தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-சமூகச் சிந்தனை

  • 3.5 சமூகச் சிந்தனை

   மணிமேகலைக் காப்பியம் ஒரு குறிக்கோள் இலக்கியம் என்பது அதன் பாவிகப் பண்பால் அறியலாம். அது முன்னர் விளக்கப்பட்டது. அப்பாவிகம் அன்றியும் வேறு பல சமூக, சமயம் சார்ந்த பல அறக்கருத்துகளையும் இக்காப்பியம் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

   3.5.1 சமூக நீதி

   “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. அதுபோல இக்காப்பியம் பசிப்பிணி போக்கும் அறம் செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது. மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்று எல்லாரும் உணவும், பாதுகாப்பும் பெறும் வகையில் பொருளைக் கொடுத்தலே சிறந்த அறம்; அதனின் வேறான அறம் இல்லை என்கிறது.

   பசுக் கொலை செய்வது பாவம் என்பதை, ஆபுத்திரன் கதை வாயிலாக எடுத்துரைக்கிறது. இது ஒரு வகையில், ஆரிய மரபுக்கு எதிரான ஒரு சிந்தனையை முன்மொழிகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆபுத்திரன் இளம்பூதி என்னும் அந்தணனின் வளர்ப்பு மகன். மறையோர் வேள்வித் தீயில் பசுவைக் கொலை செய்யக் கொண்டு வரும்போது, அப்பாவச் செயலைத் தடுக்கிறான். மறையோர் அவனை ‘ஆ (பசு) மகன்’ என ஏசுகின்றனர்; அதோடு “காப்புக் கடை கழிந்து கணவனை இழந்து கெட்ட சாலி மகன்” என்று அவன் பிறப்பைப் பழிக்கின்றனர். ஆபுத்திரன் அந்தணர் போற்றும் முனிவர்களான அசலன், சிருங்கி, விரிஞ்சி, கேச கம்பளன் முதலோர், முறையே பசு, மான், புலி, நரி இவற்றின் மக்களே என்பதை எடுத்துரைக்கிறான். அதோடு வசிட்டர், அகத்தியர் ஆகிய முனிவர்கள் திலோத்தமை என்ற கணிகை மக்களே என்பதை எடுத்துரைத்துப் பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை முன் வைக்கிறான். இது ஆரியர் தம் நால்வருணப் பாகுபாட்டுணர்வின் எதிர்க்குரலாக அமைகின்றது.

   ஆபுத்திரன் அறச்செயல் கண்டு மகிழ்ந்த இந்திரன் “வேண்டும் வரம் கேள்” என்கிறான். அதற்கு ஆபுத்திரன்,

   அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
   நற்றவம் செய்வோர் பற்றுஅற முயல்வோர்
   யாவரும் இல்லாத் தேவர்நல் நாட்டுக்கு
   இறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே

   (பாத்திர மரபு கூறிய காதை: 40-43)

   என்று இந்திரனைப் பழிக்கிறான். இதுவும் வேத மரபுக்கு எதிரான சிந்தனையே என்பது தெளிவாகிறது. இதனால் சினமுற்ற இந்திரன் பெருமழை பெய்யச் செய்து, ஆபுத்திரனின் அமுதசுரபிக்கு தேவையில்லாமல் செய்து விடுகிறான்.

   3.5.2 சமய நீதி

   ‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்பர். இது அனைத்து மொழிக் காப்பியங்களுக்குமான பொதுநீதி. தமிழ்க் காப்பியங்களும் இதற்கு விதி விலக்கல்ல. மணிமேகலையில் வரும் கடவுளர் பாத்திரங்களும், அறவண அடிகளும் சமய நீதி உணர்த்தவே வருகின்றனர். ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பதில் சமண, பௌத்த மதங்கள் ஆழ்ந்த நம்பிக்கை உடையன. இவ்வகையில் பௌத்த சமயக் காப்பியமான மணிமேகலையில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் செயல்களுக்கும் காரணம் ‘வினைப்பயனே’ என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அதோடு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகிய நிலையாமைக் கோட்பாடுகளை வற்புறுத்துவதில் இவ்விரு சமயங்களும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வன.

   இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா;
   வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா;
   புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்;
   மிக்க அறமே விழுத்துணை ஆவது

   (சிறைசெய் காதை: 135-138)

   (புத்தேள் உலகம் = தேவர் நாடு; விழுத்துணை = சிறந்த துணை)

   என மணிமேகலை உணர்த்தும்.

   வீடுபேறு பெறுவதே வாழ்வின் நோக்கம் என்பது இவற்றின் முடிந்த முடிவு. இதற்கு அடிப்படை காமத்தைக் கடத்தல் வேண்டும் என்பது. இதனால் தான் மணிமேகலையின் காம உணர்வுகளை ஆங்காங்கே எடுத்துக் காட்டி, அவை நல் அறச் சிந்தனையால் முற்றிலும் கடியப்படுவதைக் காப்பியம் காட்டுகிறது. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதைகளில் பௌத்த அறச் சிந்தனை விரிவாகச் சாத்தனாரால் பேசப்படுகிறது. காப்பியத்தில் இடம் பெறும் சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை, யாக்கை நிலையாமையை உணர்த்தும் அருமையான பகுதி. அதோடு ‘மங்கையர் உடல்’ காமத்தின் குறியாக அமையும் உறுப்புகள்  இடுகாட்டில் காக்கை கூகை, கழுகு, நாய், நரிகளால் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பதைச் சுட்டி யாக்கை நிலையாமையை, காமத்தின் இழிவை எடுத்துரைக்கிறது.

   பிறப்பு, இறப்பு என்பது உலக இயற்கை; இதற்காகக் கவலைப்படுவது பேதைமை என்பதை அறவண அடிகள் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

   உதயகுமரன் இறந்ததற்காகப் புலம்பும் மணிமேகலை இதே கருத்தையே முன்வைக்கிறாள்.

   பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
   அறந்தரு சால்பும் மறம்தரு துன்பமும்

   (கந்திற்பாவை வருவது உரைத்த காதை: 19-20)

   உணர்த்தவுமே காய சண்டிகை வடிவு கொண்டேன் என்கிறாள்.

   மாதவி துறவறம் மேற்கொள அறவண அடிகளைத் தொழுகிறாள். அவளுக்குச் சமய நீதி உணர்த்தும் அடிகள்,

   பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்;
   பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்;
   பற்றின் வருவது முன்னது; பின்னது
   அற்றோர் உறுவது; அறிகஎன்று அருளி,
   ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி,
   உய்வகை இவைகொள்

   (ஊர் அலர் உரைத்த காதை: 64-69)

   (ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - கள், காமம், கொலை, பொய், களவு என்னும் ஐந்தினையும் முற்றும் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி; சீலம் - ஒழுக்கம்)

   என அறவுரை கூறுகிறார்.

   3.5.3 புராண இதிகாச வரலாறு

   மணிமேகலைக் காப்பியம் சமூக நீதி, சமய நீதி பேசுகிற இடங்களில் பல புராண மரபுக் கூறுகளை உவமையாக எடுத்தாண்டு கூற வந்த கருத்துக்கு வலிவு சேர்க்கிறது. முருகன் கிரவுஞ்ச மலையைத் தகர்த்ததும், திருமால் இராமாவதாரத்தில் கடலடைத்த வரலாறும், அவன் வாமன அவதாரத்தில் மூவடியால் நிலம் அளந்து மாவலியை அழித்ததும் ஆகிய புராண வரலாறுகள் இங்குக் குறிப்பிடத்தக்கன. அதோடு மட்டுமல்லாமல், திருமகள் ஆடிய பாவைக் கூத்து, மணிவண்ணன் ஆடிய குரவைக் கூத்து ஆகியனவும், காமன், இந்திரன், சயந்தன் பற்றிய புராண மரபுக் கூறுகளும் மணிமேகலைக் காப்பியத்திற்குச் சிறப்புச் செய்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:56:49(இந்திய நேரம்)