தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.1 பெயர்ச்சொல்

  • 3.1 பெயர்ச்சொல்

    ஐம்பொறிகளாலும் உள்ளத்தாலும் உணரும் பொருள்களைக் குறிப்பவை பெயர்ச்சொல் என்று இந்தத் தொகுதியின் முதல் பாடத்தில் படித்தோம். இந்தப் பெயர்ச்சொல்லுக்கு உரிய இலக்கணத்தை இலக்கண நூலோர் குறிப்பிட்டுள்ளனர்.
     

    பெயர்ச்சொல்
    இடுகுறிப்பெயராய் வரும்.
    காரணப்பெயராய் வரும்.
    காலம் காட்டாது.
    எட்டு வேற்றுமைகளையும் ஏற்கும்.
    உயர்திணையாகவும் அஃறிணையாகவும் வரும்.
    ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய ஐந்து பால்களிலும் வரும்.
    தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும்.


    இடுகுறி காரணம் மரபோடு ஆக்கம்
    தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
    வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
    ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே

    (நன்னூல் : 275)

    என்னும் நன்னூல் நூற்பா இதனை விளக்குகிறது.
     

    3.1.1 இடுகுறிப்பெயர்

    காரணம் எதுவும் இல்லாமல் இதற்குப் பெயர் இது என்று இட்டு வழங்கப்படுவது இடுகுறிப் பெயர் எனப்படும்.

    (எ.கா.) மரம், நிலம்.
     

    3.1.2 காரணப் பெயர்

    ஏதேனும் காரணம் கருதி ஒரு பொருளுக்கு வழங்கப்படும் பெயர் காரணப் பெயர் எனப்படும்.

    (எ.கா.) அணி, பறவை

    அணியப்படுவதால் அணிகலன்களை அணி என்றும் பறப்பதால் பறவை என்றும் குறிப்பிடுகிறோம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-07-2017 15:42:49(இந்திய நேரம்)