தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினைமுற்று

  • 2.1 வினைமுற்று

    தமிழ் இலக்கண நூல்களில் வினைமுற்றுகள் பற்றிய செய்திகள் ‘சொல்லிலக்கணம்’ என்னும் பிரிவில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்களில் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் வினைமுற்றுகள் பற்றிக் காணலாம்.

    ‘நான் வந்தேன்’ என்பது ஒரு தொடர். இதில் நான் என்பது தன்மை ஒருமை இடப்பெயர். நான் என்பதைத் தொடரமைப்பில் எழுவாய் என்று குறிப்பதுண்டு. தமிழ்த் தொடர்களில் எழுவாய்க்கேற்ற வினைமுற்றுச் சொல்லே வர வேண்டும் என்னும் வரையறை உள்ளது.

    நான் வந்தேன்
    நீ வருகிறாய்
    அவள் வருவாள்
    அது வருகிறது

    நான், நீ, அவள், அது என வெவ்வேறு இடப்பெயர் எழுவாய்கள் வரும்போது வினைமுற்றுகளும் வெவ்வேறாய் வந்துள்ளன என்பதைக் காண்கிறீர்கள். இது போன்ற செய்திகளைச் சொல்லதிகாரப் பகுதியில் இலக்கண நூலார் உரைத்துள்ளனர்.

    2.1.1 வினைமுற்றுகளில் தன்மை

    தன்மை வினைமுற்று, பேசுபவனுடைய செயலைக் குறிப்பது எனக் கண்டோம். ஒருவர் நம்மிடம் நேராகப் பேசுகிறபொழுது நாம் அவரை ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்கிறோம். தொலைபேசியின் வழித் தொடர்பு கொள்ளும் பொழுதும் குரலை வைத்து ஆணா, பெண்ணா எனத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எழுத்து வடிவில், தனியாக ஒரு தன்மை வினைமுற்றுச் சொல் (எ.டு : வந்தேன், கண்டேன்) யார், எவர் என முன்பின் தொடர்பு காட்டப்படாதிருந்தால் அச்சொல்லைப் பேசுபவர் ஆணா, பெண்ணா என அறிந்து கொள்ள முடியுமா? நேரிலோ, குரல் வழியாகவோ அல்லாமல் வந்தேன் எனும் தன்மை வினைமுற்று என்ன பால் உணர்த்தும் எனக் கண்டுகொள்ள முடியாது. ஆண்பாலையும் குறிக்கலாம்; பெண்பாலையும் குறிக்கலாம். அஃறிணை ஒருமையையும் குறிக்கலாம். சூழ்நிலையை நோக்கித்தான் பால் கண்டறிய வேண்டியிருக்கும். இதுவே தன்மை வினைமுற்றின் இயல்பு ஆகும். ஆனால் படர்க்கை வினைமுற்று வந்தான், வருகிறாள், வருகிறது எனத் தெளிவாகப் பால் உணர்த்தும். இது படர்க்கை வினைமுற்றின் இயல்பு.

    தன்மை வினைமுற்று பால் உணர்த்தாது; எனினும் ஒருமை-பன்மை வேறுபாடு உணர்த்தும். 'வருகிறேன்’ என்பது ஒருவரைக் குறிக்கிறது. ‘வருகிறோம்’ என்பது பலரைக் குறிக்கிறது. இவ்வாறு, ஒருவரா பலரா என்னும் எண்ணிக்கையை மட்டும் இச்சொற்கள் வழி அறியலாம்.

    இதுவரை பார்த்தவற்றால், தன்மை வினைமுற்றுகள் வினையை உணர்த்தும் (வருதல், காணுதல்). பேசுவோர் ஒருவரா, பலரா அல்லது ஒரு பொருளா, பல பொருளா என்பதை உணர்த்தும். (ஒருமை-பன்மை) பால் உணர்த்தா (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்) எனப் புரிந்து கொள்ளலாம். தன்மை வினைமுற்று பால் உணர்த்தாது என்பதும், பால்களுக்குப் பொதுவாக வரும் என்பதும் ஒரே பொருள்தான். (வினைச்சொற்களின் அடிப்படையான இயல்பு காலம் காட்டுதல். இதுபற்றிக் ‘காலம்’ எனும் பாடத்தில் (a02126) பின்னர் விரிவாகக் காண்போம்.)

    2.1.2 வினைமுற்றுகளில் விகுதிகள்

    தன்மை வினைமுற்றுகளில் தன்மை என்னும் இடத்தையும், ஒருமையா, பன்மையா என்னும் எண்ணிக்கையினையும் உணர்த்தும் உறுப்பை விகுதி என்கிறோம்.

    பார்த்தேன் என்பது தன்மை ஒருமை வினைமுற்று.

    பார்+த்+த்+ஏன்

    பார் என்பது பகுதி

    ஏன் என்பது விகுதி

    இவற்றுக்கு இடையில் இரு தகர ஒற்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று சந்தி, மற்றொன்று காலம் காட்டும் இடைநிலை, ‘ஏன்’ என்னும் விகுதியால் அறியப்படுவன இரண்டு.

    (1) தன்மை (இடம்)
    (2) ஒருமை (எண்)

    உண்டோம் என்பது தன்மைப் பன்மை வினைமுற்று.

    உண்+ட்+ஓம்

    இச்சொல்லில் உண் என்பது வினைப்பகுதி

    ஓம் என்பது விகுதி.

    ட் என்பது இறந்தகால இடைநிலை. இச்சொல்லிலும் ஓம் என்னும் விகுதியால் அறியப்படுவன இரண்டு செய்திகள்.

    (1) தன்மை (இடம்)
    (2) பன்மை (எண்)

    ஆக, தன்மை வினைமுற்றுகளில் விகுதிகளே ஒருமை-பன்மை வேறுபாட்டை உணர்த்துகின்றன என அறிந்து கொள்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2018 15:10:34(இந்திய நேரம்)