தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழ் இலக்கண நூல்வகைகள்

  • 1.2 தமிழ் இலக்கண நூல்வகைகள்

    தமிழில் காணப்படும் இலக்கண நூல்களை, அவை எடுத்துரைக்கும் இலக்கணங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வகைப்படுத்தலாம். மூவகை இலக்கண நூல், ஐவகை இலக்கண நூல், அறுவகை இலக்கண நூல், தனித்தனி இலக்கண நூல் என்பன அவ்வகையினவாகும்.

    1.2.1 மூவகை இலக்கண நூல்

    தமிழ் மொழியில் முதன்மையாகவும், முழுமையாகவும் கிடைக்கும் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன. அவற்றுள் பொருளதிகாரத்துள் காணப்படும் செய்யுளியல், யாப்பிலக்கணம் பற்றிய கருத்துகளை எடுத்துரைக்கின்றது. பொருளதிகார உவமவியல் அணி இலக்கணம் பற்றி விளக்குகின்றது.

    யாப்பும் அணியும் பெரிதும் வளர்ந்து, தனித்துப் பிரிவதற்கு முன் அவை பொருளதிகாரத்திற்கு உள்ளேயே அடங்கியிருந்தமையை இதன் மூலம் அறிகிறோம்.

    1.2.2 ஐவகை இலக்கண நூல்

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து வகை இலக்கணங்களையும் குறித்து ஐந்து பெரும்பகுதிகளில் எடுத்துரைப்பன ஐந்திலக்கண நூல்கள் ஆகும். வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம்,முத்துவீரியம், சுவாமிநாதம் ஆகியன இவ்வகையில் அடங்கும்.

    இவை காலவேறுபாட்டிற்கு ஏற்பவும், கருத்து வேறுபாட்டிற்கு ஏற்பவும் தமக்குள் சிற்சில வேறுபாடுகளை உடையனவாக உள்ளன.

    1.2.3 அறுவகை இலக்கண நூல்

    ஐந்திலக்கணங்களுடன் புலமை இலக்கணம் என்பதையும் சேர்த்து அறுவகை இலக்கணம் என்னும் இலக்கண நூலை வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றியுள்ளார். கி.பி. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் இது. வேறு எவரும் புலமை இலக்கணத்தைக் கணக்கில் கொண்டு இதுபோல் ஆறாவதாக இலக்கணம் இதுவரை எழுதவில்லை.

    1.2.4 தனித்தனி இலக்கண நூல்

    'அகல உழுவதிலும் ஆழ உழுவதே மேல்' என்னும் பழ மொழிக்கு ஏற்ப, ஐந்திலக்கணங்களிலும் செலுத்தும் ஆர்வத்தை ஒர் இலக்கணத்தில் செலுத்துவோம் என்னும் எண்ணத்தினராய் ஏதேனும் ஓர் இலக்கணத்தை மட்டும் சிலர் இயற்றலாயினர்.

    அவ்வகையில், நம்பியகப் பொருள் என்னும் அகப் பொருள் நூலை நாற்கவிராச நம்பி இயற்றினார். புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூலை ஐயனாரிதனார் படைத்தார். அமிதசாகரனார் யாப்பருங்கலக்காரிகையை எழுதினார். தண்டியாசிரியர் தண்டியலங்காரத்தையும், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் மாறனலங்காரத்தையும் இயற்றினர்.

    பவணந்தி முனிவர், எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் நன்னூல் என்னும் நூலை இயற்றியுள்ளார். (நன்னூல், ஐந்திலக்கணமும் கூறும் நூல் எனவும், ஏனைய மூன்று இலக்கணப் பகுதிகளும் கிடைக்க வில்லை எனவும் அறிஞரிடையே ஒரு கருத்து நிலவுகிறது.)

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:04:44(இந்திய நேரம்)