Primary tabs
-
2.5 பாசறை இருப்பு
போர் மேற்கொண்டு போர்க்களத்திற்குச் செல்லும் அரசன் கூதிர்காலத்திலும், வாடைக் காலத்திலும் தலைவிமேல் காதல் இன்றிப் (போகத்தில் பற்று இல்லாமல்) போரின் மேல் காதல் கொண்டு பாசறையில் இருத்தல் ஒருவகை வெற்றியாகும். பிரிதல் வன்மை பற்றி இது வெற்றியாயிற்று என்பர். தொல்காப்பியர் கூதிர் என்றதைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் கூதிர், வாடை என்று இரண்டாகப் பிரித்துக் கூதிர்ப் பாசறை, வாடைப் பாசறை என்று இரு துறைகளாக அமைத்துள்ளார். பாசறைக் கண் தலைவன் போர்விருப்பில் தலைவியை எண்ணாது இருத்தல் குறித்து முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை ஆகிய இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
கூதிர்காலத்தில் பாசறையில் இருத்தல் என்பது இதன் பொருள். கொளு,
கூற்றனையான் வியன்கட்டூர்க் கூதிர்வான் துளிவழங்க
ஆற்றாமை நனிபெருகவும் அயில்வேலோன் அளிதுறந்தன்று- (கொளு-15)
என்று கூறுகிறது. கூற்றை ஒத்த அரசனின் அகன்ற பாசறையில், கூதிர்காலத்து மேகம் மழைத்துளியைப் பெய்யப் பிரிவாற்றாமை மேன்மேல் பெருகினாலும் கூரிய வேலையுடையவன் தலைவியிடம் கருணை கொள்ளாது கடமை செய்தது என்பது பொருள். வெண்பா இக்கருத்தை நன்கு விளக்குகிறது.
கவலை மறுகில் கழுங்கண் மறவர்
உவலைசெய் கூரை ஒடுங்கத் - துவலைசெய்
கூதிர் நலியவும் உள்ளான் கொடித்தேரான்
மூதின் மடவாள் முயக்குவீரர்கள் சிறுதுளியைப் பெய்யும் கூதிர்காலம் வருத்தப் பாசறையில் தழையால் செய்த குடியிருப்பில் ஒடுங்குவர். கொடி ஆடுகின்ற தேரினையுடைய அரசர்கள் அத்தகைய காலத்தில் தனது இல்லத்தில் இருக்கும் தன் மனைவியைத் தழுவுதலைக் கருதாமல் இருக்கிறான். போரை கருதிப் பாசறையில் இருக்கிறான் என்பது குறிப்பு.
வாடைக் காலத்தில், பாசறையில் இருத்தல் என்பது இதன் பொருள். கொளு,
வெந்திறலான் வியன்பாசறை வேல்வயவர் விதிர்ப்புஎய்த
வந்துஉலாய்த் துயர்செய்யும் வாடையது மலிபுஉரைத்தன்று- (கொளு-16)
வகைமை கொண்ட அரசனது பாசறையில், வேல்வீரர் நடுங்கும்படி துயர் செய்கின்ற வாடைக்காற்றின் மிகுதியைக் கூறுதல் என்பது பொருள். அதாவது வாடை வருத்தினும் பாசறையை விட்டு அரசன் நீங்கான் என்பதைக் கூறுவது இத்துறை. இதனை வெண்பா,
வாடை நலிய வடுக்கண்ணான் தோள் நசை
ஓடை மழகளிற்றான் உள்ளான்கொல் - கோடல்
முகையோ(டு) அலம்வர முற்றெரிபோல் பொங்கிப்
பகையோடு பாசறை யுளான்என்று குறிப்பிடுகிறது.
யானையை உடைய இவ்வரசன் வாடைக் காற்று தன்னை வாட்டவும் காந்தள் செடி வாடும்படி வளைத்துக் கொண்ட காட்டுத்தீப் போலச் சினந்து பகைவர் ஓடும் வண்ணம் பாசறையில் இருக்கிறான். மாவடுப் போன்ற கண்களைக் கொண்ட தன் மனைவியின் தோளைத் தழுவ இவன் நினைக்க மாட்டான் போலும். இவ்வாறு அரசன் வாடையில் பாசறை இருக்கும் தன்மையை விளக்குகிறது.