தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-மரபு இலக்கணப் பகுப்புமுறை

  • 6.1 மரபு இலக்கணப் பகுப்பு முறை

        தமிழ்ச்சொற்களை மரபு இலக்கண அறிஞர்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைகளாகப் பிரித்தனர். ஆனால் இவ்வாறு பிரிப்பதற்கு முன்பு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என மூன்று வகைகளாகப் பிரித்ததாகத் தெரியவருகிறது. பின்னரே உரிச்சொல் என்ற ஒன்றைச் சேர்த்து நான்கு வகைகளாகப் பிரித்தனர் இலக்கணிகள். இவற்றுள் பெயர்ச்சொல்லும்     வினைச்சொல்லும்     பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன. எனவேதான் தொல்காப்பியர் அவரது நூலில் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் முதலில் தந்துள்ளார்.

        சொல்எனப் படுப பெயரே, வினைஎன்று
         ஆயிரண்டு என்ப, அறிந்திசி னோரே
                 (தொல்.சொல். 158)

     

        அடுத்த நூற்பாவில் இடைச்சொல்லையும் உரிச்சொல்லையும் கூறுகிறார்.

        இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும்
         அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப
                 (தொல். சொல். 159)

        வேற்றுமை உருபு (Case marker) ஏற்க வல்லது பெயர்ச்சொல் (noun) என்றும்,

        சான்று :

        கண்ணன் + ஐ = கண்ணனை

        காலங்காட்டும் உருபுகளை (tense marker) ஏற்பது வினைச்சொல் என்றும் பிரித்தனர்.

        சான்று:

        பாடு + இன் + ஆன் = பாடினான்

        மேலே கூறப்பட்ட பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் தமக்கென அகராதிப்பொருளை உணர்த்தும். அதே சமயத்தில் தமக்கென்று தனிப்பட்ட ஒரு அகராதிப்பொருள் இல்லாமல் தாம் சார்ந்து நிற்கும் பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லின் பொருளை இலக்கண நோக்கில் மாற்றும் இயல்பினதாக விளங்கும் சொற்கள் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.

        சான்று :

         முன்

        பின்

     

        நான்காவதாகக் கூறப்படும் உரிச்சொல், பெயர்ச்சொல்லின் தன்மையையும், வினைச்சொல்லின் தன்மையையும் விளக்கும்முகமாக அமைந்து வருவதாகும். அச்சொற்கள், வரும் இடங்களுக்கு ஏற்றவாறு திரிபு பெறும். உரிச்சொற்களில் பெரும்பாலானவை பண்பு உணர்த்துவனவாகும்.

        சான்று :

        உறு புகழ்

        தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உள்ள உரியியலில் ஏறத்தாழ 120 உரிச்சொற்களைக் கூறியுள்ளார். அவற்றுள் பல பெயரடைகளாகவும் வினையடைகளாகவும் வரும் என்று இக்கால மொழியியலார் சிலர் குறிப்பிடுகின்றனர்.

        சான்றாகத் தொல்காப்பியர் உறு, தவ, நனி என்னும் மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வரும் என்கின்றார். இச்சொற்கள் பெயரடையாகவும் வினையடையாகவும் வரும்.

        சான்று :

        உறுபுகழ் (மிக்க புகழ்) - பெயரடை

        தவச்சிறிது (மிகவும் சிறிது) - வினையடை

        நனி பேதை (மிகவும் பேதை) - பெயரடை

        நனி வருந்தினை (மிகவும் வருந்தினாய்) - வினையடை.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 11:01:13(இந்திய நேரம்)