தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.1-பெண் உலகம்

  • 6.1 பெண் உலகம்
     

    E

    நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்ட பெண்கள் நிறைந்த நாடு வளர்ச்சி அடையும். அத்தகைய பெண்களை உருவாக்க வேண்டும் என்று பாரதிதாசன் எண்ணியுள்ளார். பெண்கள் நாட்டு முன்னேற்றத்தில் ஈடுபடுவதற்கு அவர்கள் அடிமைகள் இல்லை என்ற நிலை முதலில் உருவாக வேண்டும். எனவே,
     

    பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
    மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே

    (பாரதிதாசன் கவிதைகள், ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’)
     

    என்று பாடியுள்ளார். முயலுக்குக் கொம்பு கிடையாது. இல்லாத கொம்பு எப்படி முயலுக்கு வளராதோ அதைப் போன்று பெண்ணுக்கு விடுதலை இல்லை என்றால் நாட்டுக்கும் விடுதலை கிடையாது என்று இந்திய விடுதலைக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.
     

    6.1.1 பெண் விடுதலை
     

    பெண்களுக்கு விடுதலை பிறரிடமிருந்து வருவதில்லை. அவர்களிடமிருந்தே தோன்ற வேண்டும் என்ற உணர்வைப் பெண்களுக்கு ஊட்ட வேண்டும் என்று பாரதிதாசன் விரும்பினார்.
     


     

    ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர்
    தேடுவதும் ஆடவர்க்குச் சேவித்திருப்பதுவும்
    அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்
    கெஞ்சுவதுமாகக் கிடக்கும் மகளிர் குலம்
    மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர் பகுதி

    (பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 1)
     

    என்னும் பாடலில் ஆடை, அணிகலன் முதலியவற்றில் மட்டும் ஆர்வம் காட்டும் பெண்களை வலிமையற்றவர்கள் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.
     

    6.1.2 வீரப் பெண்
     

    பெண்கள் அறிவும் வீரமும் துணிச்சலும் கொண்டவர்களாய் விளங்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாடு நன்மை பெறும். எனவே பாரதிதாசன் அறிவும் வீரமும் கொண்ட வீரத்தாயாக விஜயா என்னும் பெண்ணை ‘வீரத்தாய்’ என்னும் காவியத்தில் படைத்துள்ளார். அவளது அறிவுக் கூர்மையாலும் வீரத்தாலும் அவள் தனது மகனையும் நாட்டையும் காத்தாள். அவள் தன் மகனிடம் கூறும்போது,
     

    நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல்!

    (பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 3)
     

    என்று கூறி அவனுக்கு வீரத்தைக் கொடுத்தாள். அவளது ஆற்றலை அவளுடைய மகன் சுதர்மன் வாய்மொழியாகவே பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார் பாருங்கள்.

    கிழவர் வேடத்தில் தனது மகன் சுதர்மனுக்குப் போர்ப்பயிற்சி கொடுத்த விஜயாவிடம் சுதர்மன் சொல்கிறான்.
     


     

    கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்
    கதியற்றுக் கிடந்திட்ட அடியேனுக்கு
    மற்போரும் விற்போரும் வாளின்போரும்
    வளர் கலைகள் பலப்பலவும் சொல்லித்தந்தீர்

    (பாரதிதாசன் கவிதைகள், ‘வீரத்தாய்’ காட்சி : 3)
     

    என்னும் வரிகளின் வாயிலாக மேற்கூறிய போர்க்கலைகள் அனைத்தையும் விஜயா அறிந்திருந்ததைப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    ‘தமிழச்சியின் கத்தி’ என்னும் காவியத்தில் பாரதிதாசன் வேறு ஒரு வீரப் பெண்ணைப் படைத்துள்ளார். அவள் பெயர் சுப்பம்மாள். தேசிங்கு மன்னனின் படைத்தலைவர்களில் ஒருவனான சுதரிசன் என்பவன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான். அதைத் தடுத்த சுப்பம்மா கூறியதைக் கேளுங்கள்.


     

    தீ என்னை வாட்டிடினும்
    கையைத் தொடாதேயடா - இந்த
    முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
    மூச்சுப் பெரிதில்லை காண்

    (தமிழச்சியின் கத்தி - 20)
     

    என்று சீறினாள். உயிரைவிட மானம்தான் பெரிது என்று கருதும் வீரமும் மானமும் கொண்ட பெண்ணாக இங்கே சுப்பம்மாளை நாம் காண்கிறோம்.
     

    6.1.3 பெண் கல்வி
     

    பெண்கள் கல்வி கற்று உயர வேண்டும், கல்வி கற்ற பெண்களால்தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும் என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே, அவர் பெண்கல்வியின் உயர்வைக் குடும்ப விளக்கில் தெரிவித்துள்ளார்.
     

    பெண்கட்குக் கல்வி வேண்டும்
         குடித்தனம் பேணுதற்கே!
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
         மக்களைப் பேணுதற்கே!
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
         உலகினைப் பேணுதற்கே!
    பெண்கட்குக் கல்வி வேண்டும்
         கல்வியைப் பேணுதற்கே!

    (குடும்பவிளக்கு ‘விருந்தோம்பல்’)
     

    என்னும் அடிகளில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கு மட்டும் அல்லாமல் உலகத்தைப் பாதுகாப்பதற்கும் பெண்கல்வி தேவை என்று பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

    கல்வி இல்லாத பெண்களால் சமுதாயத்தில் அறியாமைதான் நிறையும் என்னும் கருத்தைப் பாரதிதாசன் பின்வரும் பாடல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
     

    கல்வியில் லாத பெண்கள்
         களர் நிலம்: அந்நிலத்தில்
    புல் விளைந்திடலாம்; நல்ல
         புதல்வர்கள் விளைதல் இல்லை!
    கல்வியை உடைய பெண்கள்
         திருந்திய கழனி; அங்கே
    நல்லறிவுடைய மக்கள்
         விளைவது நவிலவோ நான்?

    (குடும்ப விளக்கு ‘விருந்தோம்பல்’)
     

    என்னும் அடிகளில் கல்வி அறிவுடைய பெண்களால்தான் அறிவுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:06:10(இந்திய நேரம்)