தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--களவின் இலக்கணம்

  • 4.1
    களவின் இலக்கணம்

    தலைவன் - தலைவி ஆகிய தலைமக்கள் வாழும் அன்பு வாழ்க்கை களவு, கற்பு என இருவகைப்படும். இவற்றுள் களவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தர வந்த அகப்பொருள் விளக்க நூலாசிரியர் கீழ் வருமாறு நூற்பா வகுத்தார்.

    உளமலி காதல் களவு எனப்படுவது
    ஒரு நான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
    யாழோர் கூட்டத்தின் இயல்பினது என்ப

    (களவியல் நூற்பா -1)

    மேற்கண்ட நூற்பாவில் நால்வேத நெறியினர் வகுத்த எட்டு வகைத் திருமண முறைகள் குறிப்பிடப்படுகின்றன.

    அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன இவற்றுக்கான விளக்கம் வருமாறு:

    பிரமம்
    :
    தகுதியுடைய பிரம்மச்சாரிக்குப் பெண்ணைக் கொடுப்பது.
    பிரசாபத்தியம்
    :
    தலைவன் தலைவி இருவரது பெற்றோரும் உடன்பட்டுத் திருமணம் செய்து வைப்பது.
    ஆரிடம்
    :
    ஒன்றோ இரண்டோ பசுவும், காளையும் தானமாகப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது.
    தெய்வம்
    :
    வேள்விகள் பலவும் இயற்றும் ஓர் வேள்வி ஆசிரியனுக்குப் பெண்ணைக் கொடுப்பது.
    கந்தர்வம்
    :
    கொடுப்போரும், கேட்போரும் இன்றித் தலைமகனும், தலைமகளும் தனி இடத்தில் எதிர்ப்பட்டுத் தாமே கூடி இன்புறுவது. இதுவே யாழோர் கூட்டம் எனப்படும்.
    ஆசுரம்
    :
    பெண்ணின் தந்தைக்குப் பணம் கொடுத்து, பெண்ணுக்கும் அணிகலன்களை அணிவித்து, அப்பெண்ணை ஏற்று மணந்து கொள்வது.
    இராக்கதம்
    :
    தலைவியை அவளது விருப்பமோ அவளது உறவினர் ஒப்புதலோ இன்றி அடைவது.
    பைசாசம்
    :
    உறங்கிய பெண், (கள் உண்டு) களித்திருக்கும் பெண், பித்துப்பிடித்த பெண் முதலானவர்களுடன் கூடிக்களிப்பது.

    மேற்கண்ட எண்வகைப்பட்ட வேத வழிப்பட்ட மணமுறைகளில் ஒன்றாக இடம் பெறும் கந்தர்வம் என்பது தமிழ் இலக்கண நூல்கள் குறிப்பிடும் களவுக்கு இணையானது.

    இம்முறையில்தான் தலைமக்களின் அன்புக்கு முதன்மை உள்ளது. முன் ஏற்பாடும் திட்டமிடுதலும் இன்றி இயற்கையாய் எதிர்ப்பட்ட இருவரும் விரும்பி, உளம் ஒத்து, அன்பு கலந்து கூடுகின்ற இம்முறையே தமிழ் மரபு வழிப்பட்ட களவுக்கு இணையானது.

    இவ்விளக்கங்களைக் கொண்டு ‘தலைமக்கள் தாமே எதிர்ப்பட்டுப் பிறர் அறியாதவாறு அன்பு காட்டி வாழும் காதல் வாழ்வே - களவு’ என வரையறை செய்துகொள்வது பொருத்தமுடையது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:50:34(இந்திய நேரம்)