Primary tabs
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தொன்மை வாய்ந்த தமிழினத்தின் பண்பாட்டுச் சிந்தனையான உயிர்க்கொலை மறுப்பை முன் வைக்கிறது. தமிழர் இனத் தலைவனாகிய இராவணன் சீதையைத் தன் தங்கையாக ஏற்று அவளுக்குச் சிறுதீங்கும் ஏற்படா வண்ணம் காப்பதைச் சுட்டுகிறது. இராவணன் தம்பியாகிய பீடணன் மண்ணாசையால் தன் தமையன் இறப்பிற்குக் காரணம் ஆனதைக் குறிப்பிடுகிறது. தமிழர்கள் காமச் சிறுமை உடையவர்கள் அல்லர் என்பதைக் கூறுகிறது. தமிழின் தொன்மையும் சீர்மையும் பலவாறாகப் போற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
வான்மீகியின் இராமாயணம், கம்ப இராமாயணம் ஆகியவற்றின் சிந்தனைக்கு மறுதலையான சிந்தனையை இராவண காவியம் தருவதைக் காணலாம்.
இராமாயணத்தின் தன்னிகர் இல்லாத் தலைவன் இராமன் என்றால் இராவண காவியத்தின் தன்னிகர் இல்லாத் தலைவன் இராவணன் என்பதை அறியலாம்.
தன் தமையன்மார்களுக்கு இரண்டகம் செய்த தம்பிமார்களை அரவணைத்துக் கொண்ட இராமனின் இயல்பை இக்காப்பியத்தின் வழி அறிய முடிகிறது.
தமிழ்மொழியின் தொன்மையையும் உயர்வினையும் இக்காப்பியம் தெளிவுபடுத்துகிறது.
தமிழர்கள் அறநெஞ்சமும் பண்பாட்டு மேன்மையும் உடையவர்கள் என்பதை இக்காப்பியம் தெளிவுபடுத்துகிறது.