Primary tabs
-
3.0 பாட முன்னுரை
முந்தைய இரண்டாம் பாடத்தில் செய்யுள் உறுப்புகள் ஆறனுள் முதலாவது உறுப்பு எழுத்து என்றும், அசைக்கு உறுப்பாகும் எழுத்துகளின் வகை பதின்மூன்று என்றும் பார்த்தோம். இப்பாடத்தில் செய்யுள் உறுப்புகளுள் எழுத்தினை அடுத்து அமைவதாகிய ‘அசை’ என்னும் உறுப்பைக் குறித்துப் பார்க்க உள்ளோம்.
ஓசை தழுவி வருவது பாட்டு அல்லது செய்யுள்; ஓசையின்றிச் செய்யுள்தன்மையாய் வருவது நூற்பா; ஓசையும் இன்றிச் செய்யுள் தன்மையும் இன்றி வருவது உரைநடை. இதனை இளம்பூரணரின்,
‘பலசொல் தொடர்ந்து பொருள்காட்டுவன வற்றுள் ஓசை
தழீஇய வற்றைப் பாட்டென்றார். ஓசையின்றிச் செய்யுள்
தன்மைத்தாய் வருவது நூல் எனப்பட்டது’என வரும் உரைவிளக்கப் பகுதி உரைக்கின்றது.
‘பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்’ என்னும் திருக்குறள் தொடரும், ‘இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று’ என்னும் நல்வழித் தொடரும், ‘அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண் அறியாதார் முன்னர்’ என்னும் நான்மணிக்கடிகைத் தொடரும் பாடலுக்கு ஓசை அல்லது இசை இன்றியமையாதது என அறிவிக்கின்றன. பாட்டுக்கு அசைகளே அடிப்படை. அசைகள்தாம் பாட்டின் சந்தத்தை அல்லது ஓசையை உண்டாக்குகின்றன. எனவேதான், நம்முடைய முன்னோர்,
‘எழுதப் படுதலின் எழுத்தே; அவ்வெழுத்து
அசைத்து இசை கோடலின் அசையே’என்றனர் போலும்.
அன்பார்ந்த மாணவர்களே! இனி, நாம் அசையினது இயல்பு, நேரசையும் அமையும் வகை, அசைக்கு உறுப்புகளைக் கொண்டு அலகிடும் முறை, அலகிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகள், அசையான் இயலும் சீர்களின் வகை, அவற்றிற்கான வாய்பாடு, விதப்பு வகையால் அமிதசாகரர் சொல்ல விரும்பும் செய்திகள் ஆகியவற்றை விளங்கக் காண்போம்.