Primary tabs
-
3.3 விதப்புக்கிளவி (சிறப்பித்து மொழிதல்) தரும் விளக்கம்
விதப்புக்கிளவியைப் பற்றி முன்னைய பாடத்திலே பார்த்திருக்கிறோம். இனிய மாணாக்கர்களே! இந்த விளக்கத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இங்கு, நாம் ‘விண்தோய் விளாம்’ ‘கண்ணிய பூவினம் ‘ஒண்ணிழல் சீர்’ என்னும் மூன்று விதப்புக் கிளவிகளால் மூல ஆசிரியர் சொல்ல விழைந்ததாக உரையாசிரியர் கருதுபவற்றைப் பார்க்கப் போகின்றோம்.
காரிகையின் ஆசிரியர் ஆகிய அமிதசாகரர் நேரசை அமையும் வகை, நிரையசை அமையும் வகை ஆகியவற்றைக் கூறினாரே தவிர, நேரசையின் அலகு எத்தனை என்றோ, நிரையசையின் அலகு எத்தனை என்றோ மொழியவில்லை. ஆகலான், அவற்றைக் கூறாமல் போய்விட்டார் என்ற குற்றம் வாராமை வேண்டி ‘விண் தோய் விளாம்’ என்னும் விதப்புக் கிளவியைத் தனது அசைக்கான காரிகை யாப்பில் பெய்கின்றார். உரைகூறும் குணசாகரர் இவ்விதப்புக் கிளவியைப் பற்றுக் கோடாகக் கொண்டு, ‘நேரசை ஓரலகு பெறும்; நிரையசை ஈரலகு பெறும்’ என்னும் வேண்டிய செய்தியை விளைத்ததாகக் கூறுகின்றார்.
நாலசைச்சீர்கள் பூச்சீர் என்றும் நிழல்சீர் என்றும் இருவகைப் படுவதை முன்னர்ப் பார்த்தோம். அவற்றுள், பூச்சீர் எட்டும் காய்ச்சீரை ஒக்கும் என்கின்றபோது ‘கண்ணிய பூவினம்’ எனச் சிறப்பிக்கின்றார். இவ்வாறு சிறப்பித்த அதனால் ஆசிரியர் சொல்ல விரும்புவன:
வெண்பாவினுள் நாலசைச் சீர்கள் வாரா;
ஆசிரியப்பாவில் அரிதாகக் குற்றியலுகரம் வருமிடத்து வருமே அல்லாமல் பிற இடத்து வாரா;
கலிப்பாவினுள்ளும் அவ்வாறே குற்றுகரம் வந்தவிடத்து அன்றிப் பிறஇடத்து வாரா;
வஞ்சிப்பாவில் வரும். வஞ்சிப்பாவில் வரும்போது குற்றியலுகரமாக வர வேண்டும் என்னும் கட்டுப்பாடில்லை;
வஞ்சியுள் இரண்டு நாலசைச்சீர் ஓரடியுள் அருகி ஒன்றையொன்று பொருந்தி நிற்கவும் பெறும்;
வஞ்சிப்பா அல்லாத பிற பாக்களுள் ஓரடியில் ஒன்றன்றி அதற்குமேல் வாரா; இரண்டு வரினும் அடுத்தடுத்து இணைந்து நில்லா;
துறை தாழிசை விருத்தம் என்ற வகைமைபட்ட பாவினத்துள்ளும் பயின்று அடிக்கடி வாரா;
என்பனவாம்.
ஆசிரியர் அமிதசாகரர், வெறுமனே ‘நிழல்சீர்’ என்று சொல்லாமல் ‘ஒண்’ (ஒண்மையுடைய) என்ற அடைமொழியைப் புணர்த்துச் சிறப்புச் செய்கின்றார். இவ்வாறு சிறப்பித்ததன் காரணம், ‘அவர் ஒன்று சொல்லக் கருதுகின்றார்’ என்பதாம். அவர் கருதுவதாக உரையாசிரியர் சொல்வது,
நிழல் என்னும் சொல் இறுதியாகிய நிரையீற்றுப்
பொதுச்சீர் எட்டும் வஞ்சியுள் (வஞ்சிப்பாவுள்)
அல்லது (பாடல்கள் பிறவற்றுள்) வாராஎன்பதாகும். அஃதாவது ‘நிழல்‘ சீர் எட்டும் வஞ்சியுள் வரும் என்பதாம். வர, தூங்கல் ஓசை சிறக்கும் என்பது கருத்து.