12. வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பாடம்
Lesson


காட்சி - 6

இடம் : பாரதி வீட்டுத் தோட்டம்,
இடம் பெறுவோர் : பாரதி, அவனது அம்மா தவமணி

 

(பாரதி, அவனது அம்மா தவமணி முல்லைக் கொடிக்குப் பந்தல் நட்டுக்கொண்டே பேசிக் கொள்கின்றார்கள்)

பாரதி - ஓ..... முல்லைக்குத் தேர்கொடுத்த வள்ளல் பாரி என்று அதனால்தான் அம் மன்னருக்குப் பெயர் வந்ததா அம்மா?
தவமணி - ஆமாம் பாரதி. அதனால் மன்னர் பாரியின் புகழ் எல்லா இடங்களுக்கும் பரவத் தொடங்கியது.
பாரதி - அம்மா எனக்கு ஒரு ஐயம்?
தவமணி - என்ன பாரதி. இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று ஐயமா?
பாரதி - இல்லை அம்மா, பாரி ஒரு மன்னர். அவர் நினைத்தால் உடனே அரண்மனைக்குச் சென்று தமது சேவகர்களை அனுப்பி அந்தக் கொடிக்கு நாம் பந்தல் போடுவதுபோலப் போடச் சொல்லியிருக்கலாம்.
தவமணி - ஓ .....
பாரதி - அல்லது தான் அணிந்திருக்கின்ற உடைவாளை உருவிப் பக்கத்தில் இருக்கின்ற மரத்தில் ஒரு கழியை வெட்டி நட்டிருக்கலாமே.. அதை விட்டுவிட்டுத் தன் தேரையே விட்டுவிட்டு வந்திருக்கின்றார் என்றால்....
தவமணி - ஆ...
பாரதி - என்ன ஆயிற்று அம்மா.....?
தவமணி - கையில் இந்தக் கழி குத்திவிட்டது...
பாரதி - ஆ.... அம்மா இரத்தம் வழிகிறதே... அப்படியே இருங்கள்... இதோ வருகிறேன்.... (வேகமாக ஓடிப்போய் அம்மாவின் காயம்பட்ட கையைப் பற்றிக் கொள்கிறான்.) ஆ இவ்வளவு இரத்தம் வழிகிறதே. ஏதேனும் துணி... ஆ இதோ என் கைக்குட்டை இருக்கிறதே... இதை வைத்துக் கட்டிவிடுகிறேன்.
தவமணி - வேண்டாம். அது அழகான கைக்குட்டை. இரத்தம் பட்டால் வீணாகிவிடும் பாரதி. வேண்டாம்.
பாரதி - போனால் போகட்டும். இப்படி இரத்தம் வடிகிறதே. இருங்கள் (வேகமாக வந்து அவசரமாகக் கட்டுகிறான்) அம்மா வாருங்கள். உடனடியாக முதலுதவி செய்து கொள்ளலாம். இந்த வேலையை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் அம்மா.
தவமணி - இல்லை பாரதி. அப்படி ஒன்றும் பெரிய காயம் எனக்கு ஏற்பட்டு விடவில்லை. இலேசானதுதான். பார்த்தாயா? நீ கட்டுப்போட்டவுடன் இரத்தம் வருவது நின்றுவிட்டது. இந்த வேலையை முடித்தபின் வீட்டுக்குள் போய் மருந்து இட்டுக் கொள்ளலாம்.
பாரதி - இல்லை அம்மா. வலி இருக்குமே.
தவமணி - அதெல்லாம் இல்லை. கதையைப் பாதியோடு நிறுத்திவிட்டோமே.... என்னக் கேட்டாய்? வள்ளல்
பாரி - முல்லைக்குத் தேரைக் கொடுத்தது பற்றித்தானே...
பாரதி - ஆமாம் அம்மா.
தவமணி - அடடே என்ன அழகாய் பூந்தொட்டி பின்னி உன் பெயரையும் அழகாக எழுதியிருக்கின்றாள். ஐயோ, எனது இரத்தம் பட்டு அந்த அழகு கெட்டுப்போய்விட்டதே.
பாரதி - அதனால் என்ன அம்மா, உங்கள் கையில் இருந்து இரத்தம் வருவது நின்றுவிட்டதே; அதுவே எனக்கு மகிழ்ச்சி. கைக்குட்டைப் போனால் என்ன?
தவமணி - (சிரிக்கிறாள்)
பாரதி - என்னம்மா சிரிக்கின்றீர்கள்?
தவமணி - இலேசாகக் காயம்பட்டதற்காக உனது புத்தம் புதிய கைக்குட்டையை வீணாக்கிவிட்டாயே! உடனே ஓடிப்போய் நமது வீட்டில் இருக்கின்ற முதலுதவிப் பெட்டியிலிருந்து கொஞ்சம் துணி எடுத்து வந்திருக்கலாமே.
பாரதி - அதுவரைக்கும் இரத்தம் வழிந்து கொண்டிருக்குமே அம்மா? வலிக்காதா?
தவமணி - அந்த இரக்க உணர்ச்சிதான் பாரதி, வள்ளல் பாரிக்கும் வந்துவிட்டது. ஓடிக் கொண்டிருக்கும் தேருக்கு முன்னால் ஒரு குழந்தை தடுமாறி விழுந்து கிடப்பதைப் போல அம்மன்னர் முல்லைக் கொடியைக் கண்டதும் பதறிப்போனார். எப்படியும் அந்தக் கொடியைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுதான் அந்த நேரத்தில் பாரிக்குத் தோன்றியதே தவிர, தேரைக் கொடுக்கலாமா, ஆளை அனுப்பலாமா என்றெல்லாம் அறிவுபூர்வமாக அந்த நேரத்தில் எப்படியப்பா சிந்தித்துக் கொண்டிருக்கமுடியும்?
பாரதி - ஆம் அம்மா.
தவமணி - பாரியின் அருள் உள்ளம் அப்படிப்பட்டது பாரதி. துன்பப்படுவது அம்மா என்றால் என்ன, முல்லைக் கொடி என்றால் என்ன? எந்த உயிரானாலும் துன்பப்படுவதைத் தீர்க்கவேண்டியது மனிதனின் முதற்கடமை அல்லவா?
பாரதி - உண்மைதான் அம்மா.
தவமணி - பாரதி. மனிதர்களோ, விலங்குகளோ, எங்கு வேண்டுமானாலும் நடந்து சென்று தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால், அந்த முல்லைக்கொடி எப்படிப் போகும்? யாரிடம் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியும்?
பாரதி - பாவம் அம்மா அந்த முல்லைக் கொடி.
தவமணி - ஆமாம் பாரதி. ஒரு நிமிடம் நான் அந்த முல்லைக் கொடியாக இருந்து, நீ பாரியாக இருந்தால்....?
பாரதி - உங்களை விட்டுப்போகவே மாட்டேன் அம்மா.....
தவமணி - அவ்வளவு பாசம் அம்மாவின் மீதா? முல்லைக்கொடியின் மீதா பாரதி...
பாரதி - இரண்டு பேரின் மீதும்தான் அம்மா...
தவமணி - அப்படியானால் வீட்டிற்குப் போகாமல் இந்த முல்லைக்கொடியுடனேயே இருந்துவிடலாமா பாரதி? அப்படிப் பதறிப்போய்த்தான் வள்ளல் பாரி தன்தேரை முல்லைக்குக் கொடுத்தான்... புரிகிறதா.? (சிரிக்கிறார்கள்) இதோ வேலை முடிந்துவிட்டது. வள்ளல் பாரி முல்லைக்குத் தேரைத் தந்தார் என்றால் எங்கள் பாரதி இந்த முல்லைக் கொடிக்கு நல்ல பந்தலைத் தந்து விட்டான் இல்லையா?
தவமணி - இனி முல்லைக்கொடி பந்தலில் ஏறி உனக்கு நன்றிப் பரிசாக, இனிய மலர் கொடுக்கும். பாரதி, வீட்டிற்குப் போகலாமா? (இருவரும் வீட்டை நோக்கித் திரும்புகிறார்கள்)