தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிரிவுழி மகிழ்ச்சியும் பிரிவுழிக் கலங்கலும்

  • 4.6
    பிரிவுழி மகிழ்ச்சியும் பிரிவுழிக் கலங்கலும்

    பிரிவுழி மகிழ்ச்சி, களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.

    தலைவனும் தலைவியும் ஓரிடத்தில் களவு வழியில் கூடி மகிழ்ந்தனர். அப்புணர்ச்சிக்குப்பின் அங்கிருந்து தலைவி பிரிந்து செல்ல, அப்போது தலைவியோடு கூடிய கூட்டத்தை எண்ணி, தலைவன் மனமகிழ்வுடன் பேசுவது பிரிவுழி
    மகிழ்ச்சி எனப்படும்.

    பிரிவுழி மகிழ்ச்சி இருநிலைகளை உடையது. அவையாவன:

    1. செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
    2. செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்.
    • செல்லும் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்

    கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் மனத்தொடு பேசி மகிழ்வது.

    • செல்லும் கிழத்தி செலவுகண்டு பாகனொடு சொல்லல்

    கூடிப்பிரிந்து செல்லும் தலைவியின் தன்மை கண்டு தலைவன் தன் பாகனிடம் பேசி மகிழ்வது.

    இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று. தலைவி பிரிந்து சென்றபோது தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல் எனப்படும். இது,

    1. மருளுற்று உரைத்தல் - மயக்கம் கொண்டு பேசுதல்
    2. தெருளுற்று உரைத்தல் - தெளிவு பெற்றுப் பேசுதல்

    என இருநிலைகளை உடையது.

    மேற்கண்ட இரு நிலைகளின் அடிப்படையில் நிகழும் பிரிவுழிக் கலங்கல் என்னும் செயல்பாட்டின் விரிவாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார் நாற்கவிராசநம்பி.

    1. தோழியர் கூட்டம், வழிவிட்டு வழிபடத்தக்கவளாக விளங்கும் தலைவியை நாம் கூடியது வியப்புக்குரியதே என மயங்கிக் கூறுதல்.
    2. தோழியைத் தூதாகப் பெற்று இனியும் கூடி மகிழ்வேன் என்று கூறுதல்.
    3. தலைவியின் அழகுப் பண்புகளைத் தலைவன் பாராட்டிக் கூறுதல்.
    4. அத்தகு அழகியைப் பெற்றெடுத்த பெற்றோரை வாழ்த்துதல்.
    5. தலைவன் இரவில் உறக்கமின்றி வருந்தி உரைத்தல்.

    இவையாவும் பிரிவுழிக் கலங்கலின் விரிவுகளாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 15:56:39(இந்திய நேரம்)