தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நவீனப் பணம்செலுத்தும் முறைகள்

  • 3.1 நவீனப் பணம்செலுத்தும் முறைகள்

        நாணய நோட்டுகள் வடிவிலான பணப் பரிமாற்றத்துக்கு மாற்றாகக் காசோலையையும், வரைவோலையையும் வங்கிகள் அறிமுகப்படுத்தின. அதன் காரணமாய்ப் பணம்செலுத்தும் முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது. நாளடைவில் அதிலும் சிக்கல்கள் தோன்றின. குறிப்பாகக் காசோலை வழியான பணப் பரிமாற்றத்தில் ஏமாற்றுகளும் மோசடிகளும் பெருகின. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள மனிதன் எப்போதுமே தொழில்நுட்பத்தின் துணையை நாடுகிறான். நவீனத் தகவல் தொழிநுட்ப வளர்ச்சி பல புதிய பணப் பரிமாற்ற முறைகள் உருவாக வழி வகுத்தது. அட்டைவழிப் பணப் பரிமாற்றமும், அதனைத் தொடர்ந்து இணையம்வழிப் பணப் பரிமாற்றமும் நடைமுறைக்கு வந்தன. பண நோட்டு, பணம்செலுத்து அட்டை எதுவுமே இல்லாமல் பணத்தைக் கையாள வகைசெய்யும் ‘மின்பணமும்’ சாத்தியமாயிற்று. இத்தகைய நவீன மின்னணுப் பணப் பரிமாற்ற வகைகள் பற்றியும், அவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் பணம்செலுத்து நுழைவாயில்கள் (Payment Gateways) பற்றியும், மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் நிறை-குறைகள் பற்றியும் இப்பாடப் பிரிவில் காண்போம்.

    3.1.1 மின்னணுப் பணப் பரிமாற்ற வகைகள்

        கணிப்பொறிப் பிணையங்கள் வழியாக, மின்னணுத் தகவல்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப்படும் பணப் பரிமாற்றம் ‘மின்னணுப் பணப் பரிமாற்றம்’ (Electronic Fund Transfer) என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக ‘இஎஃப்டீ’ என்று கூறுவர். இணையம்வழி நடைபெறும் பல்வேறு வகையான பணப் பரிமாற்றங்களும் ‘இஎஃப்டீ’ என்றே அழைக்கப்படுகின்றன. மின்னணுப் பணப் பரிமாற்றம் என வகைப்படுத்தப்படும் சில பணப் பரிமாற்றங்கள்:

    • பணம்செலுத்து அட்டை வைத்திருப்பவர் அங்காடிகளில் தாம் வாங்கும் பொருளுக்கு அட்டை மூலம் பணம் செலுத்துதல்.
    • ஒரு நிறுவனம் அதன் பணியாளர்களின் ஊதியங்களை அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்துதல்.
    • வாடிக்கையளர் வணிக/சேவை நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை அவருடைய அனுமதியுடன் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகச் செலுத்துதல்.
    • வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வாங்கிய பொருட்களுக்கு அல்லது பிற பில்களுக்கு நிகழ்நிலை வங்கிச் சேவை (online banking) மூலம் பணம் செலுத்துதல்.
    • பண அட்டை (cash card), சூட்டிகை அட்டகளில் (smart card) இருத்தி வைக்கப்பட்டுள்ள மின்பணத்தைச் செலவழித்தல்.
    • சர்வதேச வங்கிப் பிணையம் வழியாக மின்செய்தி மூலம் பணப் பரிமாற்றம் செய்தல்.

    3.1.2 பணம்செலுத்து நுழைவாயில்கள்

        மேற்கண்ட பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் பெரும்பாலும் ‘பணம்செலுத்து நுழைவாயில்’ (Payment Gateway) எனப்படும் தனிச்சிறப்பான தகவல் தொடர்புப் பிணையக் கட்டமைப்பு வழியாகவே நிறைவேற்றப்படுகின்றன. பணம்செலுத்து நுழைவாயில் சேவையைச் சில வங்கி/நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பணம்செலுத்து நுழைவாயிலில் அங்கம் வகிக்கும் வணிக நிறுவனங்களுக்கு இடையே மின்னணுப் பணப் பரிமாற்றம் சாத்தியம். பணம்செலுத்து நுழைவாயில் ஒரு பணம்செலுத்து வலைத்துறைக்கும் (Payment Portal: ஒரு வலையகம் அல்லது ஐவிஆர்எஸ்) ஒரு வங்கிக்கும் இடையே பணப் பரிமாற்றத்துக்கு வகை செய்கிறது. இணைய அங்காடியில் ஒரு வாடிக்கையாளர் பொருள் வாங்கும்போது பணம்செலுத்து நுழைவாயில் அப்பரிமாற்றத்தை எவ்வாறு செயல்படுத்துகிறது எனப் பார்ப்போம்.

    • வாடிக்கையாளர் இணைய அங்காடியில் வாங்கும் பொருள்களைத் தேர்வு செய்தபின் ‘சமர்ப்பி’ (Submit) என்னும் பொத்தானை அழுத்துவார். பணம் செலுத்தத் தனது கடன் அட்டை விவரங்களை உள்ளீடு செய்வார்.
    • வாடிக்கையாளரின் வலை உலாவி, விவரங்களைப் ’பாதுகாப்பான பொருத்துவாய் அடுக்கு’ (Secure Socket Layer - SSL) மறையாக்க முறையில் மறையாக்கம் செய்து வணிகரின் வலை வழங்கிக்கு அனுப்பும்.
    • வணிகரின் வலை வழங்கி அவ்விவரங்களை எஸ்எஸ்எல் பாதுகாப்புக் கொண்ட இணைப்பு வழியே பணம்செலுத்து நுழைவாயிலுக்கு அனுப்பும்.
    • பணம்செலுத்து நுழைவாயில் அவற்றை வணிகரின் வங்கிக்கு அனுப்பும்.
    • வணிகரின் வங்கி அவ்விவரங்களை அட்டைக்கு உரிய நிறுவனத்துக்கு (விசா, மாஸ்டர் கார்டு போன்றவை) அனுப்பும்.
    • அட்டை நிறுவனம் அட்டை விவரத்தைச் சரிபார்த்த பின் அட்டை வழங்கிய வங்கிக்கு விவரங்களை அனுப்பி வைக்கும்.
    • அட்டை வழங்கிய வங்கி வாடிக்கையாளரின் விவரம், அவரின் கடன் வரம்பு ஆகியவற்றைச் சரிபார்த்தபின் அனுமதிச் சான்று வழங்கும் அல்லது மறுக்கும். மறுப்பின் அதற்கான காரணத்தைத் தெரிவிக்கும் குறியீட்டையும் பணம்செலுத்து நுழைவாயிலுக்கு அனுப்பி வைக்கும்.
    • வங்கியின் மறுமொழி கிடைத்தவுடன் பணம்செலுத்து நுழைவாயில் அதனை வணிகரின் இணைய அங்காடி வலையகத்துக்கு அனுப்பும். வாடிக்கையாளர் பரிமாற்றத்தின் நிலைபாட்டை அறிந்து கொள்வார். இதே விவரம் வணிக நிறுவனத்துக்கும் அறிவிக்கப்படும்.

        மேற்கண்ட அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் இரண்டு அல்லது மூன்று வினாடிகளில் முடிவடைந்துவிடும். வணிக நிறுவனம் வாடிக்கையாளர் தேர்வுசெய்த பொருள்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைக்கும். வணிகர் அனுமதிச் சான்றளிக்கப்பட்ட விற்பனை விவரங்களைத் தொகுத்து வங்கிக் கிளைக்கு அனுப்பி வைப்பார். வங்கி, விற்பனையின் மொத்தத் தொகையையும் வணிகரின் கணக்கில் வரவு வைக்கும். வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து அவரவர் பொருட்கள் வாங்கிய தொகை கழிக்கப்படும். வாடிக்கையாளரும் வணிகரும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருப்பின் இந்தப் பரிமாற்றம் எளிதாக நடந்து முடியும். வெவ்வேறு வங்கிகள் எனில் பணம்செலுத்து நுழைவாயில் வழியான தகவல் பரிமாற்றம் மூலம் பற்றும் வரவும் அந்தந்த வங்கிகளில் செயல்படுத்தப்படும். அனுமதிச் சான்றளிப்பு தொடங்கி வங்கிக் கணக்குகளில் பற்று வரவு நடைபெறுவது வரையிலான அனைத்துச் செயலாக்கங்களும் மூன்று நாட்களில் முடிந்துவிடும்.

    3.1.3 மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் நிறை-குறைகள்

        மரபுவழியான பணப் பரிமாற்றம் காசோலை, வரைவோலை, அஞ்சல், தந்தி மூலமாக நடைபெற்று வருகிறது. காசோலை, வரைவோலைப் பரிமாற்றங்கள் தாள் அடிப்படையிலானவை. பணம் செலுத்துபவர் ஒரு வங்கிக் கிளையில் பணத்தைச் செலுத்திக் கேட்பு வரைவோலையைப் (Demand Draft) பெறுகிறார். அதனைப் பணம் பெறுபவர்க்கு அஞ்சல் அல்லது செய்தியேந்தி (Courier) மூலம் அனுப்பி வைக்கிறார். வரைவோலையைப் பெறுபவர் அதனைத் தனது வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கிறார். வரைவோலை அதனை வழங்கிய வங்கியின் சேவைக் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்ட தொகை பணம் பெறுபவரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தப் பரிமாற்றம் நடந்து முடிய ஐந்து முதல் பத்து நாட்கள் வரை ஆகலாம். அஞ்சல்வழி, தந்திவழிப் பணப் பரிமாற்றத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாளில் பணம் கிடைத்துவிடும். ஆனால் பணம் அனுப்புவரும் பணம் பெறுபவரும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பின் தாள்வழிச் செயலாக்கம் நிறையவே நடைபெற வேண்டும். அங்காடிகளில் பொருள் வாங்கக் காசோலைகள், வரைவோலைகள் பயன்படா. ஆனால் மின்னணுப் பணப் பரிமாற்றம் உடனடியாக நடந்து முடிந்து விடுகிறது. இடையாளியாய் இருந்து பணம்செலுத்து நுழைவாயில்கள் மின்னணுப் பணப் பரிமாற்றங்களைக் குறையின்றி செவ்வனே நிறைவேற்றி வைக்கின்றன. நாம் முந்தைய பாடத்தில் அறிந்து கொண்ட மின்னணுத் தகவல் பரிமாற்றத்தின் பலன்கள் யாவும் மின்னணுப் பணப் பரிமாற்றத்திலும் கிடைக்கின்றன:

    • எளிதானது (Simple)
    • விரைவானது (Fast)
    • துல்லியமானது (Accurate)
    • செயல்திறன் மிக்கது (Efficient)
    • பிழையற்றது (Error-free)
    • பத்திரமானது (Safe)
    • பாதுகாப்பானது (Secure)
    • செலவு குறைந்தது (Less Cost)
    • கணக்கு வைப்புகள் எளிது (Book-keeping simple)
    • மோசடி குறைவு (Less Fraud)

        குறிப்பாக, ஒரே விவரத்தைப் பலமுறை உள்ளிடுவதிலுள்ள பிழைக்கான சாத்தியக் கூறுகள் மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் இல்லை. அமெரிக்க அரசின் புள்ளி விவரப்படி, ஒரு காசோலை மூலமான பணம் செலுத்துகைக்கு அமெரிக்க அரசுக்கு ஆகும் செலவு 1.03 டாலர். ஆனால் இஎஃப்டீ மூலமான பணம் செலுத்துகைக்கு ஆகும் செலவு 10.5 சென்டுகள் மட்டுமே.

        மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் சில பலவீனங்களும், சட்டச் சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் சில:

    • தொடங்கிவிட்டால் இடையில் நிறுத்த முடியாது. ஆனால் காசோலையை வழங்கியபின் பணமாக்குவதை நிறுத்தி வைக்கலாம். வரைவோலை வாங்கியபின் கொடுக்காமல் இருந்துவிடலாம்.
    • மோசடி, பழுது மற்றும் பிழை காரணமாக நட்டம் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு நிவாரணம் பெறச் சட்டப் பாதுகாப்புகள் போதுமானதாக இல்லை.
    • வங்கி, நிதி நிறுவனம் திவாலாகி விடும்போது நிறைவேற்றப்பட வேண்டிய பணப் பரிமாற்றங்கள் என்ன ஆகும்?
    • காசோலைக் குறுக்கத்தில் (Cheque Truncation) காசோலையிலுள்ள விவரங்களை மின்னணு முறையில் படித்தறிவதில் பிழைகள் ஏற்படலாம்
    • பிழை அல்லது மோசடி நடைபெற்றால், தடயங்களைத் திரட்டுவதிலும், உண்மையை நிலைநாட்டும் கடமை (burden of proof) யாருக்கு உரியது என்பதிலும், தகராறுகளைத் தீர்த்து வைப்பதிலும் சிக்கல் உள்ளது.
    • மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் பாதுக்காப்பான தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ள போதிலும், தரவுக் காப்பு (Data Protection) நூறு சதவீதம் எட்டப்பட்டுவிட்டது எனக் கூற முடியாது.
    • வங்கிகளுக்கு இடையேயான பணம்செலுத்தும் கடப்பாடுகளில் பிரச்சினை ஏற்படுமாயின் அதனைத் தீர்த்து வைப்பது சிக்கலாகிவிடும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:30:48(இந்திய நேரம்)