தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இடந்தலைப்பாடு

  • 4.7
    இடந்தலைப்பாடு

    இது களவிற்குரிய கிளவித்தொகைகளுள் ஒன்று.

    இடம் - முதன்முதலாகக் கூடிய இடம்.

    தலைப்பாடு - மீண்டும் அவ்விடத்தே வந்து கூடுதல்.

    முதன்முதலாக இயற்கைப் புணர்ச்சியில் கூடி மகிழ்ந்த தலைவன் (மீண்டும்) அடுத்த நாளும் அவ்விடத்தே வந்து தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.

    இடந்தலைப்பாடு மூன்று வகைப்படும். அவையாவன:

    1. தெய்வம் தெளிதல்
    2. கூடல்
    3. விடுத்தல்
    • தெய்வம் தெளிதல்

    முன்னே முதல்முறையாகத் தலைவியை நம்மோடு கூட்டி வைத்த தெய்வம் மறுபடியும் அதே இடத்தில் தலைவியை நம்மோடு சேர்த்து வைக்கும் என்று தலைவன் தெளிவுடன் உரைப்பது.

    • கூடல்

    அவ்வாறே தலைவன், தலைவியைக் கூடி மகிழ்தல்.

    • விடுத்தல்

    கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அவளது தோழியர் கூட்டத்தின்பால் செல்லுமாறு தலைவன் அனுப்பி வைத்தல்.

    இம்மூவகைப்பட்ட இடந்தலைப்பாட்டு நிகழ்ச்சியையே ஐந்து நிலைகளாக விரிவுபடுத்தியும் வழங்குவர். அவையாவன:

    1. தந்த தெய்வம் மீண்டும் தரும் எனச் செல்லுதல்
    2. தன் முன்னே தலைவியைக் காணுதல்
    3. கூடி மகிழ்தல்
    4. புகழ்தல்
    5. தோழியர் கூட்டத்தில் தலைவியைச் சேர்த்தல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 16:02:24(இந்திய நேரம்)