற விவரங்களைத் தொகுத்து வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கிறது. வாடிக்கையாளர் அவ்வறிக்கையில் ஏதேனும் பிழை இருப்பதைக் கண்டறிந்தால் உடன் புகார் அளிக்க வேண்டும். புகாரைக் கையாளும் வழிமுறை முன்கூறப்பட்டது போலவேதான். ஒரேயொரு வேறுபாடு என்னவெனில், புகாருக்கு உட்பட்ட தொகையை வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்தபின் புகாரை விசாரித்து உண்மையறிய 90 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
(3) கடன் அட்டை, பற்று அட்டை தொலைந்து போனால் / களவு போனால்:கடன் அட்டை தொலைந்து போனால் வாடிக்கையாளர் அடையும் இழப்பு 50 டாலருக்கு அதிகமாகாது. ஆனால் பற்று அட்டை தொலைந்து போனால், வாடிக்கையாளருக்கு ஏராளமான இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே அட்டை தொலைந்து போனதை அல்லது இழப்பு ஏற்பட்டதை உடனே நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். 48 மணி நேரத்துக்குள் தெரிவித்தால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்பு 50 டாலர் மட்டுமே. அதன்பிறகு 60 நாட்களுக்குள் தெரிவித்தால் இழப்பு 500 டாலர் ஆகும். 60 நாட்களுக்குப் பிறகு தெரிவிக்கப்பட்டால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்காது. முழு இழப்பும் வாடிக்கையாளருக்கே. எனினும் மாநிலச் சட்டத்தில் அல்லது அட்டை நிறுவன ஒப்பந்தத்தில் அதிகக் காலக்கெடு கொடுக்கப்பட்டாலோ, குறைந்த இழப்புத் தொகை வரம்பு இருந்தாலோ அதுவே முன்னுரிமை பெறும். அமெரிக்கக் கூட்டமைப்புச் சட்டவிதி பொருந்தாது.
(4) பணப் பட்டுவாடாவை நிறுத்திவைத்தல்:மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் வாடிக்கையாளரால் நடவடிக்கை தொடங்கப்பட்டபின் இடையில் பணப் பட்டுவாடாவை நிறுத்திவைக்க முடியாது. பிரச்சினையை வாடிக்கையாளரேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும். எனினும், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலிருந்து மூன்றாவது நபருக்குக் குறிப்பிட்ட காலக் கெடுவுகளில் பணம் செலுத்த முன்-அனுமதி வழங்கப்பட்ட பணப் பரிமாற்றங்களை வாடிக்கையாளரின் வாய்மொழி அல்லது எழுத்து மூலமான வேண்டுகோளின் பேரில் நிறுத்தி வைக்கலாம். வாய்மொழிக் கோரிக்கை எனில் 14 நாட்களுக்குள் எழுத்து மூலமான வேண்டுகோள் கடிதத்தை அனுப்பிவிட வேண்டும். எனினும் தனிப்பட்ட நிதி நிறுவனங்கள் பணப் பட்டுவாடா நிறுத்தம் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் உரிமைகள் வழங்கி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
(5) முன் அனுமதிக்கப்பட்ட பணப் பரிமாற்றங்கள்:வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் (ஊதியம், வைப்புத் தொகைக்கான வட்டி போன்ற) மின்னணுப் பணப் பரிமாற்றம் பற்றிய தகவலை பணம் கொடுப்பவரிடமிருந்து வாடிக்கையாளர் நேரடியாகப் பெறலாம். அல்லது வாடிக்கையாளர் சார்பாக வங்கி பெற்றுக் கொள்ளலாம். முன் அனுமதி வழங்கப்பட்ட பணப் பரிமாற்றம் எதையும் வாய்மொழி அல்லது எழுத்து மூலமான வேண்டுகோளின் பேரில் நிறுத்தி வைக்கலாம். குறிப்பிட்ட காலக் கெடுவுகளில் வாடிக்கையாளர் கணக்கிலிருந்து வரி, கட்டணம், கடன் தவணை, பில்கள் போன்ற பணம் செலுத்தல்களில், தொகையில் ஏதேனும் மாற்றம் இருப்பின் அதுபற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு. ஆனால் வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவ்விதி பொருந்தாது. அதே வங்கியில் வாடிக்கையாளரின் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு மாற்றப்படும் பணத்துக்கும் இவ்விதி பொருந்தாது.
3.3.3 வாடிக்கையாளருக்குச் சட்ட உரிமைகள்
மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டத்தின்படி, மின்னணுப் பணப் பரிமாற்றச் சேவையை வழங்கும் நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்குக் கீழ்க்காணும் தகவல்களை வழங்க வேண்டும்:
-
அனுமதி இல்லாத பரிமாற்றங்கள் தொடர்பாக வாடிக்கையாளரின் பொறுப்புகளும் கடப்பாடுகளும்.
-
புகார் தெரிவிக்க நிதி நிறுவனப் பிரதிநிதியின் தொலைபேசி எண், முகவரி போன்ற விவரங்கள்.
-
அனுமதிக்கப்படும் பரிமாற்ற வகைகள், அவற்றுக்கான கட்டணங்கள், பரிமாற்ற எண்ணிக்கை தொடர்பான வரம்புகள்.
-
வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் தகவல்கள், அறிக்கைகள், பில்கள் பற்றிய விவரங்கள்.
-
பணப் பட்டுவாடாவை நிறுத்தி வைக்கும் உரிமைகள்.
-
பிழைகள் பற்றிய புகார் அளிக்கும் நடைமுறைகள்.
-
வாடிக்கையாளர் கேட்டுக் கொண்ட சில பரிமாற்றங்களைச் செயல்படுத்தவோ, நிறுத்தி வைக்கவோ நிறுவனம் தவறிவிட்டால், அது தொடர்பாக நிறுவனத்துக்கு உள்ள கடப்பாடுகள்.
-
வாடிக்கையாளரின் சொந்த விவரங்களை மூன்றாவது நபருக்குத் தெரிவித்தால் அதற்கான சூழ்நிலை பற்றிய தகவல்.
-
வங்கிக் கணக்கு இல்லாத வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் ஏடீஎம் அட்டை, பற்று அட்டைக்கு அவர் செலுத்த வேண்டிய கட்டணம் பற்றிய விவரங்கள்.
-
நிறைவேற்றப்பட்ட பரிமாற்றங்களுக்கான ரசீது. ஆயுள் காப்பீட்டு தவணைத் தொகை செலுத்துவது போன்ற தொடர்ந்து நடைபெறும் பரிமாற்றங்களுக்கு ரசீதுகள் தேவையில்லை.
-
வாடிக்கையாளர் கணக்கின் நிலை, நடைபெற்ற பரிமாற்றம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் குறிப்பிட்ட காலக்கெடு அறிக்கைகள். அனைத்து ரசீதுகளையும் அறிக்கைகளையும் அவற்றிலுள்ள விவரங்களைச் சரிபார்த்தபின் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது வாடிக்கையாளரின் கடமையாகும். நிதி நிறுவனங்கள், குறிப்பிட்ட கடனுக்கான தவணைத் தொகையை இஎஃப்டீ செயலாக்கம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் என தன் வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது. வாடிக்கையாளர் தனது சம்பளம் மற்றும் பிற பலன்களை இஎஃப்டீ மூலம் பெற, தாம் விரும்பும் வங்கி அல்லது நிதிநிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வாடிக்கையாளருக்கு உண்டு. நிறுவன மேலாண்மை இதில் தலையிட முடியாது.
-