Primary tabs
5.4 இலக்கணக் கூறுகளின் மாற்றங்கள்
நாயக்கர் காலத் தமிழில் ஒலிநிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தது போன்று பல்வேறு இலக்கணக் கூறுகளிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய மாற்றங்கள் நிகழும்போது பழைய வடிவமும் புதிய வடிவமும் சில காலம் வழக்கில் இருந்திருக்கலாம். பின் பழைய வடிவம் முற்றிலும் மறைய, புதிய வடிவம் நிலைபெறத் தொடங்கும். அத்தகைய புதிய வடிவங்கள் சிலவற்றை இங்குக் காணலாம்.
பல வேர்ச்சொற்கள் சில அசைகளுடன் சேர்ந்து புதிய சொற்களாக உருவம் பெற்றன.
• தொழிற்பெயர் உருவாதல்
பல் என்னும் வேர் வினையாவதற்குக் குகரச் சொல்லாக்க அசையைப் பெறுவதற்கு முன்னர் ஓர் உகரத்தைப் பெறுகின்றது.
சான்று:
பல் + உ+கு > பலுகு
ககரத்தை இரட்டிக்க இது தொழிற்பெயராகிறது.
சான்று:
பலுக்கு
• பல சொற்கள் சொல்லாக்க விகுதியைப் பெற்றுப் புதிய சொற்களாகின்றன.
சான்று:
அழு + கு > அழுகு
தரு + கு > தருகு• ‘மை’ விகுதியுடைய பெயர்ச்சொற்கள்
வெண்மை, பொறுமை போன்ற மை விகுதியில் முடியும் வழக்கு ஒப்புமையாக்கமாக, பண்புப் பெயரான கனிவு என்பதற்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
சான்று:
கனிவு + மை > கனிமை
• எதிர்மறை வடிவம்
செய என்ற வினையெச்சம் எதிர்மறை வடிவமான இல்லை என்பதுடன் சேர்ந்து எதிர்மறையைக் காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
அவன் செய்யவில்லை (செய + இல்லை)
இவை போன்ற புதிய சொற்கள் சொல்லாக்க முறையில் நாயக்கர் காலத்தில் தோன்றியுள்ளன.
நாயக்கர் காலத் தமிழில் சில வேற்றுமை உருபுகளுக்கு இணையான சொல்லுருபுகள் வழக்கில் வந்துவிட்டன. பழைய வேற்றுமை உருபுகளுக்குப் பதிலாகச் சில சொற்களே வேற்றுமை உருபுகளாகச் செயல்படுகின்றன.
• கொண்டு - கருவிப் பொருள் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை உருபான ஆல், ஆன் என்பனவற்றிற்குப் பதிலாகக் கொண்டு என்ற சொல் வேற்றுமை உருபாகச் செயல்படுகிறது.
சான்று:
வாளால் வெட்டினான் > வாள் கொண்டு வெட்டினான் .
• பொருட்டு, ஆக - கொடைப் பொருள் ஒற்றுமை
நான்காம் வேற்றுமை உருபான கு என்பதற்கு இணையாகப் பொருட்டு, ஆக என்ற சொற்களே செயல்படுகின்றன.
சான்று:
அவனுக்காக/அவன் பொருட்டு வாங்கி வந்தேன்.
• இருந்து, நின்று - நீங்கல் பொருள் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை உருபு இன், இல் என்பனவற்றிற்கு இணையாக இருந்து, நின்று என்ற சொற்கள் வழக்கில் வந்துவிட்டன.
சான்று:
வீட்டிலிருந்து/வீட்டினின்று நீங்கினான்.
• உடைய - உடைமைப் பொருள் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை அது, அ என்ற உருபுகளுக்கு இணையாக உடைய என்ற சொல்லைப் பெற்று நிற்கிறது.
சான்று:
அவனது சட்டை>அவனுடைய சட்டைஎன கைகள்>என்னுடைய கைகள்• இல், இன் போன்ற இடப்பொருள் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை கண் என்ற உருபு மட்டுமல்லாமல் இதனோடு இடப்பொருள் வேற்றுமையை உணர்த்த இல், இன், உள், கடை, பால், வாய், தலை, இடை, வழி போன்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டன.
சான்று:
மலையில், அடவிபால், கடலிடை, நிழற்கண், மடைவாய்
மலை - இல்(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 28 : 11)அடவி - பால்(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 99 : 5)கடல் - இடை(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 29 : 6)நிழற் - கண்(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 23 : 3)மடை - வாய்(மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 99 : 4)தென்மாவட்டக் கிளைமொழிகளில் வைத்து என்ற சொல்லுருபு இடம்பெறுகிறது.
சான்று:
ஊரில் வைத்து உன்னைப் பார்த்தேன்.
மூவிடப் பெயர்கள் தமிழ்மொழியில் பெயர்ப் பதிலிகளாகச் செயல்படுகின்றன. அவை பெயர்களுக்குப் பதிலாக வந்து பெயர்ச் சொற்களைப் போன்று செயல்படும் தன்மை வாய்ந்தவை.
• தன்மை
தொல்காப்பியர் நான் என்று தன்மை ஒருமையைக் குறிக்க வில்லை. எனினும் நாயக்கர் காலத்தில், ஒப்புமையாக்கத்தால் யாம் என்ற சொல்லுக்கு இணையாக நாம் இருப்பதைப் போன்று, யான் என்ற சொல்லுக்கு இணையாக நான் என்ற தன்மை ஒருமை தோன்றியுள்ளது எனலாம்.
யாம்>நாம்யான்>நான்• முன்னிலை
முன்னிலை உருபேற்கத் திரிந்த வடிவமாகிய நுன், நும் என்பனவற்றிற்குப் பதிலாக உன், உம் என்பன வழக்கில் வந்துள்ளன. முன்னிலை வடிவமான நீயிர் என்ற சொல் நீர் எனத் திரிந்த வடிவத்தைப் பெற்றுள்ளது.
நுன் > உன் ; நும் > உம்
நீயிர் > நீர்
• படர்க்கை
படர்க்கையின் பழைய உருவங்களான பால் பாகுபாடு இல்லாத தான், தாம் என்னும் வடிவங்களுக்குப் பதிலாக அவன், அவள் என்ற பால் பாகுபாட்டுச் சொற்கள் வழக்கில் வந்துவிட்டன.
தான், தாம் > அவன்/அவள்
திராவிட மொழிகளில் வினைச்சொல்லின் பகுதியோடு சேர்ந்து காலம் காட்டுவனவாக அமைவன கால இடைநிலைகள். நாயக்கர் காலத்தில் இடைநிலைகள் சில பழைய வடிவத்திலேயே அமைந்தன. சில புதிய வடிவங்கள் தோன்றி வழக்கிலும் வந்துவிட்டன.
• இறந்தகாலம்
(அ) இறந்த கால இடைநிலைகளாக -த்-, -த்த்-, -ச்ச்-, -ந்த்-, -இன்-, -இ-, -ன்- போன்றன வழக்கில் காணப்படுகின்றன.
சான்று:
-த்த்-படித்தான்-ந்த்-தொலைந்தார்-இன்-ஆடினான்-இ-ஆக்கிய(ஆ) இக்காலக் கட்டத்தில் இறந்தகால இடைநிலையாக னகர ஒற்று காணப்படுகிறது.
சான்று: -ன்- சொன்னான்
(இ) பேச்சுத் தமிழில் சில இடங்களில் அண்ணச்சாயல் இடைநிலையாகக் காணப்படுகிறது.
சான்று:
இடி-ஞ்-சு>இடிந்துதெரி-ஞ்-சு>தெரிந்துமாய்-ஞ்-சு>மாய்ந்து(ஈ) சங்ககாலத்தில் இகரம் இறந்தகால இடைநிலையாகும். இது வினையெச்சத்திலும் பெயரெச்சத்திலும் காணப்படுகிறது. அது போல நாயக்கர் காலத்திலும் இகரமும் இன்னும் காணப்படுகின்றன.
• நிகழ்காலம்
நிகழ்கால இடைநிலையான கிறு என்பது நாயக்கர் கால இலக்கிய வழக்கில் காணப்படவில்லை. ஆனால் பேச்சுத் தமிழில் வழங்கி வந்ததாக வீரமாமுனிவரின் இலக்கண நூல் குறிப்பிடுகின்றது.
• எதிர்காலம்
நாயக்கர் காலத் தமிழில் எதிர்கால இடைநிலை கி என்பது வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சான்று:
உரைக்கியம்
பெயரெச்சம், வினையெச்சம் ஆகிய இரு எச்சங்களும் நாயக்கர் காலத் தமிழில் சில மாற்றங்கள் அடையத் தொடங்கின.
• பெயரெச்சம்
செய்யா என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் சங்கத் தமிழில் தொடங்கி, சங்கம் மருவிய காலத்தில் வழக்கு மிகுந்து, நாயக்கர் காலத் தமிழில் நிலைத்து விட்டது. செய்யா வாய்பாடு செய்யாத என மாறி வழக்கிற்கு வந்து விட்டது.
சான்று:
உணராத (வில்லிபாரதம், 3.5 : 6-2)
• வினையெச்சம்
சங்க காலத்தில் செய்யூஉ, செய்பு என்ற வினையெச்ச வாய்பாடுகள் மிகுந்து காணப்பட, நாயக்கர் காலத்தில் இவை குறைந்து செய்யூஉ என்ற வினையெச்சம் ஓரிரு இலக்கியங்களில் மட்டுமே காணப்படுகின்றது.
• எதிர்மறை வினையெச்சம்
சங்கம் மருவிய காலத் தமிழில் மல் என்ற விகுதி கொண்ட எதிர்மறை வினையெச்சம் மிகவும் குறைந்து காணப்பட, நாயக்கர் காலத் தமிழில் மிகுதியாகவே காணப்படுகிறது.
சான்று:
ஆடாமல் (வில்லிபாரதம், 1.8 : 6-1)
• நிபந்தனை வினையெச்சம்
செய்தால் என்ற நிபந்தனைப் பொருள்தரும் வடிவத்திற்குப் பதிலாகச் செய்கின்றால் என்ற மற்றொரு வடிவமும் வளர்ச்சி அடைந்துள்ளது. நிகழ்கால வடிவமான கின்று என்பதுடன் சேர்ந்து இவ்வெச்சம் உருவாகியுள்ளது.
சான்று:
நீர் ஆடுகின்றால் (ஆடினால்)
• பிற எச்சங்கள்
(அ) ‘செய்யப்பட்டிருந்தாலும் கூட’
செய்தால் + உம் என்பது வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. இவ்வினையெச்சம் ‘செய்யப்பட்டிருந்தாலும் கூட’ என்ற பொருளைத் தருகிறது.
(ஆ) ‘செய்து முடிந்தவுடன்’
செயலும் {செய் + அல் (தொழிற்பெயர் விகுதி) + உம்} என்பது புதிய வினையெச்சமாக வளர்ச்சியுறுகிறது. இது ‘செய்து முடிந்தவுடன்’ என்னும் பொருளைத் தருகிறது. நாயக்கர் காலத்தில் இவ்வழக்கு மிகுந்துள்ளது.
(இ) ‘மை’ விகுதியுடைய வினையெச்சம்
பழங்காலத்திலேயே மை விகுதி எதிர்மறைப் பெயரெச்சத்துடன் வந்துள்ளது.
சான்று:
செய்யாமை கூறாமை
பின்பு, உடன்பாட்டுப் பெயரெச்சத்துடன் செயலையும் குறிக்கின்ற தொழில் அல்லது பண்புப் பெயரை உருவாக்க இணைக்கப்பட்டுள்ளது.
சான்று:
செய்தமை செய்கின்றமை
பழங்கால விகுதி வடிவங்களில் சில மட்டுமே நாயக்கர் காலத்தில் வழக்கத்தில் வந்துள்ளன. வடமொழிச் செல்வாக்கால் புதிய பல வடிவங்கள் நடைமுறை வழக்கத்திற்கு வந்து விட்டன.
• தன்மை விகுதிகள்
(அ) ‘என்’ விகுதி
இந்த ஒருமை விகுதி சங்க நூல்களில் மிகுதியாகப் பயின்றுவர நாயக்கர் காலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வந்துள்ளது.
சான்று:
வந்தனென் (வில்லிபாரதம், 4.1 : 12-4)
தணிந்தென் (வில்லிபாரதம், 3.5 : 98-3)(ஆ)‘அன்’ விகுதி
சங்கத் தமிழில் அன் ஒருமை விகுதி குறைவாகக் காணப்பட, நாயக்கர் காலத்தில் பெருவழக்காகிவிட்டது.
சான்று:
அகற்றுவன் (வில்லிபாரதம், 7.14 : 216-4)
(இ) ‘அல்’ விகுதி
இந்த ஒருமை விகுதி இவர்கள் கால வழக்கில் மிகுந்து காணப் படுகிறது.
சான்று:
கவர்ந்திடுவல் (வில்லிபாரதம், 7.14 : 238-1)
காப்பல் (வில்லிபாரதம், 7.13 : 252-4)(ஈ) ‘ஓம்’ விகுதி
சங்க காலத்தில் ஓம் விகுதி மிகவும் குறைந்து காணப்பட, நாயக்கர் காலத்தில் மிகுதியான இடங்களில் காணப்படுகின்றது.
சான்று:
இழந்தோம் (வில்லிபாரதம் , 8.17 : 262-2)
• முன்னிலை விகுதிகள்
முன்னிலை விகுதிகள் ஏவல் வினை விகுதிகளாகவே செயல்படுகின்றன. சில இடங்களில் விகுதிகள் இன்றியும் செயல்படுகின்றன.
(அ) விகுதியின்மை
முன்னிலை வினை பெரும்பாலும் ஒருமையில் விகுதியைப் பெறுவதில்லை.
சான்று:
சொல், நட, ஆடு.
(ஆ)‘ஆய்’ விகுதி
ஆனால், சில இடங்களில் ஆய் விகுதி இணைந்து ஏவல் வினைகளாக உருவாகியிருப்பதைக் காணலாம்.
சான்று:
கேளாய் (வில்லிபாரதம், 3.12 : 11-4)
கூறுவாய் (வில்லிபாரதம், 10.18 : 233-4)(இ) ‘ஈர்’ விகுதி
ஈர் என்ற விகுதி முன்னிலை வினையடிகளுடன் சேர்ந்து ஏவல் வினைச் சொற்களாக வழங்கி வருவதைக் காண முடிகிறது.
சான்று:
அஞ்சலீர் (வில்லிபாரதம் , 3.1 : 28-4)
(ஈ) ‘உம்’ விகுதி
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் அடிப்படையில் உம் விகுதி இணைக்கப்பட்டு ஏவல் வினையாக வழங்கி வந்துள்ளது.
சான்று:
சொல்லும்
(உ) ‘ம்’, ‘ரும்’ விகுதிகள்
ம், ரும் போன்ற விகுதிகள் வினையடியுடன் சேர்ந்து ஏவல்வினை உருவாக்கப்பட்டுள்ளது.
சான்று:
போ-ம்>போம்வா-ரும்>வாரும்(ஊ) ‘கொள்’ விகுதி
ஏவல் வினைப் பன்மையை உணர்த்தக் கொள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது.
சான்று:
சொல்லும் - கொள் > சொல்லுங்கொள்
(எ) ‘மின்கள்’ விகுதி
இரட்டைப் பன்மை விகுதியாக மின்கள் மிகுதியாக வழக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சான்று:
வம்மின்கள் (வில்லிபாரதம், 7.12 : 87-3)
• படர்க்கை விகுதிகள்
(அ) ‘ஆள்’ பெண்பால் விகுதி
பெண்பால் ஒருமையை உணர்த்தும் ஆள் விகுதி பழங்காலத்தில் எதிர்மறையில் மிகுந்துவர, நாயக்கர் காலத்தில் உடன்பாட்டுப் பொருளிலேயே வந்துள்ளது.
சான்று:
பொறுப்பாள்
கண்டெடுப்பாள்(ஆ)‘ஆர்’ பலர்பால் விகுதி
உயர்திணைப் பன்மை காட்டும் ஆர் விகுதியும் இக்காலக் கட்டத்தில் உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது.
சான்று:
நிற்கின்றார் (வில்லிபாரதம், 9.18 : 16-2)
(இ) ‘து’ அஃறிணை ஒருமை விகுதி
அஃறிணையில் ஒருமையை உணர்த்தும் இவ்விகுதியானது அது என மாற்றம் பெற்றுள்ளது.
சான்று:
உரைத்து>உரைத்ததுபடித்து>படித்தது(ஈ) ‘ஓய்’, ‘ஓன்’, ‘ஓள்’ விகுதிகள்
இவ்விகுதிகள் சங்க காலத் தமிழில் வினைமுற்றாகவோ வினையாலணையும் பெயராகவோ காணப்படுகின்றன. ஆனால் நாயக்கர் காலத்தில் இவ்விகுதிகள் காணப்படவில்லை.
• வியங்கோள் விகுதி
தமிழ் இலக்கணத்தில் வியங்கோள் வினை விகுதிகளாக க, இய, இயர் என்பன கூறப்பட்டாலும், நாயக்கர் காலத்தில் மிகுதியாக வழக்கில் இருந்தது க விகுதி மட்டும்தான்.
சான்று:
வாழ்க ஓடுக
• புதிய விகுதிகள் தோன்றல்
வடமொழிச் செல்வாக்கால் ஒப்புமையாக்கம் காரணமாகப் பல புதிய விகுதிகள் தோன்றியுள்ளன. காரன், சாலி, அரவு போன்ற விகுதிகள் மிகுதியாக வழக்கில் வந்துவிட்டன. காரர் என்ற விகுதி சங்கம் மருவிய கால வழக்கிலேயே வந்துவிட்டது எனலாம்.
சான்று:
காரர் : மாலைக்காரர்
காரன் : வீட்டுக்காரன்
சாலி : புத்திசாலி
அரவு : தோற்றரவு• துணை வினைகள்
வீரமாமுனிவர் தம் இலக்கண நூலில் சில துணை வினைகளின் பயன்பாட்டை விளக்கியுள்ளார். முதன்மை வினைகளுடன் சேர்ந்து ஒரே வினையைப் போல இவை செயல்படுகின்றன.
(அ) ‘இரு’
சான்று:
பார்த்து இரு
(ஆ) ‘போடு’
சான்று:
எழுதிப் போடு
(இ) ‘கொள்’
சான்று:
செய்து கொள்
(ஈ) அருள்
சான்று:
எழுந்து அருள்
இவ்வாறு நாயக்கர் காலத் தமிழில் பல பழைய வடிவங்கேளாடு புதிய வடிவங்களும் வழக்கில் வந்து நிலைபெற்றுவிட்டன. இம்மாற்றங்கள் அனைத்தும் தமிழ்மொழியின் வளர்ச்சியினைப் புலப்படுத்துவதை அறியலாம்.