தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.5 தொகுப்புரை

    இந்தப் பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைகள் விளக்கப் பெற்றன.

    பகாப்பதம் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும் என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது. பகுபதம் பெயர்ப்பகுபதம் என்றும் வினைப்பகுபதம் என்றும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றது.

    அடுத்ததாக வரும் வினைப்பகுபதங்களும் வினைமுற்று, வினையாலணையும் பெயர் என்று இருவகையாகப் பிரித்துக் காட்டப்பட்டன. இவற்றுள் வினைமுற்றுப் பகுபதம் தெரிநிலை என்றும் குறிப்புவினை என்றும் வகைப் படுத்தப்பட்டன. பெயரெச்சங்களும், வினையெச்சங்களும் பகுபதங்களாக அமைவதற்கான இலக்கணக் கூறுகள் விளக்கப்பட்டன.

    வினையாலணையும் பெயர்ப் பகுபதங்கள் தெரிநிலை என்றும் குறிப்பு என்றும் இருவகைப்படும் என்பது எடுத்துக் காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

    அடுத்ததாகப் பகுபதத்தின் உறுப்புகள் ஆறும் விளக்கப்பட்டன. அவை, ஒருபகுபதத்தில் வந்தமையும் பாங்கும் எடுத்துக் காட்டுகளுடன் காட்டப்பட்டது.

    பகுபத உறுப்புகள் ஆறனுள் ‘பகுதி’ என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது. ஒரு பகுபதத்தின் முதலில் நிற்கும் ‘பகாப்பதமே’ பகுதி என்பதும், பெயர்ப்பகுபதத்திலும் வினைப்பகுபதத்திலும் வரும் பகுதிகள், எவ்வாறு வரும் என்பதும் விளக்கப்பட்டன.

    பண்புப் பெயர்ப் பகுபதத்தின் பகுதிகளாக வரும் செம்மை, சிறுமை என்பனவற்றின் தன்மையும் இவை பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்களும் விளக்கிக் கூறப்பட்டன.

    தெரிநிலை வினைமுற்றுப் பகுபதத்தின் பகுதிகள். இவை ‘செய்’ என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும் என்பதும் காட்டப்பட்டது. நட, வா, மடி, சீ எனவரும் 23 ஏவல்மற்றும் தெரிநிலைப் பகாப்பதங்களின் பட்டியல் எடுத்துக் காட்டப்பட்டது. இவை பிறவினையாய் வரும் முறைகள் எடுத்துக்காட்டப்பட்டன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    பகுபத உறுப்புகளுள் ‘பகுதியின்’ இலக்கணத்தை வரையறுக்க.
    2.
    பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு வரும்?
    3.
    வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமையும்?
    4.
    பண்புப்பெயர்ப் பகுதிக்கு, நன்னூல் கூறும் சிறப்பு விதி யாது?
    5.
    பண்புப்பெயர்ப்பகுதி பிற சொற்களோடு புணரும் போது அடையும் மாற்றங்கள் யாவை?
    6.
    வினைப் பகுபதங்களின் பகுதிகளுக்கான சிறப்பு விதி யாது?
    7.
    வினைப் பகுபதங்களின் பகுதி பிற சொற்களோடு சேரும்போது அடையும் மாற்றங்களை எழுதுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:53:03(இந்திய நேரம்)