தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.4 தொகுப்புரை

    இனிய மாணாக்கர்களே! இங்கு நாம் இப்பாடத்தில் கற்ற செய்திகளைத் தொகுத்துக் காண்போம்.

    எழுத்துக்கு அடுத்தபடியாக அசையும், அசையினால் உருவாகும் சீரும் செய்யுளின் இரண்டாவது உறுப்பும் மூன்றாவது உறுப்பும் ஆகும்.

    அசை என்பதன் பொருள் இயங்கு. எழுத்து, ஒன்றும் பலவுமாக இயங்கி ஒலித்து வரையறுத்ததோர் ஓசையைக் கொள்வதால் அசை எனப்படுகின்றது.

    அசை இருவகைப்படும், நேரசை, நிரையசையென. நேரசை அமையும் வகை நான்கு. நிரையசை அமையும் வகையும் நான்கு.

    நேரசைக்கு ஓர் அலகு; நிரையசைக்கு ஈரலகு. அலகிடும் போது அரைமாத்திரை அளவினதாகிய மெய், கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எனினும் மெய் அசையெல்லையாகும் இடத்தைப் பெறுகின்றது.

    சீர், அசையின் எண்ணிக்கையைக் கொண்டு ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் எனப்பெயர் பெறுகின்றது.

    ஓரசைச்சீர் இரண்டு என்பது பெருவழக்கு. ஈரசைச்சீர் நான்கு; மூவசைச்சீர் எட்டு. நாலசைச்சீர் பதினாறு. ஆக, சீர் மொத்தம் முப்பது.

    ஓரசைச்சீர், அசைச்சீர் எனப்படும்.

    ஈரசைச்சீர், இயற்சீர் எனப்பெறும். இஃது அகவல்சீர் என்ற பெயரும் உடையது. இதன் வாய்பாடு கருதி மாச்சீர், விளச்சீர் என இதனைப் பகுப்பதும் உண்டு. அகவற்பாவுக்கே பெரிதும் உரிமையாதல் பற்றி அகவற்சீர் எனப்பெறும்.

    மூவசைச்சீர் எட்டனையும் வாய்பாடு கருதி நான்கு காய்ச்சீர்; நான்கு கனிச்சீர் என்று பகுப்பர். காய்ச்சீர் வெண்பாவுக்கே உரிமையாதல் கருதி வெண்சீர் - வெண்பா உரிச்சீர் - வெள்ளையுரிச்சீர் என்ற பெயர்களைப் பெறும்.

    கனி என்னும் இறுதிச் சொல்லில் முடியும் மூவசைச்சீர்கள் நான்கும் கனிச்சீர். இது, வஞ்சிப்பாவுக்கே உரியது. ஆதலால், வஞ்சியுரிச்சீர் என்ற பெயரைப் பெறும்.

    நாலசைச்சீர், மொத்தம் பதினாறு. இது, பொதுச்சீர் எனப்பெறும். இப்பெயர் பெற்றமைக்குக் காரணம் சீர்கள் பிறவற்றைப் போல அத்துணைச்சிறப்பு இதற்கு இல்லாமையே எனலாம். இது பூச்சீர், நிழல்சீர் என இருவகைப்படும்.

    பூச்சீர்களைக் காய்ச்சீர் போல் கருதித் தளை காண வேண்டும்; நிழல் சீர்களைக் கனிச்சீர்களைப் போலக் கருதித் தளை காணல் வேண்டும்.

    அசைச்சீர், வெண்பாவின் இறுதியில் பெரும்பான்மை வரும்; பொதுச்சீர் என்னும் நாலசைச்சீர் வஞ்சிப் பாவில்தான் பெரிதும் பயிலும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    செய்யுள் உறுப்புகளுள் மூன்றாம் வரிசையில் நிற்கும் உறுப்பு எது?
    2.
    யாப்பில் சீரின் பங்குப்பணி என்ன?
    3.
    சீர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    4.

    அசைச்சீர் எத்தனை? வாய்பாடு தருக.

    5.
    ஈரசைச்சீர் எத்தனை? வாய்பாடு தருக.
    6.
    மூவசைச்சீர்கள் எத்தனை? வாய்பாடு வழி, அவை எத்தனை வகைப்படும்?
    7.
    ஈரசைச்சீர்கள் வாய்பாடுவழி எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயர்கள் யாவை?
    8.
    நான்கசைச்சீர்கள் எத்தனை?
    9.
    ஈரசைச் சீரின் வேறு பெயர்கள் யாவை?
    10.
    காய்ச்சீரின் வேறு பெயரென்ன? அப்பெயர்க்கான காரணம் யாது?
    11.

    கனிச்சீரின் வேறு பெயர் யாது?

    12.
    கலியுரிச்சீர் என்று ஒருவகை யுண்டா?
    13.
    நாலசைச்சீரின் வேறுபெயர் என்ன? அப்பெயர்க்கான காரணம் யாது?
    14.

    நாலசைச்சீருள் இறுதி இரண்டு சீர்கள் நேர் நேர் எனவும், நேர்நிரை எனவும் நிரை நிரை எனவும், நிரைநேர் எனவும் முடிந்தால் முறையே பெறும் இறுதி வாய்பாடுகள் யாவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 10:43:38(இந்திய நேரம்)