தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.3-பகுத்தறிவுச் சமுதாயம்

  • 6.3 பகுத்தறிவு
     

    E

    ஆறு அறிவு கொண்டவன் மனிதன். ஆறாவது அறிவாக மனிதனுக்கு மட்டுமே உரியதாக விளங்குவது பகுத்தறிவு. இந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று மக்கள் வாழ்ந்து வருவதைப் பாரதிதாசன் கண்டார்.

    அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யும் மக்கள் அவற்றை அறவே நீக்க வேண்டும் என்று பாவேந்தர் விரும்பினார். யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பக்கூடாது. பிறர் கூறும் கருத்து அறிவுக்குப் பொருந்துமா என்று மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் எடுத்துக்கூறினார்.
     

    6.3.1 அச்சத்தைப் போக்கு
     

    அச்சமே மடமையை வளர்க்கும் என்று கருதிய பாரதிதாசன் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அச்சம் இல்லாதவர்கள் பகுத்தறிவு வழியில் நடப்பார்கள். பகுத்தறிவு வழியில் செல்பவர்கள் ‘கடவுள் இல்லை’ என்ற உண்மையை உணர்வார்கள். அதை உணராமல் கடவுளை நம்பினால் அவர்கள் கைவிடப்படுவார்கள் என்று பாடியுள்ளார்.
     


     

    காலம் காலமாய்க் கடவுளை வணங்கியும்
    வயிற்றிற்கு இலாது வறுமையில் வாழ்பவர்
    வாழ்க்கையின் வசதி சிறிதும் இலாதவர்
    தொழில் இல்லாதவர் தொழில் செய்தாலும்
    மனித உழைப்பே மலிவாய்ப் போய்விடும்
    நோய்நொடி நூறு நொறுக்கித் தின்றிடும்
    இத்தனைபேரும் கடவுளை நம்பினோர்
    ஆனால் அவர்கள் கைவிடப்பட்டார்

    (நாள்மலர்கள் : ப. 120)
     

    என்று இல்லாத கடவுளை நம்பி அலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், மதத்தின் பெயரைச் சொல்லி மதவாதிகள், மக்களின் உழைப்பையும் பணத்தையும் சுரண்டுவதையும் பாரதிதாசன் பகுத்தறிவுக் கருத்துகளாய்த் தெரிவித்துள்ளார். பாரதிதாசன் தெரிவித்துள்ள பகுத்தறிவுச் சிந்தனைகள் மனிதனை மனிதனாய் வாழச் செய்யும்; அறிவுலகம் நோக்கி அழைத்துச் செல்லும்.
     

    6.3.2 அறிவே கல்வி
     

    மக்களிடம் மூடநம்பிக்கை வளர்வதற்குக் காரணம் கல்வி அறிவு இல்லாமை என்பதை அறிந்தவர் பாரதிதாசன். மூடநம்பிக்கை நிறைந்து காணப்படும் வீடு இருண்ட வீடு போன்றதாகும். அந்த இருண்ட வீட்டில் கல்வி அறிவு என்னும் ஒளியைப் பாய்ச்சிட வேண்டும் என்று எண்ணினார் பாரதிதாசன். எனவே, குடும்பத்தில் உள்ள எல்லாரும் கற்க வேண்டும் என்று பாடியுள்ளார்.
     

    எல்லா நலமும் ஈந்திடும் கல்வி
    இல்லா வீட்டை இருண்டவீடு என்க!
    படிப்பிலார் நிறைந்த குடித்தனம், நரம்பின்
    துடிப்பிலார் நிறைந்த சுடுகாடு என்க!
    அறிவே கல்வியாம்; அறிவிலாக் குடும்பம்
    நெறிகாணாது நின்றபடி விழும்!
    சொத்தெல்லாம் விற்றும் கற்ற கல்வியாம்
    வித்தால் விளைவன மேன்மை இன்பம்!
    கல்வி இலான் கண்இலான் என்க

    (இருண்டவீடு : 33)
     

    (ஈந்திடும் = தந்திடும்)
     

    என்று குடும்ப வாழ்க்கையில் கல்வி பெறும் சிறப்பிடத்தைப் பாரதிதாசன் விளக்கியுள்ளார்.
     

    6.3.3 குழந்தைகளிடம் பகுத்தறிவு
     

    மூட நம்பிக்கைகள் மக்களைவிட்டு அகல வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். எனவே, மூடநம்பிக்கை நிறைந்து காணப்படும் சமுதாயத்தை அவர் ‘காடு’ என்றே குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைத் தாலாட்டில் மூடத்தனத்தைப் போக்கப் பிறந்த பெண் குழந்தையை எப்படி வருணிக்கிறார் என்பதைப் பாருங்கள்.
     

    மூடத் தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற
    காடு மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே

    (பாரதிதாசன் கவிதைகள், 42 ’பெண்குழந்தைத் தாலாட்டு’ - 8)
     

    (முடை நாற்றம் = முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் நாற்றம்)

    இப்பாடலில் பெண்குழந்தையைக் கற்பூரப் பெட்டியாகப் பாரதிதாசன் உருவகப்படுத்தியுள்ளார். மூடத்தனத்தால் ஏற்பட்டிருக்கும் நாற்றத்தைக் கற்பூரப் பெட்டியைப் போன்ற பெண்குழந்தை மாற்றுவாள் என்று பாடியுள்ளார்.

    பகுத்தறிவுப் பெண்களை உருவாக்கப் பாடிய பாரதிதாசன் சிறுவர்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைகளை விதைக்க,
     

    பச்சை விளக்காகும் - உன்
    பகுத்தறிவு தம்பி!
    பச்சை விளக்காலே - நல்ல
    பாதை பிடி தம்பி

    (பாரதிதாசன் கவிதைகள் III, ‘ஏற்றப்பாட்டு’ : 77,78)
     

    என்று பாடியுள்ளார்.

    அறியாமையே அனைத்து இழிவுகளுக்கும் தொடக்கம். சமுதாயத்தில் அறியாமை அகல வேண்டும். அறியாமை அகன்றால் பகுத்தறிவு பரவும். பகுத்தறிவு என்பது வாழ்வுக்கு வழிகாட்டும் பச்சை விளக்கு. அந்தப் பச்சை விளக்கின் துணையுடன்தான் சமுதாயப் புரட்சியை உருவாக்க முடியும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தற்காலத்தில் சாலையில் ஊர்திகளில் செல்கிறவர்கள் சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும்; பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே செல்ல முடியும். இதை அறிந்திருந்த பாரதிதாசன் பச்சை விளக்கைப் பகுத்தறிவுக்கு உவமையாகப் படைத்துள்ளார். பச்சை விளக்காகிய பகுத்தறிவின் துணையுடன் நல்ல பாதையில் நடக்க வேண்டும் என்று பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:06:16(இந்திய நேரம்)