தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-2.4 மடங்களின் தமிழ்த் தொண்டு

  • 2.4 மடங்களின் தமிழ்த் தொண்டு

    Audio Button

    துறவு நிறுவனங்களாகிய மடங்கள் நிறுவப்பட்டு வளர்ந்தன. இந்த மடங்கள் தொடக்கக் காலத்தில், சமய நெறி பேணுதல், சமயம் பரப்புதல், அறம் செய்தல், கோயில்களைப் பாதுகாத்தல் போன்ற செயல்களில் நாட்டம் செலுத்தின. இவற்றின் தலைவர்களான துறவியரும் கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையராகவும் இருந்தனர். நாளடைவில் இந்த மடங்களின் நோக்கமும் செயற்பாடும் தளர்ச்சியுற்றன. எனினும் சமயத் திருமடங்கள் தமிழுக்கும், சமயங்களுக்கும் ஆற்றிய பணி, வரலாற்றில் இடம்பெறத் தக்கதாகவே அமைந்தது. குமரகுருபரர், சிவப்பிரகாசர், சிவஞான முனிவர், கச்சியப்பர், மாசிலாமணி தேசிகர், சுப்பிரமணிய தேசிகர் போன்ற புலமைச் சான்றோரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற பெருங்கல்வியாளர்களும் திருமடங்களோடு தொடர்புடையவர்களாயிருந்து, தமிழுக்கு ஆற்றிய பணிகள் பலப்பல. திருமடங்களின் சார்பினால் சிற்றிலக்கியங்கள் பலப்பல தோன்றின. இச்சிற்றிலக்கியங்கள், சமய அடிப்படையிலான பண்பாட்டையே பெரிதும் சித்தரிக்கின்றன.

    2.4.1 குமரகுருபரரின் மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்

    குமரகுருபரர் என்னும் புலவர் தென்பாண்டி நாட்டில் தோன்றியவர். ஊமையாகப் பிறந்தவர். இறையருளால் பேசும் வல்லமை பெற்றவர். பெரும் காப்பியங்கள் இயற்றும் ஆற்றல் பெற்றவர் இவர்; இருந்தும் காலச் சூழலால் சிற்றிலக்கியங்களையே பாடினார். மதுரை மீனாட்சியைச் சிறு குழந்தையாக உருவகித்துக் குமரகுருபரர் மிக அழகாகப் பாடுகிறார். மீனாட்சி அம்மையைப் பழந்தமிழ்ப் பாடலின் பயன்; தமிழ்த் தேனின் சுவை; அகந்தை கொண்டவர் மனத்தில் அவ்வகந்தையை அழித்து ஏற்றப்படும் விளக்கு; இமயமலையில் விளையாடும் பெண்யானை; உலகம் கடந்து நிற்கும் இறைவனின் உள்ளத்தில் அழகாய் எழுதப்பெற்ற உயிரோவியம், என்றெல்லாம் மீனாட்சியம்மையைப் பிள்ளைத்தமிழில் மனமுருகிப் பாடுகிறார் குமரகுருபரர். அக்காலத்தில் இது போன்ற இலக்கியங்களில் பக்தி வளர்த்த பண்பாடு நன்கு புலனாகின்றது.

    2.4.2 திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ்

    கோயில் விழாக்களில் ஊர்வலங்கள் நிகழும். அந்த ஊர்வலங்களில் தமிழ்ப் பாடல்களை, முன்னர்ப் பாடிக்கொண்டு செல்வர். பின்பு தெய்வம் ஊர்வலமாகச் செல்லும். அதன்பின்னர் வைதிகர் வேதம் பாடி நடப்பர். குமரகுருபரர் ‘இறைவன் தமிழின் பின்செல்ல, மறைகள் அவனைத் தேடி நடந்தன’ என்று கூறுகிறார். உண்மைநிலையை மாற்றி மனத்திற்கு உகந்ததாக ஆக்கிக் கொள்கிறார் குருபரர். திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ் இரண்டாந்தரமான இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதை, அக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:02:08(இந்திய நேரம்)