Primary tabs
-
3.2 அட்டைவழிப் பணப் பரிமாற்றம்
மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் அட்டைவழிப் பணப் பரிமாற்றமே பெரும்பங்கு வகிக்கிறது. பணம்செலுத்து அட்டைகள் பலவகைப்படும். இவற்றுள் முதலாவதாகக் கடன் அட்டை அமெரிக்காவில் 1920-களில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்றைய சூழ்நிலையில் பெருகிவந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பணம் செலுத்தும் வழிமுறையாகக் கடன் அட்டை புகுத்தப்பட்டது. நாளடைவில் அதன் பயன்பாடு பெருகியது. வங்கிகள் ‘பற்று அட்டைகளை’ அறிமுகப்படுத்தின. பணம்செலுத்து அட்டைகள் தேவைக்கேற்ப பல பரிமாணம் எடுத்தது. பொதுவாகக் கடன் அட்டை, பற்று அட்டைகள் பெரும்பாலான நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. அமெரிக்காவுக்கே உரிய சில தனிச்சிறப்பான அட்டைகளும் உள்ளன. அட்டைகளே இல்லாமல் இணையம்வழிப் பரிமாறிக் கொள்ளப்படும் ‘மின்பணமும்’ நடைமுறைக்கு வந்துவிட்டது. பணம்செலுத்து அட்டைகளின் வகைகள் பற்றியும், அவற்றின் பயன்பாடு பற்றியும், நிறை-குறைகள் பற்றியும் இப்பாடப் பிரிவில் விரிவாகக் காண்போம்.
3.2.1 பணம்செலுத்து அட்டை வகைகள்
பணம்செலுத்து அட்டைகளைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (1) கையிருப்பில் இருக்கும் (வங்கிக் கணக்கில் இருப்பது அல்லது முன்செலுத்திய தொகை) பணத்தைச் செலவழிக்கும் அட்டைகள். (2) கையில் பணம் இல்லாத நிலையிலும் செலவழிக்கக் கடன் வழங்கும் அட்டைகள். அட்டைவழிப் பணம்செலுத்தும் கணக்கு எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து அட்டைகளைப் பல்வேறாக வகைப்படுத்தலாம். முந்தைய பாடத்தில் சிலவகைப் பணம்செலுத்து அட்டைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். அவற்றையும் சேர்த்து மேலும் சில அட்டை வகைகளை இங்குக் காண்போம்:
(1) கடன் அட்டை (Credit Card):
வங்கிகள் அல்லது கடன்நிதி நிறுவனங்கள் இத்தகைய அட்டைகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளரின் பணி, ஊதியம், கடனை அடைக்கும் திறன் இவற்றின் அடிப்படையில் கடன் அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளரின் தகுதியைப் பொறுத்து கடன் வரம்புத் தொகை நிர்ணயிக்கப்படும். வரம்பு ஒரு இலட்சம் எனில், அவ்வட்டையைப் பயன்படுத்தி ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவழிக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் குறைந்தபட்சக் கடன் தவணையைச் செலுத்திவிட்டு, மீண்டும் கடன் வரம்புக்குள் செலவழிக்கலாம். நிலுவைக் கடனுக்கு வட்டி உண்டு. குறிப்பிட்ட நாளுக்குள் குறைந்தபட்சக் கடன் தவணை செலுத்தப்படா விடில் தண்டனை வட்டி வசூலிக்கப்படும். குறிப்பிட்ட நாளுக்குள் முழுக்கடனையும் செலுத்திவிட்டால் வட்டி கிடையாது. கடன் அட்டையைப் பயன்படுத்தி ஏடீஎம்மில் பணம் எடுக்க முடியும். அதுவும் கடன்தான். இணைய வணிகத்தில் பணம்செலுத்த இவ்வட்டையே பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
(2) பற்று அட்டை (Debit Card):ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்க்கே இது வழங்கப்படுகிறது. வாடிக்கையாளரின் கணக்கில் கையிருப்பு இருக்கும்வரை பற்று அட்டை மூலம் பணம் செலுத்தலாம். காசோலை போலப் பயன்படுத்தலாம் என்பதால் இது ‘காசோலை அட்டை’ (Cheque Card) என்றும் இந்த அட்டையைப் பயன்படுத்தி ஏடீஎம்மில் பணம் எடுக்கலாம் என்பதால் ‘ஏடீஎம் அட்டை’ (ATM Card) எனவும் வழங்கப்படுகிறது. இணையப் பணப் பரிமாற்றத்துக்கும் பயன்படுகிறது. உலக அளவில் செல்வாக்குப் பெற்ற பற்று அட்டைகள் விசா மற்றும் மாஸ்டர்கார்டு ஆகும். அந்தந்த நாட்டுக்கே உரிய வேறுபல கார்டுகளும் உள்ளன.
(3) கட்டண அட்டை (Charge Card):இதுவும் ஒருவகைக் கடன் அட்டைதான். சரியாகச் சொல்வதெனில் ‘குறுகிய காலக் கடன் அட்டை’ ஆகும். கடன் காலம் பெரும்பாலும் ஒரு மாதமாக இருக்கும். கடன் அட்டையில் கடனைத் தவணை முறையில் கட்டலாம். ஒருபகுதிக் கடன் இருக்கும்போதே உச்ச வரம்புக்குள் மீண்டும் செலவழிக்கலாம். செலவழித்தலும் கடன் செலுத்தலும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஆனால் கட்டண அட்டையில் அந்தந்த மாதத்தில் ஏற்படும் கடனை அந்தந்த மாதத்திற்குள் முழுமையாக அடைத்துவிட வேண்டும். நிலுவைக் கடன் என்று எதுவும் இல்லை என்பதால் வட்டி கிடையாது. ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் முழுத் தொகையையும் செலுத்தாவிட்டால் தண்டனை வட்டி உண்டு. அட்டையைப் பயன்படுத்த முடியாமலும் போகலாம். அட்டை ரத்தாகவும் வாய்ப்புண்டு.
(4) பண அட்டை (Cash Card):சில வங்கிகள் இத்தகைய அட்டைகளை வழங்குகின்றன. பத்தாயிரம், இருபதாயிரம் என குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி இந்த அட்டையைப் பெற வேண்டும். அதன்பிறகு பற்று அட்டை போலவே பயன்படுத்தலாம். முன்செலுத்திய தொகை அளவுக்குச் செலவழித்துக் கொள்ளலாம். முழுத்தொகையும் செலவழித்தபின் ஏடீஎம்மில் குறிப்பிட்ட தொகையை அட்டையில் ஏற்றிக் கொள்ளலாம். அவ்வாறு பணம் ஏற்ற அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்; கணக்கில் பணம் இருக்க வேண்டும். இந்த அட்டை ‘முன்செலுத்து பண அட்டை’ (Prepaid Cash Card) எனவும், ‘முன்செலுத்து பற்று அட்டை’ (Prepaid Debit Card) எனவும் அழைக்கப்படுவதுண்டு.
(5) மதிப்பு இருத்திய அட்டை (Stored-value Card):இது பண அட்டையின் ஒரு வகையாகும். பண அட்டை எனில் அட்டையின் மதிப்பு அட்டை வழங்கிய வங்கியின் கணிப்பொறியிலேயே இருக்கும். ஆனால் இந்தவகை அட்டையில் அட்டையின் மதிப்பு அட்டையிலேயே இருத்தி வைக்கப்பட்டிருக்கும். அட்டையைப் பயன்படுத்திச் செலவழிக்கும்போது அதில் இருத்தி வைக்கப் பட்ட தொகை குறைந்துகொண்டே வரும். தொகை தீர்ந்ததும் அட்டையைத் தூக்கி எறிய வேண்டியதுதான். இதற்கும் பண அட்டைக்கும் உள்ள இன்னொரு முக்கிய வேறுபாடு, பண அட்டை வாடிக்கையாளரின் பெயரில் வழங்கப் படுகிறது. ஆனால் மதிப்பு இருத்திய அட்டையை வாங்கியபின் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். போக்குவரத்துக் கட்டண அட்டை (Transit System Fare Card), தொலைபேசி அழைப்பு அட்டை (Telephone Calling Card) ஆகியவை இந்த வகை அட்டைகளாகும்.
(6) வாகன அட்டை (Fleet Card):வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல், எரிவாயு நிரப்பப் பணம் செலுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கடன் அட்டையாகும். வாகனங்களைப் பழுது பார்க்க, பராமரிக்க ஆகும் செலவுகளுக்கும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம். வேறு செலவுகளுக்குப் பயன்படுத்த முடியாது. இத்தனை நாளைக்கு ஒருமுறைதான் பயன்படுத்தலாம், ஒருநாளில் இத்தனை முறைதான் பயன்படுத்தலாம், ஒருமுறை பயன்படுத்தும்போது இவ்வளவுதான் செலவழிக்கலாம் எனக் கட்டுப்பாடுகள் விதிக்க முடியும். பயண வாகனம், சுமையேற்றி வாகனங்களை வாடகைக்குத் தரும் நிறுவன உரிமை யாளர்களுக்கு இவ்வகை அட்டைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. நீண்ட தூரம் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுக்குக் கையில் பணம் எடுத்துச் செல்லத் தேவையில்லை. ஓட்டுநர்கள் செலவு கணக்கில் ஏமாற்று, மோசடி செய்யவும் வழியில்லை. அமெரிக்காவில் இவ்வகை அட்டைகள் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன. முதன் முதலில் வெளியிடப்பட்ட கடன் அட்டை வாகன அட்டையே ஆகும்.
(7) அன்பளிப்பு அட்டை (Gift Cards):வங்கிகள் அல்லது சில்லரை அங்காடிகள் வாடிக்கையாளர்களுக்குப் அன்பளிப்புப் பொருட்களுக்குப் பதிலாக வழங்கும் பணமதிப்பு அட்டையாகும். குறிப்பிட்ட பெயரில் வழங்கப்படுவ தில்லை. யார் வேண்டுமானாலும் மதிப்பு இருத்திய அட்டைபோலப் பயன்படுத்தலாம். ஆனால் இதன் மதிப்பு, அட்டையில் பதியப்பட்டு இராது. வழங்கிய நிறுவனத்தின் கணிப்பொறித் தரவுத் தளத்தில் இருக்கும். இந்தவகை அட்டைகள் இருவகைப்படும். (அ) வங்கிகள் அல்லது கடன் அட்டை நிறுவனங்கள் வழங்குவது: எவ்வகைச் செலவுக்கும் பயன்படுத்தலாம். (ஆ) சில்லரை அங்காடிகள் வழங்குவது: அவர்களுடைய கடைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவ்வகை அட்டைகள் அமெரிக்காவில் அதிகம் புழக்கத்தில் உள்ளன. அன்பளிப்புகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது. பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. 2006-ஆம் ஆண்டில் கனடாவில் அன்பளிப்பு அட்டைகளுக்காக 1.8 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிலோ இத்தொகை 80 பில்லியன் டாலர் ஆகும்.
(8) சூட்டிகை அட்டை (Smart Card):இது பல்பயன் அட்டையாகும். இதனை அடையாள அட்டையாகவும், வாகன ஓட்டுரிமமாகவும், வாக்காளர் அட்டையாகவும், பண அட்டையாகவும் பயன்படுத்தலாம். பிற அட்டைகளி லிருந்து சற்றே மாறுபட்டது. பிற அட்டைகளில் மின்காந்தப் பட்டை இருக்கும். ஆனால் இதில் மெல்லிய நுண்சில்லு (Micro-chip) உட்பொதிக்கப்பட்டிருக்கும். அதில் அட்டைக்கு உரியவரின் பெயர் மற்றும் தேவையான பிற விவரங்கள் அனைத்தையும் சேமித்துக் கொள்ளலாம். தேவையெனில் அட்டையிலுள்ள விவரங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதனைச் சில்லு அட்டை (Chip Card), ஐசி அட்டை (Integrated Circuit Card) என்றும் அழைப்பர். ஒரு நிறுவனப் பணியாளரின் அடையாள அட்டையாக இதனைப் பயன்படுத்தலாம். அவரின் மாதச் சம்பளத்தை அந்த அட்டையிலேயே ஏற்றித் தந்துவிடலாம். பண அட்டைபோலப் பல்வேறு செலவுகளுக்கும் அதன்மூலம் பணம் செலுத்தலாம். பணம் தீர்ந்து போனால் ஏடீஎம்மில் பணம் ஏற்றிக் கொள்ளலாம். கடன் அட்டை எனில் கடையில் பொருள்வாங்கும்போது ஒவ்வொரு முறையும் கடன் வழங்கிய நிறுவனக் கணிப்பொறி அமைப்பில் விவரங்களைச் சரிப்பார்த்து அனுமதி பெறவேண்டும். ஆனால் சூட்டிகை அட்டையில் பணம் அட்டையிலேயே இருப்பதால் அத்தகைய சரிபார்ப்புத் தேவையில்லை. கடுமையான பாதுகாப்பு அரண் கொண்டது. தொலைந்து போனாலும் கவலை இல்லை. வேறெவரும் எடுத்துப் பயன்படுத்த முடியாது. உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியக் குறியீடு மூலம் மட்டுமே அதனைச் செயல்படுத்த முடியும்.
(9) மின்பணம் (eCash):மின்னணுப் பணம் (Electronic Cash/Money), மின்னணு நாணயம் (Electronic Currency), துடிமப் பணம் (Digital Money/Cash), துடிம நாணயம் (Digital Currency) என்றும் கூறலாம். மின்பணப் பரிமாற்றம் கணிப்பொறிப் பிணையம், இணையம், மறைக்குறியீட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பண நோட்டு, காசோலை, வரைவோலை, பணம்செலுத்து அட்டை எதுவும் இல்லாமல் பரிமாற்றம் செய்யப்படும் பணத்தை ‘மின்பணம்’ என வரையறுக்கலாம். நிறுவனப் பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைப்பதும், கடன் தவணை, கட்டணம் போன்றவற்றை வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வதும், இணைய வங்கிச் சேவை மூலம் பணப் பரிமாற்றம் செய்தலும் மின்பணத்துக்குச் சரியான எடுத்துக்காட்டுகளாகும். இந்தப் பரிமாற்றங்களில் தாள்பணமோ, காசோலையோ, வரைவோலையோ, பணம்செலுத்து அட்டைகளோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதறிக.
3.2.2 பணம்செலுத்து அட்டைகளின் பயன்பாடுகள்
பற்று அட்டை, கடன் அட்டை, பண அட்டை இவற்றின் பயன்பாடுகள் பல. அட்டை வழியான பரிமாற்றங்கள் பல்வகைப்பட்டவை. அவற்றுள் சில:
பொருள் வாங்கல்:
அட்டை வைத்திருப்பவர் தான் வாங்குகின்ற பொருள் களுக்கும் சேவைகளுக்கும் அட்டை மூலமாகவே பணம் செலுத்த முடியும்.
பணம் எடுத்தல்:பற்று அட்டை வைத்திருப்பவர் தன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வங்கிக்குச் செல்லாமலே அருகிலுள்ள ஏடீஎம்மில் அட்டையைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ள முடியும்.
கடன் பெறல்:கடன் அட்டை வைத்திருப்பவரும் ஏடீஎம்மில் பணம் எடுக்க முடியும். இது கடனாகக் கருதப்படும். குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை வங்கிக்குச் செலுத்த வேண்டும்.
பணம் போடுதல்:அட்டை வைத்திருப்பவர் ஏடீஎம்மில் தன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த முடியும்.
பணம் மாற்றுகை:வாடிக்கையாளர் தன்னுடைய ஒரு கணக்கிலுள்ள பணத்தை இன்னொரு கணக்குக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
பணம் செலுத்துகை:தன் கணக்கிலுள்ள பணத்தை இன்னொருவர் கணக்குக்கு மாற்ற முடியும்.
விசாரிப்பு:ஏடீஎம்மில் அட்டையைப் பயன்படுத்தி தன் கணக்கிலுள்ள கையிருப்புத் தொகையை அறிந்து கொள்ள முடியும். கடன் அட்டையில் இன்னும் எவ்வளவு தொகைக்குப் பொருள் வாங்கலாம் என அறியலாம்.
குறு அறிக்கை:ஏடீஎம்மில் அட்டையைப் பயன்படுத்தித் தன் கணக்கில் நடைபெற்ற அண்மையப் பரிமாற்றங்கள் பற்றிய அறிக்கை பெறலாம்.
பணம் ஏற்றல்:பண அட்டை வைத்திருப்பவர் ஏடீஎம்மில் குறிப்பிட்ட தொகையை ஏற்றிக் கொள்ள முடியும்.
செல்பேசிச் சேவை:ஏடீஎம்மில் அட்டையைப் பயன்படுத்திச் செல்பேசிக்கு தொகை ஏற்றிக் கொள்ளலாம்.
நிர்வாகம்:ஏடீஎம்மில் அட்டையைப் பயன்படுத்துவதற்கான கடவுச் சொல்லை மாற்றிக் கொள்ள முடியும்.
1.2.3 பணம்செலுத்து அட்டைகளின் நிறை-குறைகள்
இன்றைய சூழ்நிலையில் வெளியில் செல்லும்போது கையில் பணம் எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானதாகப் போய்விட்டது. தொலைந்து போகலாம். களவாடப்படலாம். கட்டாயமாகப் பறிக்கப்படலாம். உயிருக்கே ஆபத்தும் ஏற்படலாம். மேலும் பண நோட்டுகளை அச்சிடப் பெரும் செலவு ஆகும். பண நோட்டுகள் புழக்கத்தில் கிழிந்து போகின்றன. தீ விபத்துகளில் எரிந்து போகின்றன. வௌ¢ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. பணத்தைப் பாதுகாத்து வைப்பது கடினமான பணியாகும். பணம் செலுத்து அட்டைகளில் இத்தகைய குறைபாடுகள், தீங்குகள் எதுவும் இல்லை.
எடுத்துச் செல்வது எளிது. பணம் எடுக்கத் தொலைதூரம் வங்கிக்குச் செல்ல வேண்டாம். கடையில் என்ன வாங்க வேண்டும், எவ்வளவு எடுத்துச் செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவுசெய்ய வேண்டியதில்லை. விரும்பிய பொருட்களை வாங்கிக் கொண்டு அட்டை மூலம் பணம் செலுத்திவிடலாம். விருந்தாளி, மருத்துவம் போன்ற திடீர்ச் செலவு ஏற்படும்போது கடனுக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டாம். கடன் அட்டை கைகொடுக்கும். அடிக்கடிக் கடன் கேட்டுப் புலம்பும் நண்பர்களுக்கு இரக்கப்பட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பின்பு புலம்ப வேண்டிய நிலை ஏற்படாது.
அட்டைகளைப் பாதுகாப்பது எளிது. தொலைந்து போனாலோ, களவு போனாலோ உடனடியாக அந்த அட்டையைச் செயலிழக்கச் (de-activate) செய்துவிடலாம். அதன்பிறகு அதனை யாரும் பயன்படுத்த முடியாது. தீயில் எரிந்து போனாலும் நட்டமில்லை. வேறொரு அட்டை வாங்கிக் கொள்ளலாம். பணம்செலுத்து அட்டைகளைப் பயன்படுத்த ரகசியக் குறியீட்டெண் தேவை. அதனை ரகசியமாகப் பாதுகாத்துக் கொண்டால் மோசடிகளைத் தவிர்க்கலாம்.
என்றாலும் பணம்செலுத்து அட்டைகளில் சில பலவீனங்கள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாகக் கடன் அட்டை மிகவும் ஆபத்தானது. கையில் பணம் இல்லாத போதும் ஆடம்பரமாகச் செலவழிக்கத் தூண்டும். சக்திக்கு மீறிச் செலவழித்துவிட்டுத் தொல்லைப்படுபவர்கள் பலர். கடனைச் செலுத்த முடியாத போது வட்டி ஏறிக்கொண்டே போகும். கடனை வசூலிக்க வங்கிகள் தரக்குறைவான வழிமுறைகளைப் பின்பற்றுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இல்லாதோருக்கும் ஏராளமான அளவில் கடன் அட்டைகளை வழங்கி அமெரிக்கவில் பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் திவாலாகிப் போயுள்ளன. அமெரிக்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குக் கண்மூடித் தனமான கடன் அட்டைக் கலாச்சாரமும் ஒரு காரணமாகும்.
தீங்கெண்ணம் கொண்டோர் தம் புத்திக் கூர்மையைப் பயன்படுத்திப் பணம்செலுத்து அட்டைகளில் குறிப்பாக கடன் அட்டை, பற்று அட்டைகளில் மோசடி செய்யும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. அட்டைகளைத் திருடித் திறைமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இணைய வங்கிச் சேவையின் பயனர் பெயர், கடவுச்சொல் போன்ற விவரங்களையும், இணைய வணிகத்தில் பயன்படுத்தும் அட்டை விவரங்களையும் திருடி மோசடி செய்யும் வல்லமை படைத்தவர்களும் இருக்கிறார்கள். இத்தகைய சவால்களை எதிர்கொள்ளத் தொழில்நுட்பம் தொடர்ந்து முயன்று வருகிறது.