தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றம்

  • 3.4 இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றம்

        இந்திய மக்களின் மனோபாவம் மேற்கத்திய நாட்டு மக்களின் மனோபாவத்துக்கு நேர் மாறானது. மாதம் 1000 ரூபாய் சம்பாதித்தால் அதில் 200 ரூபாயாவது சேமிக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவர்கள் இந்தியர்கள் வேறு வழியே இல்லாவிட்டால்தான் கடன் வாங்குவார்கள். இந்த மனோபாவம் காரணமாய் இந்தியாவில் கடன் அட்டையின் பயன்பாடு குறைவாகவே இருந்தது. உலகமயமாக்கல் இந்திய மக்களின் மனோபாவத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. கடன் அட்டை, பற்று அட்டையின் பயன்பாடு வளர்ச்சி கண்டது. இணையத்தின் வளர்ச்சியால் இணையவழிப் பணப் பரிமாற்றமும் முளைவிட்டது. ஆனால் மின்னணுப் பணப் பரிமாற்றங்களில் ஏற்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்கப் போதுமான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாத காரணத்தால் இவற்றின் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. எனவே இந்திய ரிசர்வ் வங்கி முன்வந்து சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த குழுக்களை அமைத்தது. அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நெறிமுறைகளை வகுத்தது. இந்திய வங்கிகளை இணைத்து, தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் அதிவேக வளர்ச்சி காணும் வாய்ப்புள்ளது. இதுபற்றியெல்லாம் இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.

    3.4.1 ரிசர்வ் வங்கியின் முன்முயற்சி்

        இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்ற வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி 1990-களில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டது. 1994-இல் அதன் நிர்வாக இயக்குநராக இருந்த திரு.டபிள்யூ.எஸ்.சரஃப் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. பணம்செலுத்து முறைமை, காசோலை பணமாக்கல் ஆகியவற்றோடு தொடர்புடைய தொழில்நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்து, வங்கித் தொழில்துறையில் நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் அக்குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமையை நிறுவ அக்குழு பரிந்துரைத்தது. இதுவே இந்தியாவில் ‘நிகழ்நிலை வங்கிச் சேவை’ (Online Banking) என்ற கருத்துருவின் தொடக்கமாக அமைந்தது. மின்னணுப் பணப் பரிமாற்றம் மற்றும் பிற மின்னணுப் பணம்செலுத்துகைகள் தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கிட, 1995-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, திருமதி.கே.எஸ்.ஷீரே தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஷீரே குழு பல்வேறு வகையான மின்னணுப் பணப் பரிமாற்றங்களைப் பரிசீலனை செய்தது. அவற்றுள் சில:

    வரவுப் பரிமாற்றம்:

    குறிப்பிட்ட காலக் கெடுவுகளில் குறிப்பிட்ட தொகையை, எடுத்துக்காட்டாக வட்டிப் பணம், பகிர்வுத் தொகை, ஊதியம் போன்றவற்றை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்திட வகை செய்தல்.


    பற்றுப் பரிமாற்றம்:

    தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், காப்பீட்டுத் தவணைத் தொகை போன்றவற்றைப் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து அவருடைய அனுமதியுடன் எடுத்து உரிய நிறுவனங்களின் கணக்கில் சேர்த்திட வகை செய்தல்.


    குறைந்த மதிப்புப் பணப் பரிமாற்றம்:

    வங்கி அல்லது நிதி நிறுவனம் போன்ற இரு அமைப்புகளுக்கிடையே குறைந்த அளவு பணப் பரிமாற்ற அறிவுறுத்தங்களை (Instructions) ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தொகுதி தொகுதியாக (in batches) தானியங்கு முறையில் நிறைவேற்ற வகை செய்தல்.


    அதிக மதிப்புப் பணப் பரிமாற்றம்:

    குறைந்த மதிப்புப் பணப் பரிமாற்றம் போன்றதே. ஆனால் இதில் பணப் பரிமாற்றம் நிகழ்நேர (real-time) அடிப்படையில் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.


    ஏடீஎம் பரிமாற்றம்:

    வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தல், பணம் போடுதல், காசோலைகளைக் கணக்கில் சேர்த்தல் ஆகிய பணிகளை மின்னணுச் சாதனம் மூலம் தானியங்கு முறையில் நிறைவேற்றுதல்.


    விற்பனை முனையங்களில் மின்னணுப் பணப் பரிமாற்றம்:

    அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள்களுக்குக் கடன் அட்டை, பற்று அட்டை, பண அட்டை மூலம் ஒரு மின்னணுப் பரிமாற்ற முறைமையின் உதவியுடன் பணம் செலுத்த வகை செய்தல்.


    காசோலைக் குறுக்கம் (Cheque Truncation):

    ஒரு காசோலையின் தகவல்களை மின்னணு முறையில் படித்து, அவற்றை மின்னணுத் தகவலாய் அனுப்பி வைத்துக் குறிப்பிடப்பட்ட தொகையைப் பணம் செலுத்துபவரின் கணக்கிலிருந்து கழிக்கவும், பணம் பெறுபவரின் கணக்கில் சேர்க்கவும் வகை செய்தல்.

    ஷீரே குழு, குறுகிய காலத் தீர்வாக, ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் இஎஃப்டீ விதிமுறைகளை வெளியிடவும், வங்கியாளரின் நூல்கள் தடயச் சட்டம், 1881-இல் சில திருத்தங்களையும் பரிந்துரைத்தது. நீண்ட காலத் தீர்வாக, மின்னணுப் பணப் பரிமாற்றச் சட்டம், கணிப்பொறி முறைகேடு மற்றும் தரவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை இயற்றவும் பரிந்துரைத்தது. அதன்படி, அரசு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 58-வது பிரிவின் கீழ் ஆர்பிஐ-இஎஃப்டீ (RBI-EFT) விதிமுறைகளை வகுத்தது. வங்கியாளர் நூல்கள் தடயச் சட்டத்தில் திருத்தங்கள் செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் இயற்றுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தது. 2000-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மின்னணுப் பணப் பரிமாற்றத்துக்குச் சில பாதுகாப்புகளை நல்கியது.

    3.4.2 தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை

        ரிசர்வ் வங்கிச் சட்டம் 58-வது பிரிவின் கீழ் வகுக்கப்பட்ட ஆர்பிஐ-இஎஃப்டீ விதிமுறைகள் ‘தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமையாக’ 2005 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது. தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள 27 பொதுத்துறை வங்கிகள் மற்றும் 55 ஷெட்யூல்டு வணிக வங்கிகளில் இஎஃப்டீ முறைமை செயல்படுத்தப்பட்டது. ஒரு வங்கியின் கிளையிலிருந்து வேறெந்த வங்கியின் கிளைக்கும் மின்னணுப் பணப் பரிமாற்றம் சாத்தியமாயிற்று. 2008 ஜூன் 10 நிலவரப்படி, நாட்டிலுள்ள 85 வங்கிகளின் 44,731 கிளைகள் இந்த முறைமையில் பங்கு வகிக்கின்றன. பங்கு வகிக்கும் வங்கிக் கிளைகளின் பட்டியல் ரிசர்வ் வங்கியின் வலையகத்தில் www.rbi.org.in வெளியிடப் பட்டுள்ளது. மேலும் பல வங்கிகளையும் கிளைகளையும் பங்குபெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

        இத்தகைய பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழியாகவே நடைபெறும். அனைத்து வங்கிகளும் மின்னணுப் பணப் பரிமாற்றத் தகவல்களை உடனுக்குடன் ரிசர்வ் வங்கி மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று முறை நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் இந்தப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி செயல்படுத்தும். நண்பகல் 12 மணிக்கு முன்பாகக் கிடைக்கும் தகவல்கள் அந்த நாளிலேயே நிறைவேற்றி வைக்கப்படும். 2 மணிக்கும், 4 மணிக்கும் செயலாக்கப்படும் தகவல்கள் மறுநாள் நிறைவேற்றி வைக்கப்படும். (தற்போது ஆறு தொகுதிகளாக 0930, 1030, 1200, 1300, 1500, 1600 ஆகிய நேரங்களில் செயலாக்கப்படுகிறது).

        தேசிய பணப் பரிமாற்ற முறைமை ஏழு படிநிலைகளில் (steps) செயல்படுகிறது:

    படிநிலை-1:

    மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் பணம் செலுத்துபவர் அதற்கான விண்ணப்பத்தில் பணம் பெறுபவரின் பெயர், கணக்கு எண், கணக்கு வகை, வங்கி, கிளை, நகரம் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட தொகையைப் பணம் பெறுபவரின் கணக்கில் வரவு வைக்கவும், தனது கணக்கில் பற்று வைக்கவும் தனது வங்கிக் கிளைக்கு அனுமதி வழங்க வேண்டும்.


    படிநிலை-2:

    விண்ணப்பம் பெற்ற வங்கிக் கிளை அவ்விண்ணப்ப நகலை தனது சேவைக் கிளைக்கு (Service Branch) அனுப்பி வைக்கும். சேவைக் கிளை மின்னணுப் பணப் பரிமாற்றத் தரவுகளை குறிப்பிட்ட வடிவமைப்பில் தொகுக்கும்.


    படிநிலை-3:

    சேவைக் கிளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள மென்பொருள் உதவியுடன் மின்னணுப் பணப் பரிமாற்றத் தரவுக் கோப்பினைத் தயாரித்து, மும்பையிலுள்ள ரிசர்வ் வங்கியின் தேசியச் செயலாக்க மையத்துக்கு (National Clearing Cell) அனுப்பி வைக்கும். அம்மையத்தில் கோப்பு கிடைக்கப்பெறும் நேரத்துக்கேற்ப, ஆறு செயலாக்கங்களில் ஏதேனும் ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்படும்.


    படிநிலை-4:

    அனைத்து வங்கிகளிலிருந்தும் கிடைக்கப்பெற்ற கோப்புகளைத் தொகுத்து, பரிமாற்றங்களை நகர வாரியாக வரிசைப்படுத்தி, பணம் செலுத்தும் வங்கிகளில் அன்றைக்கே பற்று வைப்பதற்கான பணச் சிட்டைகளைத் (vouchers) தயார் செய்யும். நகரவாரிக் கோப்புகள் அந்தந்த இலக்கு மையங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.


    படிநிலை-5:

    இலக்கு மையத்திலுள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் கிடைக்கப் பெற்ற கோப்புகளைத் தொகுத்து, வங்கிவாரியாக வரிசைப்படுத்தும். வங்கிவாரியான பணம் செலுத்து (remittance) தரவுக் கோப்புகளை வங்கிகளின் சேவைக் கிளைகளுக்கு அன்றைக்கே அனுப்பி வைக்கும். பணம் பெறும் வங்கிகளின் கணக்குகளில் வரவு வைப்பதற்கான வங்கிவாரியான பணச் சிட்டைகளை அன்றைக்கு அல்லது அடுத்த நாளில் தயாரிக்கும்.


    படிநிலை-6:

    மறுநாள் காலையில் இலக்கு மையங்களிலுள்ள பணம் பெறும் வங்கிச் சேவைக் கிளைகள் ரிசர்வ் வங்கி அனுப்பிய பணம் செலுத்து கோப்புகளிலுள்ள விவரங்களைப் பிரித்தெடுத்து, பணம் பெறுவோரின் கணக்குகளில் வரவு வைப்பதற்கான பண-வரவு அறிக்கைகளை (credit reports) இலக்குக் கிளைகளுக்கு அனுப்பி வைக்கும்.


    படிநிலை-7:

    பணம் பெறும் வங்கி, தொகையை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைத்தபின் ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் உரிய ஏற்புச்சான்றுகளை (acknowledgements) அனுப்பி வைக்கும். ஏற்புச்சான்று விவரங்கள் பணம் அனுப்பிய வங்கிக் கிளைக்கு மூன்றாவது நாளில் சென்று சேரும். இதன் மூலம் பணம் அனுப்பிய வங்கிக் கிளை, பணம் பெற்றவரின் கணக்கில் தொகை எப்போது வரவு வைக்கப்பட்டது என்கிற துல்லியமான தகவலை அறிந்து கொள்ள முடியும்.

        மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் ஒரு பரிமற்றத்தில் அனுப்பப்படும் தொகைக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ரிசர்வ் வங்கிக்குச் செயலாக்கக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. வங்கிகள் தம் விருப்பப்படி சேவைக் கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். மின்னணுப் பணப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்த வங்கிகள் தனியாக நிறுவன அகக்கட்டமைப்புகள் எதையும் நிறுவத் தேவையில்லை. வெளிச்செல்லும் தகவல்களைத் தொகுத்து ரிசர்வ் வங்கித் தேசியச் செயலாக்க மையத்துக்கு அனுப்பி வைக்கவும், அங்கிருந்து கிடைக்கப் பெறும் தகவல்களைப் பிரித்து உரிய கிளைகளுக்கு அனுப்பி வைக்கவும் வட்டாரச் சேவைக் கிளைகளை நிர்ணயம் செய்தால் போதுமானது. ஏற்கெனவே கசோலைகளைச் செயலாக்கும் பணியைச் செய்துவரும் சேவைக் கிளைகள் அல்லது முதன்மைக் கிளைகளே இப்பணியைக் கவனித்துக் கொள்ள முடியும்.

    1.4.3 இன்றைய நிலை

        இந்திய ரிசர்வ் வங்கியின் முன்முயற்சியில் தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை உருவாக்கப்பட்டதன் காரணமாக இந்திய வங்கிகளில் பெரும்பாலானவை தமது வாடிக்கையாளர்களுக்கு மின்னணுப் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முன்வந்துள்ளன. இதனால் கடன் அட்டை, பற்று அட்டை, பண அட்டை மற்றும் இணையம் வழியான பணப் பரிமாற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன. அண்மையில் (ஆகஸ்ட் 2008) இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திரு.வி.ல¦லாதர் இந்தியாவில் மின்னணுப் பரிமாற்றம் பற்றிய சில விவரங்களை அளித்துள்ளார்கள். அவற்றுள் சில:

        தேசிய மின்னணுப் பணப் பரிமாற்ற முறைமை வழியாக நடைபெறும் வணிகக் கொள்ளளவில், இரண்டு தனியார் வங்கிகள் மற்றும் ஒரு வெளிநாட்டு வங்கி மட்டும் 43% அளவு பங்களிப்பைச் செய்கின்றன. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தின் பங்கு 12% மட்டுமே. தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் இது குறைவே ஆகும். பொதுத்துறை வங்கிகள் விழித்துக் கொள்ள வேண்டும். நெஃப்¢ட் முறைமையின் (NEFT System) சேவைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இச்சேவைக்காக ரிசர்வ் வங்கி கட்டணம் எதுவும் விதிப்பதில்லை. பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை மட்டுமின்றித் தமது அலுவலர்களையும் நெஃப்ட் சேவை பற்றிப் பயிற்றுவிக்க வேண்டும். அப்பொழுதுதான் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் பலன்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சென்று சேரும்.

        இந்தியா முழுக்க மொத்தம் 36,314 தனியங்குக் காசாளி எந்திரங்கள் (Automatic Teller Machine - ATM - ஏடீஎம்) உள்ளன. அவற்றுள் மூன்றில் இரண்டு பங்கு பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்தவை. ஆனாலும் மூன்றில் ஒருபங்குள்ள தனியார் மற்றும் பிறநாட்டு வங்கிகளின் ஏடீஎம்கள் அளவுக்கே வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுத்துறை வங்கிகள் இன்னும் சிறந்த முறையில் ஏடீஎம் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பொதுத்துறை வங்கிகள் கடன் அட்டைச் செயல்பாடுகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட போதும், தனியார் மற்றும் பிறநாட்டு வங்கிகளோடு போட்டி போட முடியவில்லை.

        அதே வேளையில் திரு.வி.ல¦லாதர் அவர்கள் பொதுத்துறை வங்கிகளின் பொதுவான வணிக நடவடிக்கைகள் பலமடங்கு வளர்ச்சி பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 2002-ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் அலுவலர்கள் தலைக்கு 188 இலட்சம் பெறுமான வணிகப் பரிமாற்றங்கள் செய்துள்ளனர். 2007-ஆண்டில் இது ரூபாய் 496 இலட்சமாக அதிகரித்துள்ளது அனைவரின் பாராட்டுக்கும் உரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    அமெரிக்க இஎஃப்டீ சட்டத்தை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

    2.

    அமெரிக்க இஎஃப்டீ சட்டம் பயன்படும் சூழல்களை விளக்குக.

    3.

    அமெரிக்க இஎஃப்டீ சட்டம் வழங்கும் உரிமைகள் யாவை?

    4.

    இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி எடுத்த முன்முயற்சிகள் யாவை?

    5.

    தேசிய மின்னணுப் பரிமாற்ற முறைமை எவ்வாறு செயல்படுகிறது?

    6.

    ஷீரே குழு பரிசீலனை செய்த மின்னணுப் பணப் பரிமாற்றங்கள் யாவை?

    7.

    இந்தியாவில் மின்னணுப் பணப் பரிமாற்றத்தின் இன்றைய நிலை என்ன?


புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 17:59:22(இந்திய நேரம்)