தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதைப்பின்னலும் பாவிகமும்

 • 3.3 கதைப்பின்னலும் பாவிகமும்

  காப்பியத்தில் இடம்பெறும், கதைப்பின்னல் பற்றியும் காப்பியப் பாவிகம் பற்றியும் இனி பார்ப்போம்.

  3.3.1 கதைப்பின்னல்

  மேற்கண்ட காப்பிய நிகழ்வுகளை ஆசிரியர் சாத்தனார் வெளிப்படுத்தும் முறை சுவையானது. அவரது காப்பிய நடை எளிமையானது. பல்வேறு கிளைக் கதைகளை இணைத்துக் காப்பியச் சுவைபடக் கதையை நகர்த்திச் செல்கிறார். பல்வேறு பழம்பிறப்புக் கதைகளைக் கதைப் போக்கில் இணைத்து நயம்பட உரைப்பது குறிப்பிடத்தக்கது. காப்பியக் கதையுடன் மாதவி, சுதமதி, காய சண்டிகை, ஆதிரை, கண்ணகி, உதயகுமரன், ஆபுத்திரன், கோவலன் முதலானோரின் பழம்பிறப்புக் கதைகளை இணைத்துக் காப்பியத்திற்கு ஒரு பெருமித உணர்வை ஊட்டியிருக்கிறார் சாத்தனார்.

  தீவ திலகை, மணிமேகலா தெய்வம், தரும பீடிகை, கந்திற்பாவை முதலான தெய்வீகப் பாத்திரங்களும், இயற்கைக்கு மிகையான நிகழ்வுகள் பலவும் காப்பியத்தில் இடம்பெறுவது காப்பியத்திற்கு மேலும் ஓர் பெருமித உணர்வை ஏற்படுத்துகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில் கால் கொள்ளும் காப்பிய நிகழ்ச்சி, மணிபல்லவம், சாவக நாடு வரை சென்று வஞ்சிக்குப் போய்க் காஞ்சியை அடைந்து இறுதி வடிவம் பெறுகிறது. மணிமேகலையை மலர்வனம் செலுத்தக் கருதிய சாத்தனார் விழாவறை காதை, ஊரலர் உரைத்த காதைகளை அமைத்து மலர் வனத்துள் புகச் செய்கிறார்.

  அங்கிருந்து அவளை மணிபல்லவத்திற்கு எடுத்துச் செல்லக் கருதி உதயகுமரன் காதலைத் தோற்றுவிக்கிறார். மணிமேகலைக்கும் அவன்பால் இருந்த காதலே, மணிமேகலா தெய்வம் அவளை மணிபல்லவத்திற்கு எடுத்துச் செல்லக் காரணமாக அமைகிறது. இங்கு, மணிமேகலை பழம்பிறப்பு வரலாறும், தரும பீடிகை வரலாறும், அமுதசுரபி வரலாறும், தீவ திலகை வரலாறும் வந்து சேர்கின்றன.  மணிமேகலா தெய்வம் கொடுத்த மந்திரம், பின்னர், உலக அறவியில் இருந்து, காய சண்டிகை வடிவில் உதயகுமரனிடமிருந்து தப்பிக்க உதவுகிறது; அரசன்தேவி ஒரு முரடனை ஏவி, அவள் கற்பை அழிக்க ஏற்பாடு செய்யும் போது, ஆணாக உருமாறுவதற்கு உதவுகிறது; தேவி உணவளிக்காது வருத்த, பசித்துன்பத்தைத் தாங்குவதற்கும் உதவுகிறது; மாதவன் வடிவு கொண்டு, சமய அறம் கேட்கவும், வான்வழிச் செல்வதற்கும் அவளுக்கு அருந்துணையாகிறது.

  காய சண்டிகை வரலாறு, உதயகுமரன் இறப்பிற்குக் காரணமாகிறது. ஆபுத்திரன், ஆதிரை வரலாறு அமுத சுரபியோடு இணைகிறது. சக்கரவாளக் கோட்டம் பற்றிய கதை, உடம்பின் நிலையாமையை வலியுறுத்த வந்துள்ளது. இவ்வாறு, பல்வேறு வரலாறுகளும் கிளைக் கதைகளும் நிகழ்வுகளும் வந்து இணைந்து காப்பியக் கதைப்பின்னலைச் சுவைபட நடத்திச் செல்கின்றன.

  3.3.2 காப்பியப் பாவிகம்

  பாவிகம் என்பது என்ன என்று அறிந்து கொள்வோமா? ஒரு பாடலைப் படிக்கிறோம். அது முழுமையாக உணர்த்தும் பொருள் என்ன என்று சூழ்ந்து நோக்கி (எண்ணிப் பார்த்துப்) புரிந்து கொள்கிறோம். ஒரு நீண்ட கதையைப் படித்து முடிக்கும்போதும் அது முழுமையாக என்ன கருத்தை உணர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்கிறோம். அல்லவா?

  ‘அடுத்தவனின் மனைவியை அடைய நினைப்பவனின் குலமே அழியும்’ என்பது இராமாயணக் காப்பியத்தின் பாவிகம் ஆகும். அரிச்சந்திரன் கதை ‘உண்மையே பேசுவோர் பல துன்பங்களை அடைந்தாலும் இறுதியில் பெருமை அடைவர்’ என்பதை உணர்த்துகிறதல்லவா? இது அரிச்சந்திர புராணத்தின் பாவிகம். ‘பொறுமையை விடச் சிறந்த கவசம் இல்லை’ என்பது பாரதக் கதையின் பாவிகம். சிலப்பதிகாரம் மூன்று பெரிய உண்மைகளைப் பாவிகமாகக் கொண்டிருப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

  பாவிகம் என்பது காப்பியப் பண்பே என்பார் தண்டி. சாத்தனார் மேற்கண்டவாறு கதை நிகழ்ச்சிகளைப் பல கோணங்களில் எடுத்துச் சொல்வதற்கான காரணம் என்ன? பாவிகமாக அவர் எதை உணர்த்த விரும்புகிறார்? உலகில் மக்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு காரணம் பற்றி நிகழ்கின்றதேயன்றி வேறில்லை. இப்பிறப்பில் மக்களுக்கு உண்டாகும் நன்மை தீமைகளுக்குக் காரணம் முன்னை வினைப் பயனே. “பிறப்புப் பல மாறினும் வினைப் பயன் விடாது வந்து பற்றும் என்பதைப் பாவிகமாக வலியுறுத்தவே சாத்தனார் இக்காப்பியம் படைத்தார்” என்று தோன்றுகிறது. ஏனைய சமயக் கணக்கர் தம் சமயச் சிந்தனையிலும் பௌத்த சமயச் சிந்தனையே மேலோங்கியது என்பதை வலியுறுத்துவதும் இதன் நோக்கமாக அமைகின்றது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.

  மணிமேகலை - காப்பியப் பெயர்க்காரணம் தருக.

  2.

  மணிமேகலை மலர்வனம் புகுவதற்கான சூழல் என்ன?

  3.

  மணிமேகலையின் பழம்பிறப்பு வரலாற்றை எடுத்துரைக்க.

  4.

  மணிமேகலைக் காப்பியப் பாவிகம் பற்றி நீவிர் அறிவன யாவை?

புதுப்பிக்கபட்ட நாள் : 02-10-2017 19:56:38(இந்திய நேரம்)