தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

  • 1.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள்

    புறவடிவம், அகவடிவம் எனக் கவிதையின் வடிவம் இரு வகைகளில் அமையும் என முன்னர்க் கண்டோம். இப்பாடல்களில் கவிஞர்கள் தங்கள் உணர்ச்சிகளை மொழி வடிவில் தரும் செய்திறனைக் காணலாம்.

    1.3.1 புறவடிவம்

    வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனும் நான்கு வகைப் பாக்களுள் நெகிழ்வான வடிவுடையது ஆசிரியப்பாவே ஆகும். ஏனைய பா வகைகளை விடவும், விருத்தம் போன்ற பா இனங்களைவிடவும் இலக்கணக் கட்டுப்பாடுகள் குறைந்த, கையாள்வதற்கு எளிய வடிவம் ஆசிரியப்பா. பெரும்பாலும் ஆசிரியச் சீர்கள், ஆசிரியத்தளைகள் அமைந்து, பிற சீர், தளைகளும் விரவி அளவடிகள் எனப்படும் நாற்சீரடிகளால் அமைந்து, எதுகை மோனை போன்ற தொடையமைப்பில் கவிஞனுக்கு அதிக உரிமை கிடைக்கும்படியான எளிமையுடன் உருவாகியிருப்பது ஆசிரியப்பா; இத்தகைய விடுதலைத்தன்மை காரணமாகவே இன்றைய புதுக்கவிதை வடிவத்திற்கு முன்னோடி வடிவம் என அது குறிப்பிடப்படுகிறது. எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக ஈற்றயல் அடி மட்டும் முச்சீரடியாக அமையும் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா எனப்படும். பாடப்பகுதிப் பாடல்கள் அனைத்தும் நேரிசை ஆசிரியப்பாக்களே ஆகும். ஆசிரியப்பா வடிவம் எத்தகையது என்பதை இப்பாடல்கள் கொண்டு நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியப்பாவின் வடிவ எளிமைக்கும் இயல்பாக அமைந்த ஓசை இனிமைக்கும் எடுத்துக்காட்டாகக் கபிலர் பாடலைக் (நற்றிணை - 1) குறிப்பிடலாம்.

    நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
    என்றும் என்தோள் பிரிபறி யலரே
    தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
    சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
    புரைய மன்ற புரையோர் கேண்மை
    நீரின் றமையா உலகம் போலத்
    தம்மின் றமையா நம்நயந் தருளி
    நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
    சிறுமை உறுபவோ செய்பறி யலரே

    இப்பாடலில் மேற்குறிப்பிட்ட நேரிசை ஆசிரியப்பா அமைப்பு இருப்பதை எளிதாகவே நீங்கள் கண்டு கொள்ள முடியும். எதுகை, மோனைக்காகவோ சந்தத்துக்காகவோ பொருளோட்டத்தை விட்டுக் கவிதை பிசகியிருப்பதாக எங்கும் காணமுடியாது. “நின்ற - நீடு”; “சிறுமை - செய்பு” என்பன போன்ற மோனை அமைப்பும், “ன்றும் - ன்தோள்”; “தாமரை -தண்டா” என்பன போன்ற வேறொருவகை மோனை அமைப்பும், “நின்ற - என்றும்”; “நறுநுதல் - சிறுமை” என்பன போன்ற எதுகை அமைப்பும் “சாந்தின் - தீந்தேன்” என்பது போன்ற வேறுவகை எதுகை அமைப்பும் இருப்பதைப் பாருங்கள். இவை எதனை உணர்த்துகின்றன? ஓசை ஒழுங்கை எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ள ஆசிரியப்பா இடம் தருகிறது என்பதை உணர்த்துகின்றன. மேலும் “நீரின் றமையா உலகம் போல”, “நறுநுதல் பசத்தல் அஞ்சி” என்ற அடிகளில் எதுகை மோனை எதுவும் இல்லை. ஆசிரியப்பா வடிவம் கவிஞனுக்கு இந்தச் சுதந்திரத்தை அளிக்கிறது.

    சில சொற்கள், தொடர்கள் அடுக்கி வருவதன் மூலமாகப் பாடலின் உணர்ச்சியோ பொருளோ சிறப்பான வடிவு பெறுவதுண்டு. தலைவன் தலைவியை உடன் போக்கில் அழைத்துப் போகும் பாடலில்,

    நிழல்காண் தோறும்நெடிய வைகி
    மணல்காண் தோறும் வண்டல் தைஇ

    எனும் அடிகளில் ‘தோறும்’ எனும் சொல் மீண்டும் வருவது தலைவிக்குத் தொடர்ந்து மகிழ்ச்சி தரும் வாய்ப்புகளே வருகின்றன என்பதைப் புலப்படுத்துகிறது. அல்லவா !

    1.3.2 அகவடிவம்

    கவிதையின் அகவடிவம் கூர்ந்த பார்வைக்கே புலப்படுவது. உணர்ச்சிகளையும் கருத்துகளையும் நிறுத்தும் முறைவைப்பு இந்த அகவடிவத்தை உருவாக்குகிறது. எப்படி நிறுத்தினால் படிப்பவர் நெஞ்சில் கவிதையின் உணர்ச்சி கூர்மையாகப் பாயும் என்ற ஆழ்ந்த சிந்தனை கவிஞனுக்குள் இருக்கும். இந்தச் சிந்தனையின் தரத்தைக் கொண்டே கவிஞனின் செய்திறனை (skill) நாம் அளவிட்டுவிட முடியும்.

    அண்ணாந்தேந்திய எனத் தொடங்கும் பாடலில் (நற்றிணை - 10) உள்ள நிகழ்வு, தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து உடன்போக்கிற்கு அனுப்பிவைப்பது. இயல்பாகச் சொல்வதென்றால் எப்படிச் சொல்வாள்? ‘தலைவி உன் சொல்லை நம்பி, உன்னை நம்பி உன்னுடன் வருகிறாள்; அவள் முதுமை அடைந்த பிறகும் அவளைக் கைவிடாமல் பார்த்துக்கொள்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கவிஞர் இந்த வரிசை முறையை மாற்றி விடுகிறார். ‘தலைவியின் அழகுகள் குன்றி அவள் முதுமை அடைந்த பிறகும் அவளைப் பிரியாது பாதுகாத்துக்கொள்’ என்பதை முதலில் சொல்லி, இந்தக் காதல் பிணைப்புக்குக் காரணமான தலைவியின் நம்பிக்கையையும் அன்பையும் அடுத்துச் சொல்கிறாள். எடுத்துரை முறையில், உரைநடை முறைக்கு மாறான கவிதை முறை இங்கு அமைகிறது. தர்க்க முறையிலான காரணம் - காரியம் என்பது, உணர்வு முறையிலான காரியம் - காரணம் என மாறி வடிவு கொண்டிருப்பதால் கவிதையின் உணர்ச்சி படிப்பவர் மனத்தில் நேரடியாகப் பாய்கிறது.

    பாடலின் தொடக்கமும் முடிவும் கவிதையின் சரியான வடிவமைப்புக்கு உதவும். “புணரிற் புணராது பொருளே; பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே” என ஒரு விவாதம் போல் தொடங்கும் கவிதை (நற்றிணை - 16) இடையே வரும் விவாத அலசல்களுக்குப் பிறகு “எனைய ஆகுக வாழிய பொருளே” என ஒரு தெளிந்த தீர்மானத்துடன் முடிகிறது. கணிதத் தொடக்கமும், செய்முறையும், விடையும்போல அமைந்த ஒரு வடிவமைப்பு இது.

    எழாஅயாகலின் எழில்நலம் தொலைய அழாஅ தீமோ எனும் முதலடியில் (நற்றிணை - 13) தலைவி ஏன் அழுகிறாள், அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாதவள் போலப் பாவனை காட்டுகிறாள் தோழி. பாடல் இறுதியில், “மயிலறிபு அறியா மன்னோ பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே” எனத் தலைவியின் களவுக்காதலைத் தான் அறிந்து கொண்டிருப்பதாகவும், அதனைத் தலைவி அறியாள் எனவும் குறிப்புக் காட்டுகிறாள். தொடக்கமும் முடிவும் கவிதையின் தேவைக்கு (ஒருவரை யொருவர் மனத்துக்குள் துழாவிப் பார்த்தல்) ஏற்ற வடிவத்தைத் தருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2017 10:54:43(இந்திய நேரம்)