Primary tabs
5.5 மொழி மாற்றக் காரணிகள்
நாயக்கர் கால இறுதியில் மேலை நாட்டினரின் வருகை மிகுந்தது. அவர்களுள்ளும் ஐரோப்பியர் வருகையால் தமிழகத்தில் அச்சுக் கூடங்கள் நிறுவப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிலேயே கி.பி.1570களில் அச்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. கிறித்தவப் பாதிரிமார்கள் நூல்களை அச்சிட்டார்கள். செய்யுள் வழக்கு ஒழிந்து உரைநடை என்ற புதிய வடிவம் வழக்கிற்கு வந்துவிட்டது. இதன் காரணமாகப் பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிய நடையில் நூல்கள் பல எழுதப்பட்டன.
இத்தகைய சூழலில் மக்கள்தம் பேச்சு வழக்குக் கூறுகளும் ஆராயப்பட்டு அதற்குரிய ஆய்வு நூல்களும் மேலை நாட்டினரால் வெளியிடப்பட்டன. நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியத்தின் பெருக்கத்தால் நொண்டி நாடகங்கள், பள்ளேசல்கள், குறவஞ்சி இலக்கியங்கள் பல எழுதப்பட்டன. இவற்றில் பேச்சு வழக்குக் கூறுகள் பல காணப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடலான வாய்மொழி இலக்கியமும் ஏட்டு வடிவம் பெறத் தொடங்கியது. எனவே, பழைய கடிய செய்யுள் வழக்கு நடை மாறி மக்கள் பேச்சு வழக்கு நடை நடைமுறைக்கு வந்துவிட்டது. நாயக்கர் காலத்தில் மொழி மாற்றங்கள் ஏற்பட இத்தகைய சூழல்கள் காரணங்களாக அமைந்து விட்டன.
ஐரோப்பியர் வருகையால் தமிழகத்தில் அச்சு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதலில் சமய நூல்கள் அச்சிடப்பட்டன. பிறகு இலக்கிய நூல்களும் அச்சிடப்பட்டன. புதிய உரைநடைப் போக்கு வளரத் தொடங்கியவுடன் உரைநடை நூல்கள், திங்கள் இதழ், வார இதழ், ஆகியன அச்சேறின. ஆங்கிலேயரின் கல்விமுறை பின்பற்றப்பட்டதால் பாட நூல்கள் அச்சிடப்பட்டன. அந்தப் பாட நூல்களின் மூலமாகவும் தமிழில் உரைநடை வளர்ந்தது. கடிய நடை மாறி எளிய நடையில் நூல்கள் எழுதப்பட்டன.
5.5.2 நாட்டுப்புறப் பாடல்களும் பேச்சு வழக்கும்
சிற்றிலக்கியங்களில் பல எளிய பேச்சு வழக்கு நடையில் எழுதப் பட்டன. குறவஞ்சி நூல்கள், பள்ளு நூல்கள், நொண்டி நாடகங்கள் போன்றவை எளிய தமிழில் எழுதப்பட்டன. குற்றாலக் குறவஞ்சியில் குறத்தி பேசும் பேச்சில் பல கிளைமொழி வழக்குகள் காணப்படுகின்றன. பள்ளு நூல்கள் மக்கள் பேச்சு வழக்கில் அமைந்து, பாமரரும் விளங்கிக் கொள்வதாக எளிய நடையில் அமைந்துள்ளன. மாகபுராண அம்மானை,, இராமப்பய்யன் அம்மானை போன்ற நூல்கள் தோன்றின. இவை பேச்சு மொழியிலேயே அமைந்துள்ள நூல்கள். மேலும் நாட்டுப்புறப் பாடல்கள் பாடும் ஒவ்வொருவரும் அப்பாடலில் உள்ள பொருளைத் தம் செவிக்கு எட்டிய வகையில் பெற்றுக் கொண்டு சொற்களைத் தம் போக்கில் வெளியிடும்போது, சொற்களின் வடிவமும் திரியும். மக்கள் அப்பாடல்களில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்துவர். நாயக்கர் காலத்தில் இத்தகைய மொழி மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.
இத்தாலி நாட்டினரான வீரமாமுனிவர் பேச்சு மொழிக்காக எழுதிய இலக்கண நூல் (A Grammar of the Common Dialect of Tamil Language) நாயக்கர் காலத்தில்தான் வெளிவந்தது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால்தே, பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீகன்பால்கு முதலியோர் எழுதிய இலக்கண நூல்கள் அவர்தம் கால மக்கள் பேச்சு வழக்குக் கூறுகளை விளக்குவனவாக உள்ளன.
நாயக்கர் கால இறுதியில் உரைநடை என்ற புதிய நடையின் போக்கும், பல நாட்டுப்புற இலக்கியங்களும், பேச்சு வழக்குக் கூறுகளும் மொழிமாற்றங்களை வெளிப்படுத்தும் சிறந்த ஆதாரங்களாக விளங்குகின்றன.