இளையவன் இவனா?
பாட அறிமுகம்
Introduction to Lesson

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பாண்டி நாட்டுப் பகுதியில் உள்ள பறம்பு மலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னன் பாரி ஆவான். அவனது நாடு பறம்புநாடு ஆகும். எல்லா வளங்களும் நிரம்பிய மலை பறம்பு மலையாகும். உழவர்கள் உழவு செய்யாமலேயே மூங்கில் அரிசியும், தேனும், பலாப்பழமும், வள்ளிக் கிழங்குகளும் தரக்கூடியது பறம்பு மலை என்று கபிலர் பாடுகின்றார். அந்த மலையின் தற்காலத் தோற்றத்தைத்தான் இப்போது இந்தப் படத்தில் பார்க்கிறீர்கள். இம்மலை இன்றைக்குப் பிரான்மலை என்று அழைக்கப்பெறுகிறது. பாரியின் நெருங்கிய நண்பர் கபிலர்; சங்ககாலப் புலவர்களுள் சிறந்தவர் ஆவார். சங்க இலக்கியப் பாடல்களில் மிக அதிகமான மலர்களைக் குறித்துப் பாடியவர் கபிலர். கொடையில் சிறந்த வள்ளலாகப் பாரி விளங்கியப் பெருமையைப் பலரும் பாடியுள்ளனர். கடையெழுவள்ளல்களுள் ஒருவனான பாரி மலைவளம் காணச் சென்றபோது பற்றிப்படரக் கொழுகொம்பின்றித் தவித்த முல்லைக் கொடி உதவியாகத் தான் ஏறிவந்த தேரையே கொடுத்தவன். அதனால் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி என்று போற்றப்பெறுகின்றான். சிறு கிராமத்தைச் சார்ந்த பாரதி என்கிற சிறுவனுக்கும், அவனது அம்மாவுக்கும் இடையிலான உரையாடல் மூலமாக வள்ளல்பாரி முல்லைக்குத் தேர்கொடுத்த வரலாறு நாடகமாக்கப் பெற்றிருக்கிறது. இதுவே, நமது பாடப்பகுதியாகும்.