Primary tabs
-
5.4 பெண்பால் கூற்று - II
தலைவனைக் கண்டு நயந்து உட்கொண்ட தலைவி, கொள்ளும் துயர நிலைகளை மெலிதல், மெலிவொடு வைகல், காண்டல் வலித்தல், பகல் முனிவு உரைத்தல், இரவுநீடு பருவரல், கனவில் அரற்றல், நெஞ்சொடு மெலிதல் முதலான துறைகள் புலப்படுத்துகின்றன. பெண்ணின் கைக்கிளைத் துயர் இத்துறைகளில் விவரிக்கப்படுகிறது.
வாடுதல் என்பது இதன்பொருள். இதனைக் கொளு,
ஒன்றார் கூறும் உறுபழி நாணி
மென்தோள் அரிவை மெலிவொடு வைகின்றுஎன விளக்கம் அளிக்கிறது. ‘பிறர் கூறும் அலருக்கு நாணி மென்தோள்களையுடைய பெண் வாடியிருத்தல்’ என்பது பொருள். காதலனைப் பெற முடியவில்லை என்ற ஏக்கத்தால் வாடுதலே இதன்பொருள். வெண்பா இதனை நன்கு புலப்படுத்துகிறது: ‘குரும்பை போன்ற மார்புகளின் மீது என் கண்ணீர் முத்துக்கள் சிந்துகின்றன; காமன் எனக்குக் காதல் நோய் தந்து வாட்ட, எனக்கு இரங்கி என் காதலை ஏற்றுக் கொள்ளாத இவனுக்காக என் அழகெல்லாம் அழிகிறது’.
வாட்டத்தினால் ஏற்படும் தளர்ச்சியின் மிகுதி என்பது பொருள். இதனைக் கொளு,
மணிவளை நெகிழ மாண்நலம் தொலைய
அணிஇழை மெலிவின் ஆற்றல்கூ றின்றுஎன விளக்குகிறது. அணிகள் அணிந்த பெண்ணின் ‘மாணிக்க வளையல்கள் கழல, நல்ல அழகு கெட வாடுகின்ற பெண்ணின் தளர்ச்சியின் மிகுதியைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, இதனைப் ‘பிறை நிலவை ஒத்த நெற்றியானது பீர்க்கம்பூப் போல் பசலை நிறம் கொள்ள, கைகளிலுள்ள வளையல் கழன்று ஓட, கட்டுப்பாடு என்னும் தெப்பத்தால் காமம் என்கிற பெரிய கடலைக் கடந்தேன்; ஆயினும், ஆசை என்னும் நெருப்பு என் நெஞ்சை எரிக்கிறதே !’ எனத் தலைவி கூற்றில் விளக்குகிறது.
பிறைபுரை வாள்நுதல் பீர்அரும்ப மென்தோள்
இறைபுனை எல்வளை ஏக - நிறைபுணையா
யாம நெடுங்கடல் நீந்துவேன்
காம ஒள்எரி கனன்(று) அகம் சுடுமே(திரும்பவும்) காண முடிவுசெய்தல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,
மைவரை நாடனை மடந்தை பின்னரும்
கைவளை சோரக் காண்டல் வலித்தன்றுஎன விளக்குகிறது. காமத்தால் கைவளையல்கள் கழல்வதால் மலைநாட்டுத் தலைவனைத் தலைவி மீண்டும் காணவிரும்புதல் என்பது இதன் பொருள். வெண்பா இதனை நயமுற விளக்குகிறது. ‘என் கண்கள் உறக்கத்தை இழந்தன. திரும்பவும் அந்தத் தலைவனைக் காட்டுக என்று சொல்லி என்மேனி பசந்துவிட்டது. விரும்பியதைக் கண்டால் ஆசை தீரும் என்பது பொய் போலும்’.
பகல் பொழுதை வெறுப்பதைக் கூறுதல் என்பது இதன் பொருள். கொளு இதனை,
புரிவளை நெகிழப் புலம்பொடு நின்றோள்
பருவரல் உள்ளமொடு பகல்முனி(வு) உரைத்தன்றுஎன விளக்குகிறது. வளையல்கள் நெகிழத் தனிமையில் இருக்கும் தலைவி, துயர் மிகுந்து பகல் பொழுதை வெறுத்தமையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா இதற்கு மேலும் விளக்கமளிக்கிறது. ‘அவன் அருளை வேண்டினேன்; அவன் அருளவில்லை; இந்த வருத்தத்தைவிட மானம் பெரிதென்று வாளா இருக்கிறேன். என்னுடைய நிலையை அழிக்கும் ஆற்றலுடையதாக இருக்கிறது இப்பகல்பொழுது.’
இரவு நீண்டதாகயிருக்கிறதெனத் துன்புறுதல் என்பது பொருள். இதனைக் கொளு,
புலம்பொடு வைகும் பூங்குழை கங்குல்
கலங்கினேன் பெரிதெனக் கசிந்துரைத்(து) அன்றுஎன விளக்குகிறது. ‘தனிமையில் வாடும் தலைவி இரவில் பெரிதும் மனம் மயங்கினேன் என நெகிழ்ந்து சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா
பெண்மேல் நலிவு பிழைஎண்ணாய் பேதுறீஇ
விண்மேல் இயங்கு மதிவிலக்கி - மண்மேல்
நினக்கே செய்பகை எவன்கொல்
எனக்கே நெடியை வாழியர் இரவேஎனப் பெண்கூற்றாக விளக்குகிறது. இரவைப் பார்த்துப் பெண் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. ‘பெண்ணுக்குத் துன்பம் செய்வதைத் தவறு என்று எண்ணாய்; அறிவற்று வானத்து நிலவைப் போகாதபடி செய்துவிட்டாய்; நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?; எனக்கு ஏன் இவ்வளவு நீண்டதாக இருக்கிறாய், இரவே !’
கனவில் புலம்புதல் என்று பொருள். கொளு இதனை,
ஒள்தொடி மடந்தை உருகெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்றுஎன விளக்குகிறது. தலைவி அச்சம் தரும் இரவில் கனவில் கண்ட தலைவன் மறைய வாய்விட்டுப் புலம்புதல் என்பது பொருள். வெண்பா இதனைத் தலைவி கூற்றாக விளக்குகிறது. ‘மயக்கத்தோடு நின்ற என்னுடைய நினைப்பினால் வந்த காதல் நோய் நீங்கக் கனவில் எனக்குக் காட்சிதந்து கனவிலேயே மறைந்து நான் தனியளாக இருக்கும்படி செய்தாய். இது துன்பத்தைத் தருகிறது’ எனத் தலைவனைப் பார்த்துக் கூறுவதாக வெண்பா அமைந்துள்ளது.
இத்துறைக்கு இன்னொரு விளக்கம் உள்ளது. அதற்கான கொளு,
பெய்வளை அவனொடு பேணிய கங்குல்
உய்குவன் வரின்என உரைப்பினும் அதுவேஎன்பதாகும். ‘வளையல் அணிந்தவளான அப்பெண், தலைவனொடு சேரும் வகையிலான இரவுப் பொழுதுவரின் நான் பிழைப்பேன் எனக் கூறுதல்’ என்பது இதன்பொருள். இதற்கான வெண்பா கருத்தை விரித்துரைக்கிறது. அவள் தலைவனுடன் இருக்கும் இரவை எதிர்பார்ப்பதை வெண்பா உணர்த்துகிறது. ‘தலைவனின் மாலை கசங்கியது குறித்து யான் ஊடலாய் வினவ, அவன் என் சிற்றடிகளில் தலைவைத்து வணங்கி வேண்ட அமையும் இரவு ஒன்று கைகூடின் பிழைப்பேன்.’
(தன்) நெஞ்சிடம் கூறி வருந்துதல் என்பது பொருள். இந்நிலையைக் கொளு,
அஞ்சொல் வஞ்சி அல்இருள் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலைஉரைத்(து) அன்றுஎனப் புலப்படுத்துகிறது. ‘இனிமையாகப் பேசும் இப்பெண் (தலைவனைத் தேடி) இருளின்கண் செல்ல விரும்பித் தன் மனத்திடம் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, நெஞ்சுடன் தலைவி பேசுவதுபோல் அமைந்துள்ளது : ‘நெஞ்சே! மற்போர் வல்லவனான தலைவனின் அன்பிற்கு ஆசைப்பட்டு மயக்கம் தரும் இருளில் செல்லவேண்டாம் என்று என்னிடம் சொல்கிறாய்; ஆனால் என் அணிகலன்கள் சோர்ந்து விழும் நிலையை நீ எண்ணிப்பார்க்கவில்லையா?’
இதற்கு இன்னுமொரு விளக்கமும் உள்ளது. அதற்கான கொளு,
வரிவளை நெகிழ்த்தோன் முன்செல வலித்தேன்
அரிவையர் அறிகென உரைப்பினும் அதுவே‘வளையல்களை நெகிழச் செய்தவன் இடத்திற்குச் செல்லக் கருதியுள்ளேன்; பெண்கள் அனைவரும் இதனை அறிக என்று கூறுதல்’ என்பது இதன் பொருள். இதன் வெண்பா, அழகிய வளையல் கழல என் அழகினை அழியச் செய்கிறவனைக் காணக் கருதியுள்ளேன்; புதுப்புது வார்த்தைகளில் பெண்களே என்னைப் பற்றி அலர்தூற்றுங்கள்’ என விளக்குகிறது.