தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சொல்லுருபுகளின் வகைப்பாடுகள்

  • 3.6 சொல்லுருபுகளின் வகைப்பாடுகள்

    இன்றைய வழக்கில் தமிழில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் பயன்பாட்டில் இருந்து வருவதாக மொழியியலார் கூறுகின்றனர். சொல்லுருபுகள் பற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    இங்கு நாம் காண இருப்பது ஐம்பது சொல்லுருபுகளைப் பற்றி ஆகும். இந்த ஐம்பது சொல்லுருபுகளையும் பின்வரும் நான்கு தலைப்புகளின்கீழ் அடக்கி விடலாம். அவை வருமாறு :

    (1) பெயர்ச்சொல்லுக்குப் பின் - முதல் வேற்றுமையில்
    (2) பெயர்ச்சொல்லுக்குப் பின் - இரண்டாம் வேற்றுமையில்
    (3) பெயர்ச்சொல்லுக்குப் பின் - நான்காம் வேற்றுமையில்
    (4) பெயர்ச்சொல்லுக்குப் பின் - பெயர்ச்சொல் திரிந்த வடிவில்

    3.6.1 பெயர்ச்சொல்லுக்குப்பின் - முதல் வேற்றுமையில்

    இத்தலைப்பின்கீழ் மூலம், வரை, நடு, இடை என்னும் நான்கு சொல்லுருபுகள் வருகின்றன. இவற்றுள் மூலம் என்ற சொல்லுருபு மூன்றாம் வேற்றுமைக் கருவிப்பொருளில் வருகிறது.

    சான்று:

    ‘குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.’

    இச்சொற்றொடரில் மூலம் என்ற சொல் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப்பொருளை உணர்த்தும் ஆல் என்ற வேற்றுமை உருபுக்குப் பதிலாக ஒரு தனிச்சொல்லாக நின்று அதே கருவிப்பொருளை உணர்த்துகிறது.

    அதுபோலவே வரை எனும் சொல்லுருபு ஏழாம் வேற்றுமை இடப்பொருளில் வருகிறது.

    சான்று :

    ‘குமார் வீடு வரை ஓடினான்.’

    இதே வரை எனும் சொல்லுருபு திரிபு அடைந்து வரைக்குமஎன்று நான்காம் வேற்றுமையிலும் (Dative case) வரையில் என்று ஏழாம் வேற்றுமையிலும் (Locative case) வருகிறது.

    சான்று :

    ‘குமார் வீடு வரைக்கும ஓடினான்.’ (-க்கு)

    ‘குமார் வீடு வரையில் ஓடினான்.’ (-யில்)

    நடு, இடை என்னும் இரு சொல்லுருபுகள் இல் என்னும் இடவேற்றுமை உருபுடனேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    சான்று :

    ‘ஊருக்கு நடுவில் ஒரு கோயில் இருக்கிறது.’

    ‘இரு ஊருக்கு இடையில் ஒரு கோயில் இருக்கிறது.’

    நடுவில், இடையில் என்று அமைந்து வரும்இச்சொல்லுருபுகள் இருந்து என்ற ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபுடனும் சேர்ந்து வருவதும் உண்டு. இத்தகைய வேற்றுமையை மொழியியலார் சிலர் Ablative case என்பர்.

    சான்று :

    ‘நடுவிலிருந்து

    ‘இடையிலிருந்து

    3.6.2 பெயர்ச்சொல்லுக்குப் பின் - இரண்டாம்      வேற்றுமையில்

    இங்குக் காணவிருக்கும் சொல்லுருபுகள் பெயர்ச்சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபாகிய (Accusative case marker) இணைந்தவுடன் அதன்பின் வருகின்றன. அவை போல, மாதிரி, ஒட்டி, குறித்து, கொண்டு, சுற்றி, தவிர்த்து, தாண்டி, பற்றி, பார்த்து, விட்டு, வைத்து, நோக்கி போன்றவையாகும்.

    இவற்றுள் மாதிரி எனும் சொல்லுருபு போல போன்ற ஒப்பிடுதலைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் போல எனும் சொல்லுருபு இரண்டாம் வேற்றுமை உருபாகிய என்பதைத் தொடர்ந்து வருகிறது.

    சான்று :

    ‘குமார் பேயைப் போலக் கத்தினான்.’

    அடுத்து மாதிரி எனும் சொல்லுருபு இரண்டாம் வேற்றுமை உருபைத் தொடராமலும் வருவதுண்டு.

    சான்று :

    ‘குமார் பேய் மாதிரி கத்தினான்.’

    மேலே     குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சொல்லுருபுகள் பெரும்பாலும் இரண்டாம் வேற்றுமை உருபைத் தொடர்ந்தே வருகின்றன.

    சான்று :

    ஆற்றை ஒட்டி வீடு இருந்தது

    அப்பாடத்தைக் குறித்துப் பேசினார்

    கத்தியைக் கொண்டு குத்தினான்

    3.6.3 பெயர்ச்சொல்லுக்குப்பின் - நான்காம் வேற்றுமையில்

    இங்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லுருபுகள் நான்காம் வேற்றுமை உருபாகிய கு என்பதைத் (dative case marker) தொடர்ந்து வருகின்றன. அவையாவன :

    அப்பால், அப்புறம், உள், கிழக்கு, கீழ், தெற்கு, பின், பிறகு, முன், மேல், மேற்கு, வடக்கு, பிந்தி, முந்தி.

    சான்று :

    ‘ஆற்றுக்கு அப்பால் ஒரு கிராமம் இருக்கிறது.’

    ‘ஊருக்குக் கிழக்கே ஒரு கடல் இருக்கிறது.’

    மேஜைக்கு மேல் ஒரு புத்தகம் இருக்கிறது.’

    3.6.4 பெயர்ச்சொல் திரிந்த வடிவத்தில்

    அண்டை, அருகு, ஆட்டம், கிட்ட, கீழ், பக்கம், படி போன்ற சொல்லுருபுகள் இடவேற்றுமையை உணர்த்தும்படி வருகின்றன. இச்சொல்லுருபுகளை ஏற்கும் பெயர்ச்சொல், திரிந்த வடிவத்தில் பெரும்பாலும் வருகின்றது.

    சான்று :

    ‘அந்த வீட்டுப் பக்கம் ஒரு ஆலமரம் இருக்கிறது.’

    ‘அந்த வீட்டுக் கிட்ட ஒரு ஆலமரம் இருக்கிறது.’

    இந்தச் சொற்றொடர்களில் வீடு என்னும் பெயர்ச்சொல் பக்கம், கிட்ட என்னும் சொல்லுருபுகளை ஏற்கும்போது வீட்டு என்று திரிவதைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:13:57(இந்திய நேரம்)