தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அணி இலக்கணமும் ஐந்திலக்கணமும்

  • 1.5 அணி இலக்கணமும் ஐந்திலக்கணமும்

    ஐந்திலக்கணம் கூறும் இலக்கண நூல்களுள் காலத்தால் முந்தியதாகத் திகழ்வது வீரசோழியம். எனினும் இதற்கு முற்பட்ட காலத்திலேயே அணிஇலக்கண வளர்ச்சி சிறப்புற் றிருந்தமையைத் திவாகர நிகண்டினால் அறிகிறோம். திவாகர நிகண்டில் பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதியில் 28 பொருள் அணிகளும் 21 சொல்லணிகளும் சுட்டப் பட்டுள்ளன எனவே, தொல் காப்பியத்துக்கும் வீர சோழியத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அணி இலக்கணம் கூறும் நூல்கள் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. எனினும் அவை கிடைக்கப் பெறாத நிலையில் கிடைத்துள்ளனவாகிய வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் ஆகியன பற்றிக் காண்போம்.

    வீரசோழியம்

    தமிழில் கிடைக்கப் பெறும் ஐந்திலக்கண நூல்களுள் முதன்மையானது இது. வீரராசேந்திர சோழனின் வேண்டுகோளுக்கு இணங்கப் புத்தமித்திரரால் பாடப்பெற்றது. இந்நூலில் அணி இலக்கணம் அலங்காரப் படலம் எனக் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியத்தையும் காவியாதரிசம் என்னும் வடமொழி நூலையும் அடியொற்றி எழுதப்பட்டது. இந்நூல், 35 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் பற்றிக் குறிப்பிடுகிறது. காலம் கி.பி. 11ஆம் நூற்றாண்டு ஆகும்.

    இலக்கண விளக்கம்

    திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது இந்நூல். இதன் கருத்துகள் பெரும்பாலும் முன்னூல்களில் கூறப்பட்டவற்றின் தொகுப்பாகவே உள்ளன. தொல்காப்பியக் கருத்துகள் கால மாற்றத்திற்கேற்ப, சுருக்கியும் பெருக்கியும் கூறப்படுதலின் இதனைக் குட்டித் தொல்காப்பியம் எனவும் கூறுவர். அணி இலக்கணப் பகுதி பெரும்பாலும் தண்டியலங்காரத்தை் ஒட்டியதாகும், இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும்.

    தொன்னூல் விளக்கம்

    இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவரால் இயற்றப்பட்டது இது. ஐந்திலக்கணக் கருத்துகளை விரித்துரைக்கும் நூல் இது. இதில் 30 பொருள்அணிகளும், 30 சொல்லணிகளும். கூறப்பெற்றுள்ளன இந்நூல், தற்குறிப்பேற்ற அணியை ‘ஊகாஞ்சித அணி’ எனச் சுட்டு்கின்றது. விடையில் வினா அணி, வினாவில் விடை அணி போன்ற புதிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு ஆகும்.

    முத்து வீரியம்

    உறையூர் முத்துவீர உபாத்தியாயரால் இயற்றப்பட்டது இந்நூல். இதில் பொருளணிகள் 58, சொல்லணிகள் 14 என அணிகள் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

    சுவாமிநாதம்

    சாமிகவிராசர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது இது. இதில் அணி இலக்கணப் பகுதி, அணி அதிகாரம் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்பகுதி, பொருள் அணி மரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் 31 பொருள் அணிகளும், 23 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. அமைதி மரபுப் பகுதி, சில வழுவமைதிகளை எடுத்துரைக்கின்றது. இதன் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

    அறுவகை இலக்கணம்

    திருவாமாத்தூர் ‘வண்ணச்சரபம்’ தண்டபாணி சுவாமிகள் இயற்றிய நூல் இது. இந்நூலின் ஐந்தாவது இயலாக அணி இலக்கணம் விளங்குகிறது. இப்பகுதி உவமை, உடைமை, கற்பனை, நிகழ்ச்சி, ஆக்கம் ஆகிய ஐவகைப் பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.

    இவ்வாறு அணி இலக்கணத்தைத் தம் ஒரு கூறாகக் கொண்டு திகழும் இலக்கண நூல்கள், சிறப்புற அணிகளைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 16:29:15(இந்திய நேரம்)