தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செறிவும் தெளிவும்

  • 6.2 செறிவும் தெளிவும்

    கௌட நெறிக்கு என்று தனித்த நூற்பாக்கள் தண்டியலங்காரத்துள் இடம் பெறவில்லை. உரையாசிரியர்கள் காட்டும் சான்றுகளைக் கொண்டு கௌடநெறியை அறிந்து கொள்கிறோம். வைதருப்ப நெறியைச் சுட்டும் நூற்பாக்களைக் கொண்டு, அவற்றினின்றும் கௌடநெறி வேறுபடுதலைக் காண்போம்.

    6.2.1 செறிவு

    செறிவு எனப் படுவது நெகிழிசை யின்மை (16)

    என்பது தண்டிலயங்கார நூற்பா. வல்லொற்று மிகுந்தும், குறைந்தும், நெடிலெழுத்து மிகுந்தும் நெகிழ்ந்த ஓசையின்றி இறுக்கமாகத் தொடுக்கப்படுவது செறிவு என்பது இந்நூற்பாவின் கருத்து. வைதருப்பநெறி இது.

    நெகிழிசையுடைமையே செறிவு என்பது கௌடநெறியாகும். நெகிழிசையாவது இடையின எழுத்துகள் செறிந்து வருவதாகும்.

    சான்று :

    விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்
    இரவுஉலவா வேலை ஒலியே - வரவுஒழிவாய்
    ஆயர்வா யேஅரிவை ஆருயிரை ஈராவோ
    ஆயர்வாய் வேயோ அழல்

    (விரவலர் = துணைப்பிரிந்தார்
    வாழ்வார் = தனித்திருப்பார்
    ஒழிவாய் = விலகுவாய்
    உலவா = ஓயாத
    வேலை = கடல்
    வரவு = வருதல்
    ஆயர் = தாய்மார், இடையர்
    ஈர்தல் = பிளத்தல்
    வேய்
    = குழலோசை
    அழல் = நெருப்பு)

    ‘இரவெல்லாம் ஓயாமல் அலைகின்ற கடலலையின் ஒலியே! நீ துணையைப் பிரிந்து வாழ்வாரை வருத்தி வெல்ல விழைகின்றாய்; அவரை வெல்வாயோ இரக்கமுற்று விட்டுவிடுவாயோ அறியேன். எனினும் ஒன்று கூறுகிறேன். தாயர்தம் வாய்ச்சொல்லே மகளிரை வருத்துகின்றது. இடையர் ஊதும் குழலோசையும் அவருயிரைப் பிளக்கின்றது. எனவே நின் வருகையை நிறுத்தி ஓய்வு கொள்வாயாக’ என்பது பாடற்பொருள்.

    ‘யரலவழள’ என்னும் இடையின மெய்யும் உயிர்மெய்யும் விரவி வந்து நெகிழிசை கொண்டு செறிவுக்குச் சான்றானது.

    6.2.2 தெளிவு

    கவிஞனால் கருதப்பட்ட பொருள், கற்போர்க்கு வெளிப்படையாகப் புலப்பட அமைவது தெளிவு என்பதாகும்.

    தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே (17)

    என்பது நூற்பா. பலபொருள் பயக்கும் திரிசொற்கள் இடம்பெறாமையே தெளிவுக்குக் காரணம் என்பர் வைதருப்பர்.

    பொருள் புலப்பாடு இல்லாதது எனினும், விசேடமான (சிறப்பான) பொருளை உணர்த்தும் சொல்லாற்றல் உடையதாகத் தொடுக்கப்படுவதே தெளிவு என்பது கௌடநெறி.

    சான்று : 1

    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
    செய்யாமை செய்யாமை நன்று
    (திருக்குறள் : 297)

    பொய்யாமையாகிய ஒழுக்கத்தைத் தொடர்ந்து கடைப் பிடிப்போர், வேறு பிற அறச்செயல்களைச் செய்தொழுக வேண்டிய தேவையில்லை.

    பொய்யாமை (வாய்மை)யைப் பொய்யாமை (நீங்காதபடி) கடைப்பிடித்தல் எனவும் சொல்வரிசைக்குப் பொருள் காணலாம்.

    சான்று : 2

    கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள்
    பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள் - உருக்கமுள்ள
    அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
    உப்புக்காண் சீச்சீ உமி
    (காளமேகம் : 46)

    என்பது கரி எனத் தொடங்கி உமி என முடிக்க வேண்டும் என்றபோது காளமேகப் புலவர் பாடியது.

    என் அத்தைமகள் கரிக்காய் (அத்திக்காய்) பொரித்தாள்; கன்னிக்காய் (வாழைக்காய்) வதக்கினாள்; பரிக்காய் (மாங்காய்) கொண்டு பச்சடி செய்தாள்; விருப்பத்துக்குரிய அப்பைக்காய் (கத்தரிக்காய்) நெய்துவட்டல் செய்தாள். எனினும் அத்தனையிலும் அன்பு மிகுதிபோல் உப்புமிகுதியாகி விட்டாள் என்செய்வது? உமிழவேண்டியதுதான் உணவை.

    சொல்லாற்றலால் இச்செய்யுள் அழகு பெற்றுத் திகழ்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 12:30:40(இந்திய நேரம்)