தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-மணிமேகலை

 • 3.1 மணிமேகலை

  தமிழ்க் காப்பியங்களின் தலைப்புக்களே பல சிந்தனை உணர்வுகளை எழுப்புகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகிய இருவரின் சிலம்பை மையமாகக் கொண்டு அமைகின்றது. சீவக சிந்தாமணி  காப்பியத் தலைவன் சீவகன் பெயரைத் தாங்கி நிற்கிறது. சூளாமணி  அணிகலன் பெயரைக் கொண்டு அமைகின்றது. மேலை நாட்டுக் காப்பியங்களும், வடமொழிக் காப்பியங்களும் ஆண் பாத்திரங்களையே முதன்மைப்படுத்தி அமையத் தமிழில்தான் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திப் பல காவியங்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு காப்பியப் படைப்பே மணிமேகலை.

  ● தலைப்பு

  காப்பியத் தலைவி மணிமேகலை பெயரால் இக்காப்பியத் தலைப்பு அமைகின்றது. இந்த மணிமேகலை என்ற பெயர் கோவலனின் குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயர் என்பது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. பொது நிலையில் மணிமேகலை என்பது ஒருவகை அணிகலன் ஆகும். மகளிர் தம் இடையில் அணியும் நகை மேகலை. இது மணியால் (மாணிக்கம்) செய்யப்பட்டதால் மணிமேகலை எனப்படும்.

  இந்தப் பெருங்காப்பியத்தின் தலைப்பு, இதன் கதைத் தலைவியான மணிமேகலையின் பெயரால் அமைந்துள்ளது. மேலும், ஒரு சிறப்பாக, முந்திய காப்பியத் தலைப்பு சிலம்பின் பெயரால் அமைந்துள்ளது போன்றே, மகளிர் அணியாகிய மணிமேகலையின் பெயராலும் அமைந்துள்ளது இக்காப்பியம்.

  3.1.1 காப்பிய ஆசிரியர்

  மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். இதனைப் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

  வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
  மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
  ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனன்.

  (வளங்கெழு = வளம் மிக்க; ஆறைம் = 6x5=30)

  இங்குக் கூல வாணிகன் சாத்தன் என்று இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், ‘சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலை’ என்று குறிப்பிடுகிறார். இதனால் கூல வாணிகன், சீத்தலை என்ற இரு அடைமொழிகள் இவர் பெயரோடு இணைகின்றன. சாத்தன் என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் வணிகர்க்கே உரிய பெயர். சீத்தலை என்பது அவரது ஊர்ப் பெயராக இருக்க வேண்டும். சீத்தலை என்ற ஊர் திருச்சி மாவட்டப் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது. இவர் மதுரையில் சென்று நெல், வரகு, தினை முதலான தானியங்களை (கூலம்) வியாபாரம் செய்ததால் இப்பெயர் பெற்றார் என்று கூறுவர்.

  3.1.2 காப்பியக் காலம்

  இவ்வாசிரியர், சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தில் வாழ்ந்தவர் என்பது இவ்விரு காப்பியங்களின் பதிகம் வழி அறிய முடிகிறது. ‘‘இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றச் சாத்தனார் கேட்டார்’’ என்றும், ‘‘சாத்தனார் மணிமேகலை பாட அடிகள் கேட்டார்’’ என்றும் இப்பதிகங்கள் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரத்தில், மலைவளம் காணச் சென்ற செங்குட்டுவனுடன் இளங்கோவும் சாத்தனாரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், கண்ணகி விண்ணகம் சென்ற காட்சியைக் கண்டு, செங்குட்டுவனுக்குக் குன்றக் குறவர்கள் அறிவிக்க, உடன் இருந்த சாத்தனார் “யான் அறிகுவன்” என்று சொல்லிக் கோவலனும் கண்ணகியும் அடைந்த துன்பக் கதையை எடுத்துரைக்கிறார். கதை கேட்ட இளங்கோ ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூற, சாத்தனார் ‘அடிகள் நீரே அருள்க’ என்கிறார். இங்கு, இளங்கோ சிலப்பதிகாரம் பாடக் காரணமாக இருந்தவர் சாத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே காலக் கட்டத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பர். இளங்கோ ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’, ‘நன்னூல் புலவன்’ என்று சாத்தனாரைக் குறிப்பிடுவதால் இவர் இளங்கோவடிகளுக்கு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. சாத்தனார் பாடியதாகச் சங்க இலக்கியங்களில் சில பாடல்கள் காணப்படுகின்றன. ஆயின், சங்கப் பாடல்கள் பாடிய கூலவாணிகன் சாத்தன் வேறு; மணிமேகலை பாடிய சாத்தன் வேறு என்பது அறிஞர் முடிவு. எவ்வாறாயினும் இக்காப்பியம் எழுந்த காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது தெளிவு.

  3.1.3 காப்பியக் கட்டமைப்பு

  இக்காப்பியம் முப்பது காதைகளைக் கொண்டது. இவற்றுடன் பதிகம் ஒன்றும் இடம் பெறுகின்றது. இவற்றை நோக்கச் சிலப்பதிகாரத்தை அடியொற்றி இந்நூல் எழுந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இரு காப்பியங்களின் பதிகங்களுமே மூல நூலாசிரியர்களால் பாடப் பெறவில்லை என்பது தெளிவு. சிலப்பதிகாரம் முதன் முதலில் காதை என்ற பெயரைப் பயன்படுத்தினாலும் அதில் சில உட்பிரிவுகள் காதை என்ற பெயரைப் பெறவில்லை. மணிமேகலையில் முப்பது காதைகளுமே காதை என்ற பெயரையே தாங்கி நிற்கின்றன. மணிமேகலைக் காப்பிய உட்பிரிவு காதை என்றிருந்தாலும் சிலம்பு போலக் காண்டம் என்ற பெரும் பிரிவு இடம் பெறவில்லை. இவ்வேறுபாடுகள் மட்டுமல்ல; காதைப் பாடல் அமைப்பிலும் கூட மணிமேகலை வேறுபட்டு நிற்கிறது. சிலம்பின் காதைகள் பெரும்பாலும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்தன. என்றாலும் சில காதைகள் பல, யாப்பு அமைப்பைக் கொண்டுள்ளன. மணிமேகலைக் காப்பியத்திலோ அனைத்துக் காதைகளும் நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. தொடர்நிலை அமைப்பிலும் சிலம்பிலிருந்து இக்காப்பியம் வேறுபடுகிறது. சிலம்பில் பல காதைகள் தொடராத் தொடர் நிலையாக (Discontinuous narration) அமைந்துள்ளன. மணிமேகலைக் காப்பியக் காதைகள் அனைத்தும் சொற்பொருள் தொடர்நிலையாகவே அமைந்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:18:16(இந்திய நேரம்)